அழகென்று சொல்லப்படுவதெல்லாம் அழகல்ல

அழகென்று சொல்லப்படுவதெல்லாம் அழகல்ல
Updated on
2 min read

இளம் பெண் ஒருவரோடு பேசிக்கொண்டிருந்தபோது அவள் சார்ந்த வாழ்க்கைச் சூழலை என்னிடம் கொட்டினாள். “எங்க வீட்ல நான் ஆசைப்படுறது எதையுமே சாப்பிட விடுறதில்ல. மாடு கணக்கா இருந்துட்டு இன்னும் என்ன சாப்பாடு கேட்குது, உடம்பைக் கொறை. இல்லன்னா உன்னை எவனுமே கெட்டிக்க மாட்டான். உன் பாடு கஷ்டம்தான். இப்படியெல்லாம் என்னைச் சுற்றி எதிர்மறையான எண்ணங்களை ஏற்படுத்திவிடுறாங்க. நான் குண்டா இருக்கிறதுனால இந்த உலகத்தில வாழவே கூடாதா?, ஏதோ வாழவே தகுதி இல்லாதவ மாதிரி ஏன் என்னைத் தள்ளி வைக்கிறாங்க..?” என்றபடியான வாழ்க்கைக் குமுறல்களைக் கேட்கும்போது குற்றம் எங்கிருந்து ஆரம்பமாகிறது என்பதை இன்னும் ஆழமாகத் தேட வேண்டியிருக்கிறது.

இலக்கணப் பொய்கள்

பருமனோ ஒல்லியோ அதற்கும் மரபுக்கும் தொடர்பு இருக்கிறது. ஒருவரின் உடல்வாகு எப்படி இருந்தாலும், ஆரோக்கியமாக இருக்கிறாரா என்பது மட்டுமே முக்கியம். ஒல்லியா, பருமனா என்கிற பாகுபாடுகளும் பிரிவினைகளும் பலவித மனச் சிக்கல்களை உருவாக்கிவிடுகின்றன. அழகு என்கிற விதிமுறைப் பட்டியலில் ஆண்களைவிடப் பெண்களையே அதிகம் நிறுத்திவைக்கிறது சமூகம். பெண் என்றால் நிறமாக, ஒல்லியாக இருக்க வேண்டும். கூந்தல் புரள வேண்டும். சிரிப்பு, மின்னல் போல் பளிச்சிட வேண்டும். கண்கள் கயல்போல் சுழல வேண்டும். இதுபோல் புறத்துக்கான அளவீடுகள் எல்லாமே ஆணாதிக்கச் சமூகத்தில் மதிப்பெண்களோடு புழங்குகின்றன. வெறும் பளபளக்கும் பொருள் போலவே பெண்ணுடல்களை அணுகும் மனபோக்குகள் அதிகரித்துகொண்டே போவதால், எங்கே நாம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டோமோ என்கிற கவலையில் தன்னை ஒரு அழகுப் பொருளாக மட்டுமே வெளிப்படுத்தும் உந்துதலில் பெண்கள் பலர் தங்கள் மன ஆரோக்கியத்தைக் கோட்டைவிட்டுவிடுகிறார்கள்.

நகைச்சுவை நச்சு

அழகுக்கான மாற்றங்களைத் திரைவடிவில் காட்சிகளாக இன்னும் அதிகமாகப் பார்க்க முடிகிறது. கதாநாயகி வரும்போது பட்டாம்பூச்சிகளையும் இடி மின்னல்களையும் சூறாவளிக் காற்றையும் பின்புலமாகக் காட்டுவது ஏனோ? பெண்ணென்றால் இப்படியான பின்னணிகளோடுதான் உலவிக் கொள்வாள் என்கிற கற்பிதக் கனவுகளோடு சில ஆண்கள் திரைவடிவப் பெண்களைச் சமூகத்திலும் மின்னலடிக்கத் தேடுகிறார்கள்.

கதாநாயகியின் தோழிகளாக வரும் துணைக் கதாபாத்திரங்களை எப்போதுமே அழகில், தரத்தில் குறைந்தவர்களாகவே காட்டும் போக்கும் நீடித்துக்கொண்டே இருக்கிறது. நிறத்தில் குறைந்தவளோ குள்ளமானவளோ உடல் பருமன் கொண்டவளோ கதாநாயகனை சைட் அடித்தால் அவன் தற்கொலை செய்யும் அளவுக்கு அலறுவதைப் போன்ற காட்சிகளைப் பெண்களும் பார்த்துச் சிரிக்கவே செய்கிறோம். சமூகம் கட்டமைத்து வைத்திருக்கும் பெண்ணுக்கான உடல் அளவீடுகளில் முன் பின் முரண்பட்டிருக்கும் பெண்களைக் கிண்டல் செய்வதுபோல் எடுக்கப்படும் காட்சிகள் கட்டாயமாகத் தவிர்க்கப்பட வேண்டியவையே. ஒரு திரைப்படத்தில் உயரம் குறைவான ஒரு பெண்ணைப் பெண் பார்க்க வருவதுபோல் ஒரு காட்சி வரும். கூடைக்குள் அப்பெண்ணை அடைத்துவைக்க முயல்வார் ஒரு சிரிப்பு நடிகர். இன்னொரு படத்தில் இது போலவே நிறம் குறைந்த பெண்ணுக்குச் சாயம் பூசி முதலிரவுக்கு அனுப்பி வைத்து அவஸ்தைப்படுவார் அவரின் அண்ணன். இப்படியாகச் சினிமாக் காட்சிகளை நுட்பமாகப் பார்க்கும்போது பெண்களை மட்டுமல்ல; ஆண்களையும் அவரவர்களின் தோற்றங்களை வைத்து நையாண்டி செய்யும் காட்சிகளைத் தவறுதலாக நகைச்சுவை என நினைத்து சிரித்துக்கொள்கிறோம்.

இயல்பே அழகு

அன்றாட அடிப்படை வாழ்வுக்குப் போராடிக்கொண்டிருக்கும் காய்கறி வியாபாரிக்கோ மீன் விற்பனையாளருக்கோ தார்ச்சாலையில் கீல் ஊற்றும் பெண்ணுக்கோ, விவசாய நிலச்சகதியில் காலூன்றும் பெண்ணுக்கோ சமூக அழுக்குகளைச் சுத்தம் செய்யும் பெண்ணுக்கோ இடை சிறுக்கவைப்பது பற்றி கவலை இருக்காது. மேனியை மினுக்க வைக்க மெனக்கெ முடியாது. அவர்களது நிறம் மங்கலாக இருக்கும். ஆனால், போராடிக்கொண்டுதான் இருப்பார்கள். இப்படிப்பட்ட யதார்த்த அழகு கொண்ட பெண்களை எந்தச் சாயப்பூச்சுமின்றித் திரையில் காட்ட மாட்டார்களா என்று பல நாள்கள் நினைப்பேன்.

எந்தப் பெருந்துன்பத்திலும் தன் வல்லமையை இழக்காமல் இருப்பாளே அவளிடம் கிடக்கிறது மன அழகு. எவ்வளவு முறை வீசியெறியப்பட்டாலும் விதைபோல் முளைப்பாளே அவளிடம் கிடக்கிறது வாழ்வியல் அழகு. நளினம் என்கிற பொய்யைத் தகர்த்துவிட்ட இந்தப் பெண்கள் பெரும்பாலும் எவர் கண்களுக்கும் புலப்படாத காட்டுப்பூக்களாக வாழ்க்கையின் வாசத்தை இச்சமூகத்தில் பரப்புவார்கள். இவர்களிடம்தான் இருக்கிறது அசாத்திய அழகு! அதைக் கண்டுக்கொள்ளும் கண்கள் பேறுபெற்றவையே!

- மலர்வதி

கட்டுரையாளர், நாவலாசிரியர்.

malarvathi26@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in