மீண்டு (ம்) வந்த நட்சத்திரம்!

மீண்டு (ம்) வந்த நட்சத்திரம்!
Updated on
1 min read

‘நான் அடுத்த உசேன் போல்ட்டோ மைக்கேல் ஃபெல்ப்ஸோ அல்ல. நான்தான் முதல் சிமோன் பைல்ஸ்’ என்று 2016ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பல்வேறு சாதனைகளைப் படைத்த பிறகு அமெரிக்காவின் சிமோன் பைல்ஸ் கூறியதை யாராலும் மறக்க இயலாது.

ஒலிம்பிக் போட்டிகளில் 4 தங்கம் உள்பட 7 பதக்கங்களும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் 19 தங்கப் பதக்கங்களையும் பெற்று, ஜிம்னாஸ்டிக்ஸ் உலகில் வலுவான வீராங்கனையாகத் திகழ்ந்தவர் சிமோன். 2020ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில், ஏழாவது பதக்கமான வெண்கலத்தை வென்றபோது, தன் உடலும் மனமும் சேர்ந்து ஒத்துழைக்கவில்லை என்பதை உணர்ந்தார். ஜிம்னாஸ்டிக் வீரர்களுக்கு வரும் டிவிஸ்டீஸ் (twistie) பாதிப்பு (திருப்பும்போதும் சுற்றும்போதும் அசைக்கும்போதும் உடலை நிலைநிறுத்த முடியாத நிலை) அவருக்கு ஏற்பட்டிருந்ததால், அடுத்து வந்த முக்கியமான போட்டிகளில் இருந்து விலகினார் சிமோன்.

தனது பிரச்சினையை வெளியே சொன்ன வீராங்கனை என்று ஒருபக்கம் பாராட்டுகளும் விளையாடாமல் தேசத்துக்குத் துரோகம் இழைத்துவிட்டார் என்று இன்னொரு பக்கம் விமர்சனங்களும் எழுந்தன.

இரண்டு ஆண்டுகள் புகழ் வெளிச்சத்திலிருந்து ஒதுங்கி இருந்த சிமோன், கடந்த மாதம் அமெரிக்காவில் நடைபெற்ற ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகளில் பங்கேற்று, அனைத்துப் பிரிவுகளிலும் வெற்றிவாகை சூடினார். இதன் மூலம் ’8 All around titles’ வென்ற முதல் அமெரிக்க ஜிம்னாஸ்ட் என்கிற சாதனையைப் படைத்திருக்கிறார் சிமோன்.

“என் மேல் எனக்கு நம்பிக்கை இருந்தது. ஆனால், மக்கள் என் மீது இவ்வளவு நம்பிக்கையும் அன்பும் வைத்திருப்பார்கள் என்று நினைக்கவில்லை. 732 நாள்களுக்குப் பிறகும் என்னை மறக்காமல், அன்பான வார்த்தைகளாலும் போஸ்டர்களாலும் உற்சாகப்படுத்திய மக்களைக் கண்டு என் மனம் நெகிழ்ந்துவிட்டது. இப்போதும் தெரபி எடுத்துக்கொண்டுதான் இருக்கிறேன். பெரிய இடைவெளிக்குப் பிறகு கிடைத்த இந்த ஆதரவுக்கு நன்றி” என்று கூறிய சிமோன், மீண்டும் தான் யார் என்பதை நிரூபித்துவிட்டார்.

கடந்த இரண்டு ஆண்டுகள் சிமோனுக்கு மிகச் சிக்கலான காலகட்டம். சிகிச்சை எடுத்துக்கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னை மீட்டெடுத்தார். ஜொனாதன் ஓவன்ஸ் என்கிற கால்பந்து வீரரைக் காதலித்தார். அவர் கொடுத்த நம்பிக்கையால் மீண்டும் பயிற்சிகளை மேற்கொண்டார். 2022ஆம் ஆண்டு திருமணமும் செய்துகொண்டார்.

இருவரும் விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்கள் என்பதால், எப்போதும் ஒருவரை இன்னொருவர் பாராட்டி, உற்சாகப்படுத்திக்கொள்கிறார்கள். விளையாட்டு நிமித்தமாக வெவ்வேறு இடங்களில் மாதக்கணக்கில் பிரிந்திருந்தாலும் சேர்ந்திருந்த நாள்களில் எடுத்த படங்களை வெளியிட்டு, அன்பை ஆழப்படுத்திக்கொள்கிறார்கள். இந்த அன்பும் சிமோனின் கடின உழைப்பும் இன்னும் பல உயரங்களுக்கு அவரை அழைத்துச் செல்லும்!

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in