

உலகம் முழுவதும் திரைப்படத் துறையில் நடிப்பு நீங்கலாக, பெண்களின் பங்கேற்பு மிகக் குறைவாகவே இருக்கிறது. இதில் ஹாலிவுட்டும் விதிவிலக்கு அல்ல. அப்படிப்பட்ட திரைப்படத் துறையில் 100 கோடி அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான வசூலை வாரிக்குவித்துப் புதிய சரித்திரத்தை எழுதியிருக்கிறார் இயக்குநர் கிரெட்டா கோவிக்! கடந்த மாதம் வெளியான ‘பார்பி’ திரைப்படத்தின் மூலம் இந்தச் சாதனையைச் செய்திருக்கிறார் இவர்.
இதுவரை 28 திரைப்படங்கள் மட்டுமே இந்தச் சாதனையைப் படைத்திருக்கின்றன. 28 திரைப்படங்களையும் ஆண்கள்தாம் இயக்கியிருக்கின்றனர். 29ஆவது திரைப் படமாக பார்பியும் அதை இயக்கிய கிரெட்டாவும் ’பில்லியன் டாலர் கிளப்’பில் இணைந்திருக்கிறார்கள்!
யார் இந்த கிரெட்டா?
கலிஃபோர்னியாவில் பிறந்த கிரெட்டாவுக்குச் சிறுவயதில் நடனம் கற்றுக்கொள்வதிலும் கையில் கிடைத்த புத்தகங்களையெல்லாம் படிப்பதிலும் ஆர்வம் இருந்தது. பின்னர் வாள் வீச்சு கற்க ஆரம்பித்தாலும் கட்டணம் செலுத்த இயலாமல் அதைக் கைவிட வேண்டியதாயிற்று. இசையில் பட்டம் பெற விரும்பிய கிரெட்டா, ஆங்கிலத்திலும் தத்துவத்திலும் பட்டம் பெற்றார். நாடகம் எழுதுவதில் ஆர்வம் இருந்ததால், அந்தத் துறைக்குள் நுழைந்தார். எழுதவும் நடிக்கவும் வாய்ப்புகள் வந்தன. அப்படியே ஹாலிவுட்டிலும் சிறிய கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஒருகட்டத்தில் மனச்சோர்வு அடைந்தார். சிறு இடைவெளிக்குப் பிறகு இயக்குநரும் திரைக்கதை யாசிரியருமான நோவா பாம்பக்கின் அறிமுகம் கிடைத்தது. அவருடன் சேர்ந்து நாடகங்களை எழுதினார். அவரது திரைப்படங்களிலும் நடித்தார். இருவரும் வாழ்க்கையிலும் இணைந்தார்கள்.
ஹாலிவுட்
ஹாலிவுட்டில் இன்றளவும் பெண்களின் பங்கேற்பு குறைவாகவே இருக்கிறது. அதிலும் ஆண் இயக்குநர்களின் திரைப்படங்களில் வெகு குறைவாகவே பெண்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்படுகின்றன. பெண் இயக்குநர்களே பெண்களுக்கான வாய்ப்புகளை ஓரளவுக்கு வழங்கி வருகிறார்கள். இந்த நிலையில் ஹாலிவுட் திரைப்படங்களில் இன்னொருவருடன் சேர்ந்து எழுதவும் இயக்கவும் ஆரம்பித்தார் கிரெட்டா.
லேடி பேர்ட்
2017ஆம் ஆண்டு கிரெட்டா தனியாக இயக்கிய முதல் திரைப்படம் ’லேடி பேர்ட்’ வெளியானது. கணவருக்கு வேலை போன பிறகு, தனியாளாகக் குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளைச் சமாளிக்க வேண்டிய சூழல் மரியானுக்கு. செவிலியர் பணியையும் குடும்பத்தையும் பதின்ம வயது மகளையும் சமாளித்துக்கொண்டிருக்கிறார். மகள் கிறிஸ்டின் ’லேடி பேர்ட்’ என்கிற பெயரில் தன் லட்சியத்தை நோக்கிப் பயணிக்கிறார். மரியானுக்கும் கிறிஸ்டினுக்கும் முரண்பாடுகள் வருகின்றன. இறுதியில் அம்மாவைப் புரிந்துகொண்டாரா கிறிஸ்டின் என்பதே படத்தின் கதை. ஒரு கோடி அமெரிக்க டாலர்களில் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம், 7.9 கோடி அமெரிக்க டாலர்களை வசூலித்துக் கொடுத்தது.
லிட்டில் விமன்
1860ஆம் ஆண்டு லூயிஸா மே ஆல்காட் எழுதிய ‘லிட்டில் விமன்’ என்கிற கிளாசிக் நாவலைத் தழுவி, 2019ஆம் ஆண்டு அதே பெயரில் திரைக்கதை எழுதி, இயக்கினார் கிரெட்டா. 160 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சூழலை அருமையாகத் திரைக்குக் கொண்டுவந்திருந்தார். எந்தச் சூழலிலும் எவ்வளவு போராட்டத்துக்குப் பிறகும் குடும்பம் முக்கியமானது என்பதைச் சில பெண்களின் மூலம் சொல்லியிருந்தார். மெரில் ஸ்ட்ரீப், எம்மா வாட்சன் போன்ற பிரபல ஹாலிவுட் கலைஞர்கள் இந்தத் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள். 4 கோடி அமெரிக்க டாலர்களில் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம், 21.81 கோடி அமெரிக்க டாலர்களைக் குவித்தது.
‘லேடி பேர்ட்’, ‘லிட்டில் விமன்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் அகாடமி, கோல்டன் குளோப் விருதுகளுக்குப் பல பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டன. இவற்றில் சிறந்த திரைப்படமாக கிரெட்டாவின் இரண்டு திரைப்படங்களும் பரிந்துரைக்கப்பட்டன. ’லேடி பேர்ட்’ திரைப்படத்துக்காக கிரெட்டா சிறந்த இயக்குநராகப் பரிந்துரை செய்யப்பட்டார். இப்படி வசூலிலும் விருதுகளிலும் இரண்டே திரைப்படங்களில் தன் திறமைகளைக் காட்டி, எல்லாரையும் ஆச்சரியப்படுத்தினார் கிரெட்டா.
பார்பி
பெருந்தொற்றுக் காலத்துக்குப் பிறகு, புகழ்பெற்ற வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்துக்காக ’பார்பி’ திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு வந்தது. கணவருடன் இணைந்து திரைக்கதை எழுதினார். தனியாகப் படத்தை இயக்கினார். வார்னர் பிரதர்ஸின் நூற்றாண்டுக் கால வரலாற்றில், பெரும் வசூலை வாரிக் குவித்த படமாக பார்பி அமைந்துவிட்டது!
பார்பி லேண்டில் வசிக்கும் பெண்கள் அனைவருமே வெவ்வேறு விதமான பார்பிகள்தாம். பார்பியும் கென்னும் பிங்க் வண்ண மாய உலகிலிருந்து மனிதர்கள் வசிக்கும் நிஜ உலகத்துக்கு வருகிறார்கள். அங்கே அவர்களுக்குக் கிடைக்கும் அனுபவங்களே கதை. கிரெட்டா தன்னுடைய முந்தைய படங்களைப் போலவே பார்பியிலும் பெண்ணியச் சிந்தனைகளையும் நகைச்சுவையையும் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்.
வரவேற்பும் எதிர்ப்பும்
பார்பி வெளியாவதற்கு முன்பே எதிர்ப்பு களும் வலுக்க ஆரம்பித்துவிட்டன. இந்தத் திரைப்படம் சீன கம்யூனிசக் கொள்கையை விதைக்கிறது என்று வலதுசாரிகள் தாக்கினார்கள். பெண்ணியச் சிந்தனைகளை வலுவாகச் சொன்னதால், சில நாடுகள் திரைப்படத்துக்குத் தடைவிதித்தன. பெண் இயக்கிய திரைப்படம், பெண்களால் பெண்களுக்காக எடுக்கப்பட்ட திரைப்படம் என்றெல்லாம் பாலினப் பாகுபாடுகள் நிறைந்த கருத்துகளையும் கிரெட்டா எதிர்கொண்டார். “நான் நிஜ வாழ்க்கையிலிருந்துதான் திரைக் கதையை எழுத ஆரம்பிப்பேன். எதிர்ப்புகள் குறித்து நான் கவலைப்படவில்லை. வெற்றி கிடைக்கும்போது எதிர்ப்புகள் மாயமாகிவிடும்” என்று நிதானமாகச் சொன்னார் 40 வயது கிரெட்டா.
அவர் சொன்னது போலவே, சுமார் 14 கோடி அமெரிக்க டாலர்கள் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பார்பி திரைப்படம், உலகம் முழுவதும் 127.9 கோடி அமெரிக்க டாலர்களை வசூலித்து, புதிய சரித்திரத்தை எழுதியிருக்கிறது.
தொடர்புக்கு: sujatha.s@hindutamil.co.in