

சந்திரயான் 3 விண்கலத்தின் தரையிறக்கிக்கலம் (லேண்டர்) நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாகத் தரையிறக்கப்பட்டதன்மூலம் உலக சாதனை படைத்திருக்கிறது இந்தியா. இந்த வெற்றியில் 54 பெண் விஞ்ஞானிகளுக்கும் பங்கு உண்டு என்பது பெருமிதம் தரும் வேளையில் சூரியனை ஆராய்வதற்காக நேற்று (செப்டம்பர் 2) விண்ணில் ஏவப்பட்ட ஆதித்யா எல் 1 விண்கலம் திட்டத்தின் இயக்குநராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த நிகர் ஷாஜி செயல்பட்டுவருகிறார். தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த இவர் நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் இளநிலை பொறியியல் படிப்பை முடித்துள்ளார். பிர்லா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் நிறுவனத்தில் மேற்படிப்பை முடித்த இவர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் தற்போது பணிபுரிந்துவருகிறார்.
வரலாற்றுச் சாதனை
ரயில்வே துறையில் முக்கிய முடிவுகளை எடுக்கும் உயர் அதிகார அமைப்பான ரயில்வே வாரியத்தின் தலைவராகவும் தலைமைச் செயல் அதிகாரியாகவும் ஜெயா வர்மா நியமிக்கப்பட்டுள்ளார். 1905இல் அமைக்கப்பட்ட ரயில்வே வாரியத்தின் 118 கால வரலாற்றில் இந்தப் பதவியை வகிக்கும் முதல் பெண் என்கிற பெருமையை ஜெயா பெற்றுள்ளார். அலகாபாத் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற இவர், 1988இல் ரயில்வே துறையில் பணியில் சேர்ந்த இவர் வடக்கு ரயில்வே, தென் கிழக்கு ரயில்வே, கிழக்கு ரயில்வே ஆகிய மூன்று மண்டலங்களிலும் பணிபுரிந்துள்ளார். அக்டோபர் 1 அன்று பணி நிறைவு பெறவிருந்த நிலையில் ரயில்வே வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பதவியில் ஓராண்டுக்கு இவர் நீடிப்பார். ஒடிசாவின் பாலாசோர் மாவட்டத்தில் 291 பேரைப் பலிவாங்கிய கோர ரயில் விபத்து குறித்த தகவல்களை ஊடகங்களுக்கு விளக்கியதில் ரயில்வேயின் முகமாகச் செயல்பட்டார். வங்கதேசத்தின் டாக்காவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் ரயில்வே ஆலோசகராக இவர் பணியாற்றியபோதுதான் கொல்கத்தா - டாக்கா இடையிலான மைத்ரி ரயில் சேவை தொடங்கப்பட்டது.