சுங்குடிச் சேலையின் முடிச்சும் இயற்கைச் சாயமும்

சுங்குடிச் சேலையின் முடிச்சும் இயற்கைச் சாயமும்
Updated on
2 min read

மதுரையின் பாரம்பரிய அடை யாளங்களுள் ஒன்று சுங்குடிச் சேலை. கைகளால் முடிச்சு போட்டு ஒரு டிசைனை உருவாக்கி, அதற்குச் சாயம் போட்டு இந்தச் சேலைகள் வண்ணமையமாக உருவாக்கப்படுகின்றன. 100 சதவீதம் கைவினைக் கலைஞர்களின் கைகளால் உருவாக்கப்படும் இந்தச் சேலைகளுக்குப் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மதுரை சுங்குடி உற்பத்தி யாளர் சங்கச் செயலாளர் ஏ.கே.ரமேஷிடம் பேசுகையில், “நாங்கள் கடந்த ஆறு தலை முறைகளாகச் சுங்குடிச் சேலை உற்பத்தியில் ஈடுபட்டிருக்கிறோம். நெசவில் சிறந்து விளங்கிய எங்களுடைய மூதாதையர்கள் மதுரையை ஆண்ட திருமலை நாயக்க மன்னரால் இங்கே அழைத்துவர‌ப்பட்டனர். எங்களது நெசவின் நேர்த்தியைப் பார்த்த மதுரை மக்கள் எங்களை ‘பட்னுல்காரர்கள்’ (பட்டு நெசவாளர்கள்) என அழைத்தனர்.

இயற்கை முறையில்...

ஆரம்பத்தில் வானில் மின்னும் நட்சத்திரங்களைப் பார்த்துச் சுங்குடிச் சேலைகளுக்கான வடிவமைப்பை உருவாக்கி யுள்ளனர். வெண்மையான பருத்தித்துணியில் முடிச்சுகளைப் போட்டு, அதன் பின்னர் சாயம் ஏற்றியுள்ளனர். பெண்கள் நெசவில் ஈடுபட்ட பின்னர் ரங்கோலி கோலத்தைப் போன்ற வடிவமைப்புகளை அறிமுகப்படுத்தினர்.

தொடக்கக் காலத்தில் மஞ்சள் தூள், பச்சை இலைகள், மரப்பட்டைச் சாறு போன்ற இயற்கையான சாயப் பொருள்கள் பயன்படுத்தப்பட்டன. என் தாத்தா காலத்தில் மஞ்சள், மல்லிகை, துளசி, மாதுளை, செம்பருத்தி ஆகிய இயற்கைச் சாயங்கள் பயன்படுத்தப்பட்டன. சாயமேற்றும்போது முடிச்சுகளுக்கு மட்டும் சாயமேற்றாமல் இருந்துள்ளனர். பின்னர் முடிச்சுகளை அவிழ்த்தபோது சாயமிடப்படாத வெண்மை நிறத் திட்டுகள் நிறைந்த வடிவமைப்பைக் கண்டு வியப்படைந்துள்ள‌னர். இந்தச் செயல்முறை அனைவரும் பின்பற்ற வேண்டிய மாதிரிகளை அமைத்தது.

காலப்போக்கில் கற்கள், வெந்தயம், கடுகு போன்றவற்றைப் பயன்படுத்தி வெவ்வேறு அளவுகளில் புள்ளிகளை வைத்தனர். இந்தச் சேலைகள் தரமான பருத்தித் துணியால் மட்டுமே நெய்யப்பட்டன. பின்னர் பட்டு இழைகளும் சேர்க்கப்பட்டுச் சுங்குடிச் சேலை மெருகேற்றப்பட்டது. இந்தச் சேலைகளை வெறும் முடிச்சு, சாயம் எனச் சுருக்கிவிட முடியாது. அதில் நல்ல மையப்பகுதியும் கரையும் இருக்கும். அந்தக் கரைகளில் மெல்லிய ஜரிகையும் இருக்கும்.

பட்னூல்காரர்களின் கதை

என் அப்பா அய்யாலு குப்புசுவாமி சுங்குடிச் சேலை நெய்வதில் சிறந்து விளங்கினார். நான் கல்லூரியில் படித்தபோது, ‘உன்னுடைய படிப்பு உனக்கு நிறைய சம்பாதிக்கக் கற்றுக்கொடுக்கலாம். ஆனால், நீ நம் குடும்பத்தின் பரம்பரைத் தொழிலை உரிய முறையில் நடத்தினால் நிறைய சம்பாத்தியமும் கிடைக்கும். இந்தத் தொழிலும் முன்னேறும்’ என அறிவுரை கூறினார். அவரது வார்த்தைகளுக்குப் பிறகே நான் இந்தத் தொழிலில் இறங்கினேன். இப்போது நானும் என் மனைவி வசுமதியும் இணைந்து சகம்பரி கிராஃப்ட்ஸ் என்ற நிறுவனத்தை நடத்திவருகிறோம்.

1950களில் மதுரையில் சுமார் 50 ஆயிரம் பேர் சுங்குடிச் சேலை தயாரிப்பில் ஈடுபட்டிருந்தனர். ஆண்களும் பெண்களும் அரட்டை அடித்துக்கொண்டே சாயமிடுவர். டி.வி., செல்போன் போன்று கவனச் சிதறல்கள் இல்லாத அந்நாள்களில் மக்கள் மிகுந்த கலைநயத்துடன் சுங்குடிச் சேலையை உருவாக்கினர். ராத்திரி பகலாக அரும்பாடு பட்டு உருவாக்கிய சேலைகளுக்குப் போதிய வரவேற்பும் வருமானமும் கிடைக்கவில்லை. இதனால், அவற்றை உருவாக்கியவர்கள் விரக்தி அடைந்து இந்தத் தொழிலைவிட்டு வெளியேறிவிட்டனர்.

என் பாட்டி நாகலம்மாள் ஒரு நாளுக்கு 15 ஆயிரம் முடிச்சுகள் போட்டதாகச் சொல்வார். ஒரு சேலையில் வடிவமைப்பைப் பொறுத்து 3 ஆயிரம், 4 ஆயிரம் முடிச்சுகள் இருக்கும். அப்படியென்றால் அவர் ஒரு நாளுக்கு நான்கைந்து சேலைகளுக்கு முடிச்சுகள் போட்டுள்ளார். முன்பெல்லாம் நெசவு, முடிச்சு, சாயம், உலர்த்துதல் ஆகிய பணிகளை முடித்து ஒரு சேலையை முடிக்கப் பத்து நாள்கள் ஆகும். இன்றைக்கு ஆள் பற்றாக்குறையால் கைத்தறியில் ஒரு சேலையை முடிக்க 30 நாள்கள் ஆகின்றன” என்று வருத்தத்தோடு பகிர்ந்துகொண்டார்.

சமூக வலைதளம் மூலம் பிரபலமாக்கலாம்

மாதுர்யா கிரியேஷன்ஸ் நிறுவனர் பாரதி ஹரிஷ் கூறுகையில், “கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டுமென்றால் உலகளாவிய சந்தையை ஈர்க்க வேண்டும். பாரம்பரிய பெருமையுடன் புதிய அழகியலை இணைக்க வேண்டும். இந்தியாவில் சுமார் 36 வகையான பாரம்பரிய நெசவு ஆடைகள் இருக்கின்ற‌ன. மதுரையின் அசல் சுங்குடி வடிவங்களைச் சமூக வலைதளங்கள் மூலம் பிரபலப்படுத்த முடியும். இதை ஊக்குவிக்க அதன் கலாச்சாரத்தையும் வரலாற்றையும் புதிய தலைமுறையிடம் கொண்டுசேர்க்க வேண்டும். டெல்லி, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, சென்னை போன்ற இடங்களில் கண்காட்சி நடத்தி கவனத்தை ஈர்க்கலாம்” என்கிறார் பாரதி.

- ரஞ்சனி கோவிந்த்

தமிழில்: அன்னபூர்ணி சேது

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in