ஆண்கள் பெண்கள் குழந்தைகள் - 13: நாம் எந்த வகை பெற்றோர்?
இங்கே யாரும் பெற்றோராகப் பிறப்பதில்லை. எல்லாருமே குழந்தைகளாகத்தான் பிறக்கிறோம். நாம் பிள்ளை பெறும் வரையில் எவற்றைக் கற்றுக்கொள்கிறோமோ அவைதான் நமக்குத் தெரியும். பெற்றோர் என்றானவுடன் நாம் அத்தனையும் கற்றுத்தெளிந்தவர்கள்போல் நடந்துகொள்கிறோம் என்பதுதான் வருந்தத்தக்கது. பிள்ளைகள் வளர வளர நாமும் பெற்றோர்களாக வளர்கிறோம் என்பதுதான் உண்மை. அப்படி வளர வேண்டும் என்பதுதான் நியதி. அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவும் ஆயிரம் இருக்கும். குழந்தைகளும் வளர வேண்டும், நாமும் வளர வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?
அவர்களை நம் நண்பர்களாகப் பாவிக்க வேண்டும். அவர்களுடன் விளையாட வேண்டும், உரையாட வேண்டும், பகிர்ந்துண்ண வேண்டும், புத்தகங்கள் படிக்க வேண்டும், விவாதிக்க வேண்டும். அவர்கள் வயதுக்கு ஏற்ப நம் வாழ்வில் நடப்பதை அவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். அவர்கள் வாழ்வில் என்ன நடக்கிறதென்று தெரிந்துகொள்ள வேண்டும்.
உரையாடல் தேவை
நான் பெரியவன்/ள், நீ சிறியவன்/ள் என்பது போன்ற பேதங்களைத் தவிர்க்க வேண்டும். கோல் எடுப்பதற்கு பதில் நட்பைக் கையிலெடுத்தல் நலம். பள்ளி செல்லத் தொடங்கும் காலம் முதல் அவர்கள் பள்ளியிலிருந்து வந்ததும் சோறு போடுவதுடன், பாடம் படிக்க வைப்பதுடன் சிறிது நேரம் ஒதுக்கி உரையாடவேண்டும். அன்றைய தினம் நம் வீட்டில் அல்லது அலுவலகத்தில் நடந்த எதாவது ஓரிரண்டு சுவாரசியமான நிகழ்வுகளை அவர்களுடன் பகிர்ந்துவிட்டு, அவர்களின் நாள் எப்படிப் போனது என்று கேட்டால், அன்று நடந்த விஷயங்களைப் பிள்ளைகள் நம்மிடம் மகிழ்வுடன் பகிர்வார்கள். அது சாதாரண விஷயமாக இருக்கலாம், நமக்குச் சுவாரசியம் இல்லாத நிகழ்வாக இருக்கலாம், இருந்தாலும் கேட்போமே. அதைவிட நமக்கு வேறு எது முக்கியம்?
இப்படிச் சிறு வயதிலிருந்து ஒரு பழக்கத்தை ஏற்படுத்திவிட்டால், அவர்கள் வளர வளர அவர்கள் வாழ்வில் நடப்பதை யெல்லாம் நம்மிடம் அவர்களாகவே வந்து பகிர்ந்துகொள்வார்கள். நாம் தனியாக அவர்களைக் கண்காணிக்க வேண்டிய அவசியம் இருக்காது. இவ்வளவையும் செய்யும்போது நாம் ஒன்றை நினைவில்கொள்ள வேண்டும். அவர்கள் சொல்வதில் அவர்கள் ஏதாவது தவறாக நடந்துகொண்டது தெரியவந்தால், உடனே கோபப்பட்டோ, நிதானம் இழந்தோ அவர்களைக் கண்டிக்கக்கூடாது.
அப்படி நாம் ஒருமுறை செய்து விட்டால், அவர்கள் நம்மிடம் எதையும் பகிர்ந்துகொள்ளவது நின்றுவிடும். இல்லை, உண்மைகள் வெளிவராது. இங்கேதான் நட்பென்ற பண்பு வேலை செய்ய வேண்டும். அவர்கள் சொல்வதை முழுமையாகக் கேட்டுவிட்டு, நமக்குச் சரியில்லை என்று தோன்றிய அவர்களது செயலை ஏன் அப்படிச் செய்தார்கள், எந்தச் சூழலில் அதைச் செய்தார்கள், அப்படிச் செய்ய அவர்களுக்கு என்ன காரணம் இருந்தது, அதை எப்படிச் சரியென நினைத்தார்கள் என்று நிதானமாக விவாதத்தைத் தொடங்க வேண்டும். அவர்கள் செய்தது தவறென ஏன் நாம் நினைக்கிறோம் என்கிற நம் தரப்பு வாதத்தைச் சொல்லி, அவர்கள் செய்தது தவறுதான் என்கிற புரிதலைக் கொண்டு வரலாம். அப்படிச் செய்யும்போது, இனி அதே செயலை மீண்டும் செய்யாமல் இருப்பதற்கு அது வழிவகுக்கும்.
வேண்டாமே ஒப்பீடு
பிள்ளைகளிடம் நாம் செய்யக் கூடாதவை என்று சில உண்டு. ஆனால், பெருவாரியான பெற்றோர்கள் இவற்றைச் செய்து பிள்ளைகளிடம் மனரீதியான பாதிப்புகளை உருவாக்குகிறோம். ஒன்று ஒப்பீடு. மற்ற பிள்ளைகளுடன் நம் பிள்ளையை ஒப்பிட்டுப் பாராட்டவும் வேண்டாம்; தூற்றவும் வேண்டாம். ஒப்பிட்டுப் பாராட்டும்போது மற்றவரைத் தனக்குக் கீழே என்று கணிக்கவும், தூற்றும்போது தாழ்வு மனப்பான்மை வளரவும் கூடும். ஆனால், நாம் இதை மிகவும் சாதாரணமாகச் சிறிதுகூடச் சிந்தனையின்றி எப்போதும் செய்து கொண்டே இருக்கிறோம்.
இதை நாம் ஏதோ நல்ல உதாரணம் காட்டுவதாக நினைத்துக்கொண்டுகூடச் செய்யலாம். உன்னால் முடியும் என்று சொல்லி வளர்ப்போம், தவறில்லை. அவனால் முடிகிறது உன்னால் முடியாதா என்கிற கேள்வி அவசியமில்லாதது. தன்னிடம் ஏதோ குறை என்றோ, தன்னால் முடியாது என்றோ நினைத்து இன்னும் அந்தச் செயலுக்கும் பிள்ளைக்குமான இடைவெளி அதிகமாவதற்கு நிறைய சாத்தியம் உள்ளது. இது மட்டுமல்லாமல், தன் பெற்றோர்களுக்குத் தன்னைவிட அந்தப் பிள்ளையைத்தான் அதிகம் பிடிக்கிறதோ என்கிற சந்தேகமும் ஏக்கமும் சுயபச்சாதாபமும் ஏற்படவும் சாத்தியம் இருக்கிறது. நம் கல்வி முறைகளே ஒப்பீட்டு முறையில்தான் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இதையே நாமும் செய்ய வேண்டுமா?
ஒவ்வொரு உயிரும் தனித்தன்மையுடனும் திறனுடனும் இருக்கும் என்பதை நாம் உணர வேண்டும். எல்லோரும் ஒரேபோல் இருப்பதில்லை. எல்லாப் பெற்றோரும் ஒரேமாதிரியா இருக்கிறோம்? பிள்ளைகள் வளர்ந்து இதேபோல் நம்மை மற்ற பெற்றோருடன் ஒப்பிட்டுக் குறை கூற முற்பட்டால், நம்மால் அதைச் சாதாரணமாகக் கடக்க இயலுமா?
குறைகூறுவது தவறு
இன்னொன்று, மற்றவர்கள் முன் பிள்ளைகளை அவமானப்படுத்துவது. இது கூடவே கூடாது. எந்தக் காரணமும் இந்தச் செயலை நியாயப்படுத்தாது. அவன்/ள் சரியாகப் படிக்க மாட்டாள், சொன்ன பேச்சு கேட்கமாட்டான்/ள், அது இது என்று எந்தக் காரணம் கொண்டும் மற்றவர் முன்னிலையில் பிள்ளைகளைக் குறை கூறி அவர்களை கூனிக்குறுக வைக்கவே கூடாது. இப்படிச் செய்வதால் தாழ்வு மனப்பான்மை வரலாம். அவர்களின் சுயமரியாதை பாதிக்கப்படலாம். இதனால் அவர்களுக்கு நம்மேல் காழ்ப்புணர்வுகூட ஏற்படலாம். ஒவ்வொரு மனிதருக்கும், எவ்வளவு வயதானவராக இருந்தாலும், சுயமரியாதை என்பது இன்றியமையாதது. அதை நம் பிள்ளைகள் இழக்க நாமே காரணமாகக் கூடாது. இது வருங்காலத்தில் அவர்களுக்கு மனரீதியான கடுமையான உளைச்சல்களை ஏற்படுத்தும். தன்னை மதிக்கத் தெரியாத, சுயமரியாதை இழந்து வாழும் எந்த மனிதராலும் மற்றவரை மதிக்கவே இயலாது. மதிப்பதுபோல் நடிக்க வேண்டுமானால் செய்யலாம். நாம் பிள்ளைகளை அவமானப்படுத்தும் ஒவ்வொரு நிகழ்வும் நம் மீது அவர்கள் வைத்திருக்கும் மரியாதையைக் குறைக்க நாம் செய்யும் முயற்சியே என்பதை உணர்வது நமக்கும் அவர்களுக்கும் நல்லது.
(விவாதிப்போம் மாற்றுவோம்)
கட்டுரையாளர், எழுத்தாளர்.
