

பாப்பாத்திக்குப் புது வீடு கட்ட வேண்டுமென்று ஆசை. இவளோட ஓடி ஆடி விளையாண்ட பிரேமா ஒண்ணுமில்லாதவனுக்கு வாக்கப்பட்டவள்.
தங்கப் பதக்கத்துல நீலக்கல்லைப் பதிச்ச மாதிரி ஒரு குடும்பத்துக்குப் போதுமான அளவுக்கு ஒரு காரை வீட்டைக் கட்டிவிட்டாள். ஊருக்குள் இப்போது அவளுக்கான மதிப்பும் கூடிவிட்டது. ஆரம்பத்தில் செந்தூரனுக்கு வாக்கப்படும்போது தனி கிணத்தோடு இரண்டு ஏக்கர் பிஞ்சையும் பழைய காரை வீடும் இருக்கிறது. சமுத்திரத்துல நிலா போட்ட மாதிரி எனக்கு என்ன குறை என்று செந்தூரனுக்கு ஆசையாகப் பெண்டாட்டியாக வந்தவள்தான் பாப்பாத்தி. இப்போதெல்லாம் வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாகச் சலிப்பாகப் போய்க்கொண்டிருக்கிறது.
இவளின் வீடு காரை வீடாக இருந்தாலும் பழைய காலத்து வீடு. ஊர் மொத்தமும் தெரு மேடேறி இருந்தது. ஒரு பாட்டத்து மழை பெய்தால் போதும். தெருத்தண்ணி இவள் வீட்டுப் படி ஏறி நடு வீடு வரை வந்து, ‘என்ன செளக்கியமா இருக்கீகளா?’ என்று கேட்டுவிட்டுப் போகும். மழைக்காலம் முழுக்க வீட்டிற்குள் ஈரச் சாடல்தான். அதுதான் இப்போது பழைய வீட்டை இடித்துவிட்டுப் புது வீடு கட்ட வேண்டுமென்று நினைத்தாள். அதோடு மாமியாருக்கும் ஒரு தனி வீடாகக் கட்டி அவளை ஒதுக்கிவைக்க வேண்டுமென்ற எண்ணம் அவளைப் பாடாகப் படுத்திக்கொண்டிருந்தது.
இவள் தாலி கட்டிவந்த புதிதில் நல்ல பாம்பு முள் உழவுக்கு அடியிலிருந்து காலில் தைத்துவிட்டதென்று சின்ன புண்னோடு அலைந்துகொண்டிருந்த அவள் மாமியார் கோகினி, பத்து வருசத்துக்குமேல் ஆகிவிட்டதால் பெரிய புண்ணோடு அலைகிறாள்.
எப்போதும் நாட்டு மருத்துவர் இவளுக்காக வருவதால் வீடு முழுக்க வேர்கள், இலைகளின் வீச்சமாக இருந்தது. இதனால் அவள் மாமியார் கோகினிக்குக் கூட ரொம்ப வருத்தம். என்னதான் மகன், மருமகளாக இருத்தாலும்கூட உள்ளூரக் கூசித்தான் போவாள். இரண்டு பேரனும் ஒரு பேத்தியும் பாட்டி, பாட்டி என்று அவள் மீது ஒட்டி உரசிப் பாசமாக இருந்தாலும்கூட அவள் கொஞ்சம் கூச்சத்தோடு ஒதுங்கித்தான் போவாள். பரப்பாத்திக்கு ஒண்ணும் சொல்ல முடியாது. புருசன் இவளை வைவது இருக்கட்டும், ஊருக்கார்கள்தான் இவளைச் சும்மா விட்டுவிடுவார்களா?
கோகினிக்கு நல்ல குணம். அவள் அய்யா கொஞ்சம் வசதியாக இருந்ததால் ஊருக்கு அவளால் ஆன உதவியைச் செய்திருந்தாள். இன்னும் செய்துகொண்டுதான் இருந்தாள். ஆனால், இப்போது யார் வீட்டுக்கும் போவதில்லை. பகலில் தன் வீட்டின் முன் கிடக்கும் வாசலில் ஆமணக்கு நெத்தை உடைப்பது, தட்டான், பாசிப்பயறு தெத்துகளைத் தட்டுவது என்று தன்னோடு ஒடுங்கிப்போயிருந்தாள். அவளைத் தேடிவந்து யாராவது பாசத்துடனும் அன்புடனும் பேசிவிட்டுப் போனால் அப்போதெல்லாம் பாப்பாத்திக்கு ‘கடுகடு’ என்று இருக்கும். ‘இந்த வீச்சமெடுத்த பொம்பளையவும் நாலு பேர் வந்து பார்த்துப் பேசிட்டுப் போறாகளே’ என்று வயிறெரிந்து கிடப்பாள்.
தனக்கு இருக்கும் நோயை நினைத்து கோகினி அடுப்புப் பக்கம்கூடப் போவதில்லை. மருமகளிடமோ பேத்தியிடமோ, “எனக்குக் கும்பாவுல இம்புட்டுக் கஞ்சி ஊத்திட்டு வா தாயீ” என்பாள். பாப்பாத்தியும் அவ்வப்போது இவளை ஒதுக்கிவைத்தது போல்தான் நடந்துகொள்வாள். கோகினிக்கு வருத்தமாக இருக்கும். ஆனாலும் மருமவ செய்யறதும் நாயம்தாம் என்று நினைத்துக்கொள்வாள். பாப்பாத்தியோ இவளுக்காகவே ஒரு வீட்டைக் கட்டி இவ வாடைகூட எம்புள்ளைங்க மேல புருசன் மேல அடிக்கக் கூடாத மாதிரி ஒதுக்கி வைக்கணும் என்றுதான் இப்போது வீடு கட்டுவதற்கு மும்மரமாயிருந்தாள்.
கோகினிக்கும் எப்போதோ செத்துப் போக வேண்டுமென்றுதான் இருந்தது. ஆனால், அவளால் கிணற்றில் விழ முடியாது. நீச்சல் அவளுக்கு நன்றாகத் தெரியும். வேறு எப்படியும் சாக அவளுக்குச் சம்மதமில்லை. காரணம் மகன் அவளை நீ என்றால்கூட நீதி கெட்டுப் போகுமென்று அப்படிப் பொன்னும் கண்ணுமாக வைத்திருந்தான். இப்படித் தற்கொலையாகச் செத்தால் அவன் மனசு என்ன பாடுபடும், நம்மை விட்டு ரெண்டு நாளைக்குப் பிரிஞ்சி இருப்பானா என்று நெஞ்சுருகி அவனுக்காகவே வாழ வேண்டுமென்று நினைத்தவளாக எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு பொறுமையாக இருந்தாள்.
வீடு கட்டுவது என்று முடிவாகிவிட்டது. செந்தூரனும் பாப்பாத்தியும் அதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். கோகினி வழக்கம் போலப் படுக்கப்போனவள் காலுக்கு மருந்து எடுப்பதற்காக வீட்டுக்கு வந்தவளின் காதில் மகன் பேசுவது விழுந்தது. “பாப்பாத்தி என் அம்மா இந்த வீட்டுலேயே இருக்கட்டும். ஏன்னா அவ இந்த வீட்டுலேயே பிறந்து வளந்த பெரிய வீட்டுக்காரி. என் தாத்தாகூடத் தன் வீட்டைவிட்டு மக போகக் கூடாதுன்னு என் அய்யாவை வீட்டோட மாப்பிள்ளையா பார்த்திருக்காக. அதனால் அம்மா புருசன் வீடுன்னுகூடப் போகல. அதேன் சொல்லுதேன்” என்று சொல்லவும், பாப்பாத்தி அவனை அடக்கினாள்.
“பேசாம இரும். நம்ம புள்ளைகள வச்சிக்கிட்டு எந்த வீட்டுக்குப் போறது? நம்ம பின்னால இருக்க வீட்ல இருந்துக்கிட்டு முதல்ல முன்னால கட்டுவோம். முன்னால கட்டுனப் பிறவு இங்க வந்துருவோம்” என்றாள். “அப்ப என் அம்மா” என்று செந்தூரான் கேட்கவுமே, “ஆமா அவ கிடக்கா வீச்சமெடுத்துப் போயி. அவளுக்குன்னு வீடு கேட்டா யாரும் கொடுக்க மாட்டாக. பேசாம நம்ம பிஞ்சையில் இடுப்பளவு மண் சுவர் வளர்த்துத் தென்னங்கிடுவையப் போட்டு ஒரு கூரைய வேஞ்சி வைங்க. நேரத்துக்கு நேரம் அவளுக்குக் கஞ்சிதானே. நம்ம புள்ளைககிட்டகொடுத்துவிட்டுருவோம்” என்றாள்.
கோகினிக்கு மருமகள் பேசியதைக் கேட்டு நெஞ்சு வலித்தது. ஆனாலும் மகன் அவளுக்குத் தங்கமானவன். அஞ்சு வருசம் புள்ளையில்லாமல் திருச்செந்தூர் முருகனை வேண்டி மகன் பிறந்த பிறகு அந்த திருச்செந்தூருக்கே போய் மகனுக்கு முடியெடுத்து அவர் பெயரையே வைத்துத் தன் அரவணைப்பில் அப்படி வளர்த்த மகன். அவள் பிரிய சகிக்க மாட்டான் என்று நினைத்தவாறு மகன் என்ன சொல்லப் போகிறான் என்று கேட்க ஆவலோடு நின்றாள். செந்தூரனும், “அப்படியா சொல்ற பாப்பாத்தி. அப்ப நாளைக்கே நானு போய் பிஞ்சையில மண்ணு வைக்கிற வேலையைப் பார்க்கிறேன்” என்றதும் கோகினிக்கு நெஞ்சை அடைத்துக்கொண்டு வந்தது.
(நிறைவடைந்தது)