

எனக்குப் பத்து வயதாக இருந்தபோது தாத்தா ஒருவர் எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வருவார். அவருக்குப் பெண் குழந்தைகள் இல்லை என்பதால் என்னிடம் அன்பாக நடந்துகொள்வதுபோல் என்னை மடியில் அமர்த்திக்கொண்டு கன்னத்தைக் கிள்ளுவதும் முத்தம் கொடுப்பதுமாக இருப்பார். அது எனக்குப் பிடிக்காது. அசௌகரியமாக உணர்வேன். அம்மாவும் அப்பாவும் ஏதாவது சொல்வார்களோ என்று பயந்து யாரிடமும் எதையும் சொல்லவில்லை. இவரது செயலால் வளர, வளர எனக்கு ஆண்களைக் கண்டாலே பயமும் எரிச்சலும்தான் வந்தது. தற்போது எனக்குத் திருமணத்துக்கு வரன் பார்த்துவருகிறார்கள். என்னால் திருமண வாழ்க்கையில் ஈடுபட முடியுமா எனக் கலக்கமாக இருக்கிறது. எவ்வளவோ முயன்றும் பழைய நினைவுகளில் இருந்து மீள முடியவில்லை. என்ன செய்யலாம்?
- பெயர் வெளியிட விரும்பாத வாசகி.
மனம் கலங்கும் பெண்ணே, உள்ளே உங்களைப் படுத்தும் ஒன்றைப் பற்றித் தைரியமாக எழுதியதற்காக உங்களைப் பாராட்டுகிறேன். உங்கள் கடிதத்தில் உள்ள சொற்களைப் படிப்பவர்கள், ‘அந்தத் தாத்தா அன்புடன் கன்னத்தைக் கிள்ளி முத்தமிட்டால் என்ன தப்பு?’ என்று கேட்கலாம். உங்களுக்கு அது அசௌகரியமாக இருந்தது எனும் வாக்கியம் பல தகவல்களை அளிக்கிறது. பத்து வயதுப் பெண் குழந்தைக்கு விரும்பத்தகாத தொடுதல்களைக் கண்டறியும் திறன் உண்டென்று நம்புகிறேன். அதனால் அந்த அடிப்படையில் என் பதிலைப் பதிவுசெய்கிறேன்.
இந்தப் பாரத்தைச் சுமந்துகொண்டு இவ்வளவு காலம் அவதிப்பட்டிருக்க வேண்டாம். நடந்த தவறுகளுக்கு நீங்கள் பொறுப்பாக மாட்டீர்கள். அந்தத் தாத்தா ஒரு ‘பீடோஃபீலிக் டிஸ்ஆர்டர்’ (Pedophilic Disorder) கொண்டவராக இருக்கலாம்.
இது ஒரு மன நலப் பிரச்சினை. பருவமடைவதற்கு முன் உள்ள வயதினர்பால் ஈர்ப்பு ஏற்பட்டுப் பாலியல் தவறுகளை இழைப்பவர்கள் இவர்கள். உங்களுக்குக் குற்றவுணர்வு ஏற்படத் தேவையே இல்லை என்பதைப் புரியவைக்கவே இந்தத் தகவலைத் தெரிவிக்கிறேன். உங்கள் மீது தவறு இல்லை என்று அறியும்போது அந்த உணர்வு நீங்கிவிடும் அல்லவா? குற்றவுணர்வை நீக்கினால் பயமும் மறைந்துவிடும். மேலும் எல்லா ஆண்களும் அந்தக் குறைபாடு கொண்டவர்கள் அல்ல. உலக அளவில் சுமார் 5 சதவீத ஆண்கள்தாம் இந்தக் குறைபாடு கொண்டவர்கள் என்று புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. ‘அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்’ எனும் பழமொழிக்கு ஏற்ப, எல்லா ஆண்களையும் கண்டு பயப்படுவது அறிவீனம்.
அந்த அதிர்ச்சிகரமான நிகழ்வுகள் நிழற்படங்களாக மனதில் வந்துபோவதால், மணமான பின் கணவன் நெருங்கும்போது மீண்டும் நினைவுக்கு வந்துவிடுமோ என்கிற கவலைதான் உங்களுக்குக் கலக்கத்தை உண்டுபண்ணுகிறது. ஒரு மனநல மருத்துவரைச் சந்தித்து இது என்றைக்கோ ஏற்பட்ட அதிர்ச்சியின் பின்விளைவால் ஏற்பட்ட மன அழுத்தமா (Post Traumatic Stress Disorder) என்று தெரிந்துகொண்டு, அதைச் சரிசெய்ய உளவியலாளரின் உதவியையும் பெற்றுக்கொள்ளுங்கள். இப்போதெல்லாம் இணையம் வழியாகவே மருத்துவரையும் உளவியல் ஆற்றாளரையும் சந்திக்க முடியும். மணவாழ்க்கை மகிழ்வாக அமைய இந்த ஆலோசனை மிகவும் அவசியம்.
திருமணமான புதிதில் கணவர் வீட்டார் சந்தோஷமாகத்தான் என்னை வைத்திருந் தார்கள். ஆரம்பத்தில் சமையல் கட்டுக்குள் என்னை அனுமதித்ததில்லை. என்னை மகள்போல் பார்த்துக்கொள்கிறார்கள் எனச் சந்தோஷமாக இருந்தேன். ஆனால், போகப் போக அந்த வீட்டுக்குள் எனக்கு இடம் இல்லை என்பதுபோல் தோன்றுகிறது. கணவர் வேலையிலிருந்து வந்தால் அம்மாவிடம்தான் விஷயங்களைப் பகிர்வார். உணவையும் அம்மாவே பரிமாறுவார். என்னிடம் பேச்சே கிடையாது. உறங்குவதற்கு மட்டும் ஒரே அறை என்பது மட்டும்தான் எங்களுக்குள் உறவு என்றாகிப்போனது. சமைக்க அனுமதிக்காமல் ‘நான் ஒரு வேலையும் செய்யாமல் எப்போதும் போனையே பார்த்துக்கொண்டிருக்கிறேன்' என புகாரும் சொல்கிறார்கள். இது பற்றிக் கணவரிடம் சொன்னால் அவருக்கு அம்மா பாசம் கண்ணை மறைக்கிறது. அம்மா, மகன், மகள், அப்பா என ஒரு குடும்பமாக இருக்கும் வீட்டில் நான் ஒரு விருந்தாளியைப் போல் வாழ எதற்குத் திருமணம்? நான் என்ன செய்வது?
- பெயர் வெளியிட விரும்பாத வாசகி.
அம்மா, எதற்குத் திருமணம் என்கிற கேள்வி உள்மனதிலிருந்து வருகிறது. உங்கள் கணவர் திருமணத்துக்கு மனதாரச் சம்மதித்தாரா என்கிற சந்தேகம் எழுகிறது. காதல் மொழியின் பரிமாற்றங்களோ, இல்லற உறவோ, குடும்பத்தாருடன் இயல்பான தொடர்புகளோ நடக்கவில்லை என்றால் எப்படிப் பிணைப்பு வரும்? உங்கள் கணவரது குடும்பம் அதீத பாசவலையால் பிணைக்கப்பட்டிருக்கிறது. குடும்ப விவரங்களை, ரகசியங்களைக்கூட அவர்களுக்குள்தான் பகிர்ந்து கொள்வார்கள்போல. இது போன்றவர்களுக்கு வெளியிலிருந்து ஒருவரைத் தங்களில் ஒருவராக ஏற்றுக்கொள்ளவது கடினம்.
தாயின் மீது ஆழமான பாசம் இருப்பது இதனால்தான் என்றாலும் மனைவியை நெருங்காமல் இருப்பது இயல்பாகத் தெரியவில்லை. காலம் கடத்தாமல், உடனே நீங்கள் செயலில் இறங்க வேண்டும்; சண்டை போடச் சொல்லவில்லை. நேரடியாக உங்கள் கணவரிடம் (அவருக்குக் கோளாறு என்று சுட்டிக்காட்டாமல், குரலை உயர்த்திப் பேசாமல்) உறுதியாக, அழுத்தமாகப் பேச வேண்டும். தகுந்த சூழ்நிலையைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். ‘ஆம்’, ‘இல்லை’ என்று பதில் வரக்கூடிய கேள்விகளைத் தவிர்த்து (உதாரணத்துக்கு ‘விருப்பமில்லாமல் என்னை மணந்தீர்களா?’) ‘எனக்கு முக்கியமான ஒன்றைப் பேச ஐந்து நிமிடங்கள் வேண்டும்’ என்று ஆரம்பித்து, ‘நமக்குள் ஏன் தாம்பத்திய உறவோ அன்பான பேச்சோ நெருக்கமோ இல்லை? நீங்கள் வேறு யாரையாவது விரும்பினீர்களா? அல்லது வேறு ஏதாவது பிரச்சினையா?’ என்று ஆரம்பியுங்கள். அவரை இந்தக் கேள்விகள் சங்கடப்படுத்துவதால், அவசரமாகப் பேச்சைத் துண்டித்து அகன்றுவிடுவார். இன்னொரு நாள் பேசியும் பதில் வரவில்லையென்றால், ‘உங்களிடமிருந்து பதில் வராததால், நான் உங்கள் பெற்றோரிடம்தான் கேட்க வேண்டும்’ என்று எச்சரியுங்கள். பெற்றோரிடம் தனியாகப் போக வேண்டாம்; உங்கள் பெற்றோருக்குப் புகுந்தவீடும் கணவரும் உங்களை நடத்தும் விதம், கணவரது போக்கு இவை பற்றி எல்லா விவரங்களையும் சொல்லி, அவர்களைப் பேசவிடுங்கள். இடையிடையே பேச்சு, சண்டையாக மாறாமல் பார்த்துக்கொள்ளுங்கள். பேச்சு தீர்வை நோக்கிப் போக வேண்டும். கணவரை ஒரு மருத்துவரிடம் அழைத்துப் போகவேண்டும் என்று வலியுறுத்துங்கள்.
உங்கள் பேச்சால் எதையையும் நகர்த்த முடியவில்லை என்றால், உங்கள் பெற்றோர் உங்களை அவர்கள் வீட்டுக்குக் கொஞ்ச காலத்துக்கு அழைத்துப் போவதாகவும், எல்லாம் சரியான பின் எங்கள் மகள் வருவாள் என்றும் சொல்லலாம். எதுவும் நடக்கவில்லையென்றால் வெறுமையான மணவாழ்க்கை தேவையா என்று யோசித்து முடிவெடுங்கள்.
(நிறைவடைந்தது)
கட்டுரையாளர், உளவியல் ஆற்றாளர்.