

நான் விவாகரத்து ஆனவள். மகள் ஏழாம் வகுப்பு படிக்கிறாள். நான் ஒருவரை விரும்புகிறேன். அதைத் திருமணம் வரை நீட்டிக்கலாம் என்று நினைத்தபோது அவர் என்னிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்வதாகத் தோன்றுகிறது. எதற்கெடுத்தாலும் என்னைக் கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கிறார். இந்த உறவிலிருந்து நான் விலக முடியாதபடி ஏதேதோ பேசி என்னைக் குற்றவுணர்வுக்கு ஆளாக்குகிறார். அவசரப்பட்டு முடிவெடுத்துவிட்டோமோ எனத் தோன்றுகிறது. என்ன செய்யலாம் என்று வழிகாட்டுங்கள்.
- பெயர் வெளியிட விரும்பாத வாசகி.
அன்பான தோழிக்கு, கொடுக்கப்பட்ட தகவல்களை வைத்துப் பதில் எழுதுகிறேன். நீங்கள் குற்றவுணர்வுடன் தவிக்கத் தேவையே இல்லை. ஒத்துவராத உறவாக இருந்தால், இப்போதே விலகுவது இருவருக்குமே நல்லது. இந்த உறவைத் தொடரலாமா, வேண்டாமா என்கிற குழப்பத்தில் இருக்கிறீர்கள். குழப்பம் தீர ஒரு பயிற்சியை உங்களுக்கு நான் சொல்லிக் கொடுக்கிறேன்.
உறவில் லாப-நஷ்ட கணக்கைத் தீர்மானிக்கும் பயிற்சி இது. நமக்கு இதமாக இருக்கும் உறவை லாபத்தில் சேர்க்கிறோம்; இதம் தராத உறவை நஷ்டமாகக் கணக்கிடுகிறோம். இதுதானே உறவுகளின் தன்மை!
உதாரணத்துக்காக உங்கள் சூழ்நிலையை அனுமானித்து கீழே ஓர் அட்டவணையைக் கொடுத்துள்ளேன். அட்டவணையின் இடதுபக்க அட்டவணையில் இந்த உறவைத் தொடர்வதில் (மறுமணத்தில்) உள்ள சாதகங்களை மேல் கட்டத்திலும், பாதகங்களைக் கீழ் கட்டத்திலும் எழுதுங்கள். அடுத்து வலப்பக்க அட்டவணையில் இந்த உறவை நிலைநிறுத்துவதில் உள்ள சாதக, பாதகங்களை எழுதுங்கள். நீங்கள் உங்களுக்கு உண்மையாக இவற்றை எழுத வேண்டும். இந்த அட்டவணையில் எடுத்துக்காட்டாக வாக்கியங்களை நிரப்பியுள்ளேன்.
எனக்கு 40 வயதாகிறது. என் கணவருக்கு 45. குழந்தைகள் வளர்ந்துவிட்டதைக் காரணம்காட்டி என் கணவர் என்னுடன் நெருக்கமாக இருப்பதில்லை. அப்படியே இருந்தாலும் ஏதோ கடமைக்கு எனச் சில நிமிடங்கள் மட்டுமே இருக்கிறார். ஆனால், என் மனம் நிறைவடையாமல் அன்புக்காக ஏங்குகிறது. அடிக்கடி இருவருக்கும் சண்டையும் வருகிறது. என்ன செய்வதென்று தெரியவில்லை. தீர்வு சொல்லுங்கள்.
- பெயர் வெளியிட விரும்பாத வாசகி.
தோழியே, கவலைப்பட வேண்டாம். 40, 45 வயது என்பது ஆண், பெண் இருவருக்கும் கடினமான பருவம்தான். இப்போது இருவருமே ‘ஹனிமூன்’ மூடில் இருக்க மாட்டீர்கள்! ஆனால், கணவன், மனைவி பந்தத்தை வலுவாக வைத்திருப்பதில், தாம்பத்திய உறவுக்குப் பெரும் பங்கு உண்டு. உங்கள் கணவர் உங்களது தேவைகளைப் பற்றி நினைப்பதில்லை என்று மறைமுகமாகச் சொல்லியிருக்கிறீகள். பல ஆண்களது கண்ணோட்டம் அப்படியிருப்பதால் அது சரி என்று ஏற்க முடியாது. சில ஆண்கள் தன் தேவை நிறைவடைந்ததுமே மன நிறைவு பெற்றுவிடுவார்கள். மனைவியின் நிலை குறித்து யோசிப்பதில்லை. இது ஒரு பக்கம் இருக்க, சில ஆண்களுக்குத் தொடர்ந்து இந்தச் செயலைச் செய்வது, ஆர்வத்தைக் குறைக்கலாம். உங்கள் கணவர் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர முயன்று, நீங்கள் அதை மறுத்திருக்கிறீர்களா? கணவனது தேவைகளை முன்வைத்துப் பேசுவதாக எண்ண வேண்டாம். அவர் ஏன் இப்படி நடந்துகொள்கிறார் என்பதை ஊகிக்கிறேன். ஏதோ ஒரு சாக்கைச் சொல்லி அவர் விலக வேறு காரணம் இருக்கிறதோ? மனைவியாகிய உங்களுக்குத்தான் தெரியும்!
கணவனுக்கும் மனைவிக்கும் ஒரே அளவுகோல்தான். மனைவி தன் தேவையை வெளிப்படுத்தி, கணவன் அதற்கு இணங்காவிட்டால், அவள் கூசிப்போகும் அளவிற்குத் தரக்குறைவாகப் பேசுவான்! கணவன் கேட்டு, மனைவி மறுத்தால், அப்போதும் அவளுக்குத்தான் கெட்டபெயர். நீங்கள் எதிர்பார்ப்பதெல்லாம் காதல்மொழி, பேச்சிலோ அல்லது செய்கையிலோ, அன்பின் பரிமாற்றம், சரிதானே? கணவரிடம் வெளிப்படையாக உங்கள் தேவையைத் தயங்காமல் பேசுங்கள். பெரும்பாலும், குழந்தைகள் பிறந்த பின் இருவரும் பெற்றோராகவே நினைத்துச் செயல்படுகிறார்கள். சில சமயமாவது கணவன்-மனைவியாகவும் செயல்பட்டால்தானே காதல் நிலைக்கும்! அதைச் செய்யுங்கள் முதலில். திருமண நாளன்று நீங்கள் இருவர் மட்டும் டின்னருக்குச் செல்லுங்கள். படுக்கையறையில் சமத்துவம் இருந்தால், அந்த ஜோடி மன நிறைவுடன் வாழ்வார்கள்.
- கட்டுரையாளர், உளவியல் ஆற்றாளர்.