

இன்னைக்கோடு மூன்று நாளாக எதுவும் சாப்பிடாமல் வயிற்றுப் பசியோடு படுத்திருந்தான் காந்தருவன். அவன் ஆத்தா முத்துமுடிக்கு மகன் பட்டினி கிடப்பதைப் பார்க்கச் சகிக்கவில்லை. மகன் பக்கத்தில் வந்து, “எய்யா, என் ராசாவில்ல... சொன்னா கேளுய்யா... கொஞ்சம் சாப்பிடு” என்று கெஞ்சினாள். காந்தருவனும், “நீயும் அய்யனும் வெயிலிய எனக்குக் கட்டிவைக்கேன்னு சொல்லுங்க. நான் இப்பவே எந்திரிச்சி சாப்பிடுதேன்” என்றான். முத்துமுடி எதுவும் பேசாமல் நடந்தாள்.
அவள் புருசன் கோலனுக்கும் இவளுக்கு அண்ணனாக வேண்டிய மெய்யடியானுக்கும் நாலு வருசங்களுக்கு முன்னால் வந்த சண்டையில் தீத்தரை தண்ணித்தரையாகிப் போனது. யாரும் நேருக்கு நேர் நின்னு பார்க்க மாட்டார்கள். அப்படி ஒரு சண்டை. ஆனால், காந்தருவன் இளவட்டம் ஆகி காடு, கரை என்று சுற்றிக்கொண்டிருந்ததில் மெய்யடியான் மகளான வெயிலிக்கும் இவனுக்கும் எப்படியோ பார்வைகள் மோதியதில் பழக்கம் ஆகிப்போனது. இருவரும் குளத்துத் தண்ணிக் கெண்டை மீனாகத் துள்ளாட்டம் போட்டுக்கொண்டு வெள்ளாமை அடர்ந்த காடுகளிலும் கரைகளிலும் கொஞ்சிக் குலாவினார்கள்.
இந்த விஷயம் எப்படியோ இரண்டு வீட்டுக்கும் தெரிந்துவிட்டது. மெய்யடியான் மகளை வெட்டுவதற்காக அரிவாளைத் தீட்ட அவன் பொண்டாட்டி பாதமுத்துதான் புருசன் காலைப் பிடித்து, கெஞ்சிக் கூத்தாடி மகள் உயிரைக் காப்பாற்றிவைத்தாள். அன்று இரவே காந்தருவனைச் சந்தித்த வெயிலி, “இந்த ஊரைவிட்டு எங்கேயாவது ஓடிப்போய் பிழைத்துக்கொள்வோம்” என்று சொல்லிக் கெஞ்சினாள். ஆனால், காந்தருவன், “எனக்கு ஆத்தா அய்யாவும் வேணும். நீயும் வேணும். நானு ஒரு நேரம் பட்டினி இருந்தாக்கூட எங்கய்யா பொறுக்க மாட்டாரு. அதனால நானு ஒரு நா பட்டினி கிடந்தா என் அய்யா உங்க வீட்டுக்குப் பொண்ணு கேட்டு வந்துருவாரு. நீ பொறுமையா இரு” என்றான்.
வெயிலியும் பொறுமையாகத்தான் இருந்தாள். ஆனால், விடிந்தால் நாலு நாளாகப் போகிறதே. சுவர் இருந்தாத்தான சித்திரம் வரைய முடியும்? இப்படி நாள் கணக்குல பட்டினி கிடந்து அவரு செத்துப்போனா நா என்ன செய்வேன்னு நினைச்ச வெயிலி, அன்றைக்கு காந்தருவனின் பிஞ்சைக்குக் கத்தரிக்காய் பிடுங்கப்போன தன் தோழி சித்திரையிடம் தூக்குப்போனியில் கஞ்சி ஊத்தி கத்தரிக்காய் கூடையில் வைத்து மறைத்துக் காந்தருவனுக்குக் கொடுக்கச் சொல்லிக் கொடுத்தாள்.
சித்திரையும் தோட்டத்தில் பிடுங்கிய காயை அவர்கள் வீட்டில் கொடுப்பதுபோல் காந்தருவனிடம் கஞ்சியைக் கொடுத்தாள். மூன்று நாளாகக் கஞ்சியே இல்லாமல் இருந்த காந்தருவன் இவள் கொடுத்துவிட்ட கஞ்சியைக் கண்டதும் வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டான். அவன் வாடிய முகம் செழிப்பானதோடு அவனும் சுறுசுறுப்பாக எழுந்து உட்கார்ந்தான். மகனின் சுறுசுறுப்பைப் பார்த்ததுமே அவன் அய்யா சந்தேகம் அடைந்தார். யாரோ மகனுக்கு உள்ளடி வேலை செய்கிறார்கள் என்று அறிந்தவர் அவனைக் கொண்டுபோய் தானியம் போடும் மச்சு வீட்டில் போட்டுவிட்டார். அதோடு அன்று இரவு தன் மனைவியிடம், “இவன் வெயிலியை மறக்க மாட்டான் போலிருக்கிறது. நீ இன்னைக்கு அப்படி ஊருக்குள் போகிறவள் போயிட்டு வரும்போது அந்த பாதமுத்து மக வெயிலி செத்துப்போனான்னு சொல்லி அமுதுகிட்டே வா. அந்த வார்த்த காதுல விழுந்த பிறவு இவனுக்குப் புத்தி கொஞ்சம் மாறும். நம்ம அத சாக்கு வச்சி இந்த மாதத்திலேயே இவனுக்கு ஒரு கல்யாணத்த முடிச்சிருவோம். இவனுக்குன்னு ஒருத்தி வந்துட்டா இவனால் ஒன்றுமே செய்ய முடியாது” என்றார்.
இங்கே வெயிலிக்குத் தூரத்து ஊரில் மாப்பிள்ளை பார்த்துவிட்டார்கள். மாப்பிள்ளை பார்த்த விஷயமே வெயிலிக்குத் தெரியாது. மாப்பிள்ளை வீட்டில்தான் கல்யாணம். மாப்பிள்ளை வீடு தூரத்துக் கிராமம் என்பதால் இரலிலேயே சீக்கிரமாகப் புறப்படத் தயாரானார்கள். இப்படி ரகசியமாகக் கல்யாணம் செய்யப் புறப்படுவதால் வெயிலிக்குத் தெரிய வேண்டாமென்று எல்லாரும் வெளிச் சத்தம் கேளாமல் குசுகுசுவென்று பேசிக்கொண்டு கல்யாண வேலையில் மும்மரமாக அங்கும் இங்குமாக அலைந்தார்கள்.
வெயிலிக்குச் சந்தேகம் வந்துவிட்டது. இவளுக்கு உருத்தான சேத்திக்காரியாயிருந்த சித்திரத்தையும் வரவேண்டாமென்று சொல்லிவிடவே இவளுக்கு ஊருக்குள் நடக்கும் ஒரு சேதியும் தெரியவில்லை. தன் மீது உயிரையே வைத்திருக்கும் காந்தருவன் சாப்பிடாமல் பட்டினி கிடக்கிறான் என்று கேள்விப்பட்டதிலிருந்து இவளும் பச்சைத் தண்ணி பல்லில் ஊற்றவில்லை. நடக்கச் சத்தில்லாமல் படுக்கையிலேயே கிடக்கிறாள்.
இருட்டி ஒரு நாழிகை ஆன பிறகு அவள் அம்மா பாதமுத்து மகளை எழுப்பினாள். வெயிலி ஒடுங்கிய குரலில், “நானு இந்த ஊரைவிட்டு எங்கயும் வர மாட்டேன்” என்று பிடிவாதம் பிடிக்க அவள் அம்மாவுக்குக் கோபம் வந்து விட்டது. “நீ நினைச்சி நினைச்சி கஞ்சியும் குடியாம படுக்கையில் கிடக்கயே... இப்படி உன்னைப் படுக்கையில் படுக்க வச்சானே அந்தப் பய காந்தருவன் செத்துப் போனானாம். செத்துப் போனவன் அப்படியே போவானா? காத்து கருப்பா வந்து உன்கூட கண்ணாமூச்சுல்ல விளையாடிட்டுப் போவான். அதான் இந்த ஊரைவிட்டே...” என்று வெயிலியின் அம்மா சொல்லிக்கொண்டு இருக்கையிலே, “அய்யோ மச்சான்..” என்று அலறியவாறே வெயிலி காந்தருவன் வீட்டை நோக்கி ஓடினாள். வெயிலி செத்துவிட்டாள் என்று தன் அம்மா சொன்னதைக் கேட்டதும் காந்தருவன் வெயிலி வீட்டை நோக்கி ஓடிவர நிலவின் குளிர்ந்த நடுமுச்சந்தியில் இருவரும் விழுந்து கிடக்க, ஊரே இவர்களைச் சுற்றி நின்றது.
- கட்டுரையாளர், எழுத்தாளர்.