

திருமணம் அவசியமா இல்லையா, அப்படித் தனக்குத் திருமணம் என்கிற ஒரு பந்தம் தேவையெனில் தன் எண்ணங்களுக்கு, செயலுக்கு, குணங்களுக்கு, கனவுகளுக்கு ஏற்ற ஒரு துணையைத் தேர்ந்தெடுக்கும் அளவுக்கு மனமுதிர்ச்சியோ சுதந்திரமோ நம் சமூகத்தில் இருக்கிறதா? ஆனால், ஒரு குறிப்பிட்ட வயது வந்ததும் ஒருவருக்குத் திருமணமும் அதற்குப் பிறகான பிள்ளைப்பேறும் காலாகாலத்தில் நடந்துவிட வேண்டும் என்று மட்டும் நமக்குச் சொல்லப்பட்டுள்ளது.
ஒருவரை நம் சகபயணியாக ஏற்றுக்கொள்வதால் எவ்வளவு புரிதலும் பொறுப்பும் கூடுகிறது, அதற்கு அந்த இருவரும் உடலாலும் மனதாலும் தயாராகிவிட்டார்களா என்று எந்தவொரு ஆராய்தலும் நம்மிடம் கிடையாது. சாதி, படிப்பு, பதவி, அந்தஸ்து, சொத்து, வருமானம் இவைதான் பெரும்பாலான திருமணங்களை நிர்ணயிக்கின்றன. பெரியவர்கள் பார்த்து நடத்திவைக்கும் திருமணங்கள்தாம் இப்படியென்றால் காதலித்து மணந்துகொள்கிறவர்களாவது புரிதலுடன் வாழ்கிறார்களா என்றால், பலரும் திருமணம் முடிந்ததும் காதலைத் தொலைத்துவிடுகிறார்கள்.
இருவருக்கும் பொது
இருபாலரும் சேர்ந்து மகிழ்ந்து வாழ்ந்து பிள்ளைகள் பெற்றுக் குடும்பமாக வாழ்வதற்கு வகையாகத்தான் திருமணம் புரிகிறார்கள். ஆனால், இருவர் சேர்ந்து வாழ்வதற்கான புரிதலோ, சக மனிதர் என்கிற மரியாதையோ, ஒருவர் தேவையை மற்றவர் உணர்ந்து செயல்படும் எண்ணங்களோ பெரிதாக இருப்பதில்லை. சமூக இலக்கணங்களுக்கு ஏற்பவே அவரவர் தேவைகள் புரிந்துகொள்ளப்படுகின்றன. இங்கே ஒவ்வொரு தனி மனிதரின் விருப்பு, வெறுப்பு எங்குமே மதிக்கப்படுவதில்லை. திருமணத்தின் முக்கிய அங்கமான அன்பும் காதலுமே பெரிதாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. இவைதான் திருமணத்தின் அடித்தளம் அல்லவா? இவை சரியாக அமைந்துவிடும் உறவுகளில் மற்ற பிரச்சினைகள் பெரிதாகத் தலைதூக்காது.
அன்பும் அரவணைப்பும் பாலின பேதமில்லாமல் அனைவருக்கும் தேவைப்படுகின்றன. காமமும் அப்படித்தான் பாலின பேதமில்லாமல் அனைவருக்கும் தேவைப்படுகிறது (பாலீர்ப்பு அற்றவர்கள் எனப்படும் Asexuals விதிவிலக்கு). ஆனால், பெண்ணுக்கு அன்பும் ஆணுக்குக் காமமும்தான் முக்கியம் என்று நமக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டுள்ளது. அன்பு ஒன்றுதான் இந்த உலகை இன்னும் வாழத் தகுந்ததாகச் சிறிதளவாவது வைத்திருக்கிறது. அப்படியிருக்கையில் ஒரு பாலருக்கு அது தேவைப்படுவதில்லை என்கிற கூற்று எப்படிச் சரியாக இருக்கும்?
பாரபட்சமான மூளைச்சலவை
நாமெல்லாம் பலவிதமான மூளைச்சலவைகளின் எச்சமாகத்தான் உலவிக் கொண்டிருக்கிறோம். பெண்களுக்குக் காமம் முக்கியமில்லை என்பதும் அப்படியொரு மூளைச்சலைவைதான். அந்த மூளைச் சலவையின் அடிப்படையில்தான் இன்று பல பெண்களே தங்களுக்கு அது தேவையே இல்லையென்றும் ஆணுக்குத்தான் காமம் அவசியம் என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆண்களுக்கும் காமம் முக்கியமில்லை என்கிற மூளைச்சலவை ஏன் இல்லை? அப்படி இருந்திருந்தால் ஒன்று இங்கே இனப்பெருக்கம் நின்று போயிருக்கும், இரண்டாவது ஆணாதிக்கச் சமூகத்தில் அப்படியொரு மூளைச்சலவை சாத்தியமேயில்லை. ஏனெனில், அவன் தேவைகளை அவன் பூர்த்தி செய்துகொள்ள வேண்டுமல்லவா? ஆக எங்கே அவன் தேவை நிறைவேறாமல் போய்விடுமோ என்கிற அச்சத்தில் ஆணுக்குக் காமம் இல்லாமல் வாழவே இயலாது, அவனுக்கு அது அடிப்படைத் தேவை என்று நிறுவியாகிவிட்டது. எப்படியும் பெண்ணுக்குக் காமம் தேவையில்லை என்று ஏற்கெனவே மூளைச்சலவை செய்தாகிவிட்டது. அப்படி அதையும் மீறி ஒரு பெண் தனக்கு அது தேவை எனச் சொல்லிவிட்டால் அவளுக்கு ஆயிரம் பட்டம்.
நம்புவதெல்லாம் உண்மையல்ல
பெண்ணை ஒருவிதமாகவும் ஆணை வேறுவிதமாகவும் மூளைச்சலவை செய்துவிட்டதால் தனக்குக் காமம் அவசியமில்லை எனப் பெண் நம்புகிறாள். அவளுக்கு ஓர் ஆணின் அன்பும் அரவணைப்பும் மட்டுமே தேவை என அவள் நம்புகிறாள். அதேபோல்தான் ஆணும், தன் தேவை காமம் மட்டுமே, அன்பும் அரவணைப்பும் தேவையில்லையென நம்புகிறான். ஆக, பெண் தேடுவதாக நினைப்பது அன்பையும் அரவணைப்பையும், ஆண் தேடுவதாக நினைப்பது காமத்தை. இதையும் அழகாகப் புரிந்து அவள் தேவையென நினைப்பதை அவன் கொடுத்து, அவன் தேவையென நினைப்பதை அவளும் கொடுத்து வாழ்கிறபோது உண்மையில் இருவருக்குமே இரண்டுமே கிடைத்துவிடும். ஆனால், நாம் அனைவரும் நம் தேவையை மட்டுமே முன்வைத்துச் சிந்திப்பதால்தான் இவ்வளவு உறவுச் சிக்கல்களும்.
காமம் தேவையில்லை என்று நினைத்திருக்கும் ஒரு பெண், தான் எந்தவிதத்திலும் இழிவுபடுத்தப்படாமல், போகப்பொருளாக உபயோகிக்கப்படாமல் மரியாதை, காதல், புரிதலுடன் தன்னை அணுகும் கணவன் கிடைத்தால் தனக்கும் காமம் தேவை என்பதைப் புரிந்துகொள்வாள். அதேபோல் ஓர் ஆண் ஒரு பெண்ணால் அன்புடன் அரவணைக்கப்படும்போது, ஆண் என்று இந்தச் சமூகம் ஏற்படுத்திவைத்த இலக்கணங்களிலிருந்து விடுபட்டு அன்புக்குச் செவிமடுக்கும் சிறுபிள்ளையாக மாறிப்போவான்.
இங்கே யாருமே அவரவராக அவரவர் உண்மைத்தன்மையுடன் வாழ்வதில்லை. அப்படி வாழ்வதற்கான சூழலை இந்தச் சமூகம் உருவாக்கவில்லை. ஆனாலும், நமக்கென ஒரு மூளையை இயற்கை நமக்குக் கொடுத்திருக்கிறது; முயன்றால் நம்மையும் மற்றவரையும் புரிந்துகொள்ளக்கூடிய மனதையும் அளித்திருக்கிறது. இதைப் புரிந்துகொண்டு வாழ்தலுக்கான அடிப்படை நியாயங்களுடன் வாழ்ந்தாலே போதும். மூளைச்சலவைகளால் ஆன புரிதல் பிழைகளைக் களைந்துவிட்டு உயிர்ப்புடன் வாழலாம்.
(விவாதிப்போம், மாற்றுவோம்)
கட்டுரையாளர், எழுத்தாளர்