

ஊருக்கு ஆறழகு என்பதைப் போல் சென்னைக்குச் சாலைகள் அழகு. அதன் அகலமான சாலைகள், வாகனங்களில் பாய்ச்சல் எல்லாம் அழகான காட்சிகள்.
அம்மாதிரியான சென்னை சாலைகளுக்கு பிரிட்டிஷ் காலப் பெயர்கள், சுதந்திர இந்தியாவின் பெயர்கள் என விதவிதமான பெயர்கள். ஆனால், அவை பெரும்பாலும் ஆண்களின் பெயரைத் தாங்கியே நீண்டுகிடக்கின்றன. அபூர்வமாகச் சில சாலைகளுக்குப் பெண்களின் பெயர்களும் உண்டு.
அந்தப் பெண்கள், சமூகத்துக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்தவர்கள். அதைக் கெளரவிக்கும் விதமாகத்தான் சென்னையின் சாலைகள் சில அவர்களின் பெயர்களைத் தாங்கி நிற்கின்றன.
அன்னி பெசன்ட் சாலை:
சமூகத்திற்கும் பெண்களின் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்தவர் அன்னி பெசன்ட். அவரைக் கௌரவிக்கும் வகையில் சென்னையின் அம்பத்தூர், தண்டையார்பேட்டை பகுதிகளில் உள்ள சாலைகளுக்கு அன்னி பெசன்ட் சாலை எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
ருக்மணி லட்சுமிபதி சாலை:
இந்தியச் சுதந்திரப் போராட்டத் தியாகி, அரசியல்வாதி, சென்னை மாகாணச் சட்டமன்றத்தில் மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர், சென்னை மாகாணத்தின் முதல் பெண் அமைச்சர் ஆகிய பெருமைகளைப் பெற்றவர் ருக்மணி லட்சுமிபதி. அவரது நினைவாக எழும்பூரில் உள்ள ஒரு சாலைக்கு ருக்மணி லட்சுமிபதி சாலை என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
ராணி அண்ணாதுரை சாலை:
தமிழ்நாடு அரசியலில் வரலாறு படைத்த சி.என்.அண்ணாதுரைக்குப் பக்கபலமாக நின்றவர் அவரது மனைவி ராணி அண்ணாதுரை. அவரைச் சிறப்பிக்கும் வகையில் மந்தைவெளி பகுதியில் உள்ள சாலைக்கு ராணி அண்ணாதுரை சாலை எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
அம்புஜம்மாள் சாலை:
மகாத்மா காந்தியைப் பின்பற்றி, சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டவர், பெண்கள் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்தவர் அம்புஜம்மாள். வாழும் காலம்வரை தன்னைச் சமூகப் பணிக்காக அர்ப்பணித்துக்கொண்ட அம்புஜம்மாளின் நினைவாக ஆழ்வார்ப்பேட்டை பகுதியில் உள்ள சாலைக்கு அவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ஈ.வெ.ரா. மணியம்மை சாலை:
பெரியாரின் மனைவி மணியம்மை பெண்களின் உரிமைகளையும் பகுத்தறிவு சிந்தனையையும் வலியுறுத்திப் போராடினார். அவரது பணிக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் எழும்பூரில் உள்ள ஒரு சாலைக்கு ஈ.வெ.ரா. மணியம்மை சாலை என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
தொடர்புக்கு: indumathy.g@hindutamil.co.in