

காலை பரபரப்பில், கைகளில் கிளவுஸும், கண்கள் மட்டும் தெரியும்படி முகத்தைச் சுற்றி துப்பட்டாவும் அணிந்துகொண்டு பயணிக்கும் பல பெண்களைப் பார்க்கிறோம். பெண்கள் முகத்தை மூடியபடி வாகனம் ஓட்டுவதை என்னதான் ஆண்கள் கேலி பேசினாலும், வாகனம் ஓட்டும்போது பெண்களுக்குக் கிடைக்கும் தன்னம்பிக்கையும் கம்பீரமும் தனி அழகு!
தான் சுதந்திரமாக இயங்குகிறோம் என்ற உணர்வைத் தருவது முதல் சுயதொழில் செய்வதுவரை பல்வேறு நலன்களை பெண்களுக்குத் தருகிறது இந்த வாகனம் ஓட்டுதல். வாகனம் ஓட்டும் பெண்களின் எண்ணிக்கை தற்போது கணிசமாக அதிகரித்துள்ளது. சென்னை போன்ற பெருநகரங்களில் மட்டுமல்லாமல் மற்ற ஊர்களிலும் பெண்களுக்கான வாகன விற்பனை அதிகரித்துள்ளதே இதற்குச் சான்று.
உளவியல் நன்மை
“பெண்கள் வாகனம் ஓட்டுவதை உளவியல் ரீதியாக ஆராய்ந்தால், மனித ஆற்றலில் உள்ள பல திறன்களை வெளிக்கொணரும் ஒரு காரணியாக இது உள்ளது.
மனித வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள உதவும் விஷயங்கள் இரண்டாம் நிலை தேவைகள் எனப்படுகின்றன. அந்த வகையில் பிறரைச் சாராமல், சுதந்திரமாக செயல்படுவதற்கும் முன்னேறுவதற்கும் சிறந்த விஷயமாக பெண்களுக்கு வாகனம் ஓட்டுதல் உள்ளது” என்கிறார் சென்னைப் பல்கலைக்கழகத்தின் உளவியல் பேராசிரியர் டாக்டர்.வி.டி. சுவாமிநாதன்.
இந்தக் காரணத்தைப் பிரதிபலிக்கின்றன திருநின்றவூரைச் சேர்ந்த கற்பகவல்லியின் வார்த்தைகள். “நான் காலேஜ்ல லெக்சரரா வேலை பார்க்கிறேன். இப்போ ஷேர் ஆட்டோவில்தான் போயிட்டு வர்றேன். எனக்கு இரண்டு பசங்க இருக்காங்க. அவங்களையும் ஸ்கூல்ல டிராப் பண்ணணும். இதுக்கெல்லாம் ஈஸியான வழி டூவீலர் கத்துகறதுதான்” என்கிறார்.
வாய்ப்பு தரும் வாகனங்கள்
இயந்திரங்கள் மனிதர்களின் கண்டுபிடிப்புதான் என்றாலும், சில நேரம் இயந்திரங்களின் திறன் மனித ஆற்றலை மிஞ்சிவிடுகிறது. விமானம், ரயில் போன்ற வாகனங்களைப் பெண்கள் ஓட்டும்போது சமூக மரியாதையும் அங்கீகாரமும் கிடைக்கிறது. இது அவர்களுடைய மன தைரியத்தை அதிகரிக்கிறது.
வாகனங்களையே மையமாகக்கொண்ட பெண் தொழில்முனைவோரும் தற்போது அதிகரித்துவருகிறார்கள். “எங்கள் ஊரிலோ வீட்டிலோ பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு முக்கியத்துவம் தரவில்லை. சென்னை வந்தபின் வாகனம் ஓட்ட வேண்டும் என்ற ஆர்வம் வந்து கற்றுக்கொண்டேன். அதன்பின், 15 ஆண்டுகள் கழித்துதான் டிரைவிங் ஸ்கூலை தொடங்கினேன். அந்தக் காலத்தில் பெண்களுக்குக் கற்றுதரக்கூட ஆளில்லை. பெண்களுக்குக் கற்றுக் கொள்ளவும் ஆர்வம் இருந்ததில்லை. அந்த நேரத்தில் டிரைவிங் ஸ்கூலை தொடங்கி, இன்று வரை வெற்றிகரமாக நடத்திவருகிறேன்.
தற்போது, வாகனம் ஓட்டுவதில் பெண்கள் ஆர்வம் காட்டுவது மகிழ்ச்சியளிக்கிறது. இதற்கு நானும் உதவுவது, எனக்கு மனநிறைவைத் தருகிறது” என்கிறார் சென்னை அடையாரில் 19 ஆண்டுகளாக டிரைவிங் ஸ்கூல் நடத்திவரும் துர்கா சந்திரசேகர்.
முடங்க வேண்டாம்
வாகனம் ஓட்டுதல் தற்சார்பு, வெற்றியின் அவசியம், சுயஅதிகாரம் போன்ற ஒருவரது மனத் தேவைகளையும் பூர்த்தி செய்வதால், வாகனம் ஓட்டும் பெண்கள் மற்றவர்களைவிட தன்னம்பிக்கையுடனும் புத்துணர் வோடும் இருக்கிறார்கள். இதனால், சுயமாகவும் தெளிவாகவும், தாங்கள் நினைத்தபடியும் பெண்களால் வாழ வாய்ப்பு அதிகரிக்கிறது.
ஏனென்றால், “பெரும்பாலான பெண்கள் தங்களைப் பாதிக்கும் விஷயங்களால் மனஉளைச்சலுக்கு ஆளாவது வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடப்பதால்தான்” என்கிறார் பேராசிரியர் சுவாமிநாதன்.