

எனக்கு 75 வயதாகிறது. நானும் என் கணவரும் மட்டும் தனியாக இருக்கிறோம். மனஸ்தாபத்தால் கணவருடன் பேசுவதில்லை. இரவில் எனக்குச் சரியான உறக்கமில்லை. இறந்துவிடுவேனோ என்று அச்சமாக இருக்கிறது. இரவைச் சமாளிப்பது மரண அவஸ்தையாக இருக்கிறது. இதற்குத் தீர்வு சொல்லுங்கள்.
- கல்யாணி, மதுரை.
அம்மா, உங்கள் இருவரிடையே வன்மம் பாராட்டுமளவுக்கு ஏதோ நடந்திருக்கிறது என்று புரிகிறது. இருவருக்காகவும் வேதனைப் படுகிறேன். அப்போதே பிரிந்திருக்கலாம்; ஆனால், சேர்ந்துதான் வாழ்கிறீர்கள்!
மனத்தைக் கடந்த காலத்தில் சிறைப்படுத்திவிட்டீர்களே! அந்தச் சிறையில் இருட்டும் பயமும்தானே இருக்கும்? மனத்தில் ஏற்பட்ட காயத்தை ஆறவிடாமல் பச்சைப் புண்ணாகப் பாதுகாத்துக்கொண்டிருப்பதால் உங்களுக்கு என்ன ஆகிறது என்று பார்க்கலாமா? தினமும் இயந்திரம் மாதிரி வேலைகளைச் செய்துகொண்டிருந்தாலும் மனத்துக்குள் ஒரு படம் ஓடிக்கொண்டே இருக்கிறது. அந்தப் புண்பட்ட நிகழ்வுகளை மீண்டும் மீண்டும் உயிர்ப்பித்துப் பார்க்கிறீர்கள்; இதனால், உங்கள் காயம் ரணமாகி எரிய ஆரம்பிக்கிறது. இது வேதனையைக் கூட்ட, உங்கள் புண்ணுக்குக் காரணமானவரை நிந்தித்து, ஆத்திரம்கொண்டு தாங்க முடியாத மனச் சுமையுடன் வாழ்கிறீர்கள். விளைவு? வயிற்றுப் புண்ணும் நெஞ்சுப் படபடப்பும் தலைசுற்றலும் பதற்றமும் பயமும் சுயபச்சாதாபமும் மனச்சோர்வும்தான் ஏற்படும். இந்த வாழ்க்கையில் தரம் இருக்கிறதா, நிம்மதியிருக்கிறதா, இவற்றைப் பெற என்ன செய்யவேண்டும்? மனத்தில் உள்ள புண் ஆறவேண்டும்; உங்கள் வலியிலிருந்து உங்களை விடுவிக்கவேண்டும். ஏன்? உங்கள் வலி குறைந்தால், கணவர் மீதுள்ள கோபம் குறையும். அவரை மன்னிக்கும் பக்குவம் வரும்; மன்னிப்பது உங்களை மகானாகக் காட்டிக்கொள்ள அல்ல. மன்னிப்பதால் உங்கள் புண் ஆறிவிடும்; பொறுக்குத்தட்டிப்போன காயம் வலிக்காது; கோபம் மறைந்துவிடும். மனம் லேசாகும்; மனிதாபிமானம் தலைதூக்கும். அமைதியாகச் சிந்திக்கும்போது அவர் கோணத்திலிருந்து அவரைப் புரிந்துகொள்ளப் பார்ப்பீர்கள்.
வீட்டை நிர்வகிப்பதில் இருவரும்தானே பங்கேற்பீர்கள்? உங்கள் சமையலை அவர் சாப்பிடுகிறார் அல்லவா? பேசிக்கொள்ளவில்லை என்றாலும் ஒரு நடுவர் மூலமாகவாவது தொடர்பு இருக்குமல்லவா? கூடவே வாழ்பவர் மீது பாசமே இல்லாவிட்டாலும், முதுமையில் உடல் நலம் சரியில்லாவிட்டால் மனிதாபிமானத்தால் உதவுவீர்கள் என்று நம்புகிறேன். ஒருவருக்கு இன்னொருவர் பக்கபலமாக இருக்க வேண்டிய காலகட்டத்தில், இந்தப் பிடிவாதம் தேவையா? காலம் ஓடிக்கொண்டே இருக்கிறது. இன்றே செய்யுங்கள்; நாளை வராமல் போகலாம். நீங்கள் முதலில் ஆரம்பிக்கலாமே! பெண்தான் எப்போதும் தணிந்து போகவேண்டுமா என்று கேட்கலாம். அவரை மாற்றுவது உங்கள் கையிலோ, என் கையிலோ இல்லயே! நீங்கள் மாறினால் அவரிடமும் மாற்றம் நிச்சயம் வரும்.
என் முதல் மகளுக்கு ஏழு மாதம் ஆனபோது நான் இரண்டாம் முறையாகக் கருவுற்றேன். முதல் குழந்தைக்கு ஒரு வயதுகூட ஆகாத நிலையில் இப்படி ஆனதால் கணவரது வற்புறுத்தலால் கருக்கலைப்புக்குச் சம்மதித்தேன். என் பிறந்த வீட்டில்கூட இது குறித்து யாரிடமும் சொல்லவில்லை. தற்போது மகளுக்கு ஐந்து வயதாகிவிட்டது. அதற்குப் பிறகு நான் கருவுறவே இல்லை. மருத்துவர்களிடம் பரிசோதித்துக்கொண்டபோது எல்லாமே நார்மலாக இருப்பதாகச் சொல்கிறார்கள். கருவில் இருந்த சிசுவைக் கொன்ற பாவம்தான் என்னை இப்படி அலைக்கழிக்கிறதோ என்று தோன்றுகிறது. குற்றவுணர்வால் வாடுகிறேன். இதிலிருந்து மீள என்ன வழி?
- பெயர் வெளியிட விரும்பாத வாசகி.
ஐந்து ஆண்டுகளுக்கு முன் நடந்ததையும் இப்போது நடப்பதையும் நீங்கள் ஆதாரம் இன்றி இணைப்பதை என்னால் அறிவியல்பூர்வமாக ஏற்க முடியவில்லை. குற்றவுணர்வால் உணர்வுபூர்வமாகச் சிந்திக்கிறீர்கள். ‘ரீவைண்ட் செய்து’ நடந்ததை மாற்ற முடியாது.
அதைக் கொலை என்றோ பாவச் செயல் என்றோ நம்பினால், பரிகாரம் தேடுங்கள்; குற்ற வுணர்வில் வருத்திக் கொள்வது தண்டனையாகலாம்; ஆனால், பரிகாரமாகாது. அது ஆக்கபூர்வமான செயலும் இல்லை. அழித்த ஒன்றை மீண்டும் உருவாக்க முடியுமா என்று யோசியுங்கள்.
குற்றவுணர்வு உங்களுக்கு மனச்சோர்வை உண்டாக்கும். நாளாக நாளாக வாழ்க்கையில் ஆர்வமில்லாமல் குடும்பத்தில் ஈடுபாடின்றி, ஒருபாவமும் செய்யாத உங்கள் பிஞ்சு மகளைக்கூடப் போஷிக்க மாட்டீர்கள். இந்த நிலை உங்களது குடும்பத்தாரையும் பாதிக்கும். இன்னொரு குழந்தையைப் பெற்றுக்கொள்ளும்போது அழித்த ஒன்றை மீண்டும் உருவாக்கிய திருப்தி உண்டாகும். எந்தப் பிரச்சினையும் இல்லாத நிலையில் மீண்டும் கர்ப்பம் தரிக்கவில்லையென்றால், நீங்கள் மனதளவில் ஈடுபாடின்றி முயல்கிறீர்கள் என்று நம்புகிறேன். உங்கள் கணவரிடம் இதுவரை உங்கள் குற்றவுணர்வின் பாதிப்பைப் பற்றிப் பேசவில்லையென்றால் அழுத்தமாகப் பேசுங்கள்.
அடுத்து நீங்கள் மூவரும் ஒரு மாற்றத்துக்காக ‘ஹாலிடே ரிஸார்ட்’ ஒன்றுக்குப் போய்வாருங்கள். அந்த ரம்மியமான இடத்தில் கணவருடனும் மகளுடனும் மகிழ்வாக இருங்கள். மனம் உற்சாகமாக இருக்கையில், இம்முறை நான் அடுத்த குழந்தையை உருவாக்குவேன் என்று தீர்மானியுங்கள். எதிர்மறை எண்ணங்கள் வேண்டாம். சில வருடங்கள் முயலலாம். நீங்கள் ஆர்வத்தோடு முயன்றும் நடக்கவில்லையென்றால், காலம் கடத்தக் கூடாது. ஆதரவற்ற பச்சிளங்குழந்தையைச் சட்டரீதியாகத் தத்தெடுக்கலாமே! இதைப் பரிகாரமென்று கருதுங்கள். தத்தெடுப்பதற்கு உங்கள் குடும்பத்தில் எதிர்ப்பு வரலாம்; தைரியமாக எதிர்நோக்கிப் போராடிச் சாதியுங்கள். தத்தெடுப்பதென்பது உடனே நடக்காது. தத்தெடுப்புக்காக நீங்கள் பதிவுசெய்தால், அவர்கள் உங்களைப் பற்றிய எல்லா விவரங்களையும் சேகரித்த பின்தான் செயலில் இறங்குவார்கள். உங்கள் மகளும் இந்தச் செய்திகேட்டு மகிழ்வாள்.
வாழ்க்கைப் படகு பலத்த காற்றில் தடுமாறினால், பாய்மரத்தின் திசையைச் சரிசெய்வதுபோல், வாழ்வில் வரும் மாற்றங்களுக்கு ஏற்ப நம் திசையை மாற்றுவதுதானே நல்லது!
- கட்டுரையாளர், உளவியல் ஆற்றாளர்