

திருப்பூர் மாவட்டம் பல்லடத்துக்கு அருகில் உள்ள ஒரு சிற்றூரில் பிறந்து வளர்ந்த நாங்கள் உயர்நிலைப் பள்ளிக் கல்விக்கு நாளும் சில கிலோமீட்டர் தொலைவு நடக்க வேண்டியிருந்தது. அக்காவும் நானும் நன்றாகப் படித்தபோதும், பொருளாதார நெருக்கடி, பெண்களை விடுதிக்கு அனுப்பிப் படிக்கவைக்கும் சூழலின்மை போன்ற காரணங்களால் பள்ளி இறுதி வகுப்பு முடித்த பின் கல்லூரிக்குச் செல்ல இயலவில்லை.
எங்கள் சின்னண்ணா நூல்கள் படிப்பதை நிறைய ஊக்குவிப்பார். ஆனால், அந்தக் காலத்தில் நாங்கள் ஊரைவிட்டுத் தள்ளி ஒரு தோட்டத்தில் குடியிருந்ததால் புத்தகங்கள் கிடைப்பது அரிது. வீட்டு வேலைகளும் தோட்ட வேலைகளும் அதிகம்.
திருமணமான பின் சில ஆண்டுகள் குழந்தை வளர்ப்பில் கழிந்தன. பின் என் துணைவரின் வேலை நிமித்தம் நாங்கள் பல்லடத்துக்கு அருகில் உள்ள பொங்கலூரில் குடியேறினோம். என் மகனும் பள்ளிக்குச் சென்றதால் எனக்கு நிறைய நேரம் கிடைத்தது. எங்கள் பக்கத்து வீட்டில் இருந்த பள்ளி ஆசிரியர் நாகராசன் பல நூல்களை எனக்குப் படிக்கக் கொடுத்தார். அதிலிருந்து என் வாசிப்பு தொடர்ந்தது. அதற்குப் பின் அவ்வப்போது நாங்கள் வாங்கிய நூல்களால் இப்போது வீட்டில் ஒரு நூலகமே உள்ளது. படிக்கும் ஆர்வமுள்ள பிறரும் அந்த நூல்களைப் பயன்படுத்துவதற்கு ஏற்பாடு செய்யவேண்டும். குழந்தைகளுடன் இருக்கும்போது அவர்களுக்கு நூல்களை வாசித்துக் காட்டுகிறேன், வாசிப்பின் அருமை குறித்து விளக்குகிறேன்.
- அர. செல்வமணி, சத்தியமங்கலம்.