

சாகித்தியனுக்கு ஆச்சரியமாக இருந்தது. பொழுது நன்றாக இருட்டும் முன்பே பண்ணையார் தோட்டத்துக்குக் காவலுக்கு வந்து விடுகிறான். தோட்டத்தைச் சுற்றிச் சுற்றி வந்து கம்பால் தட்டி விரட்டுவதோடு விசிலும் அடிக்கிறான். ஆனாலும் நீண்ட வாழைக்குலையோ பெரிய பலாப்பழமோ ஒரு கட்டு வெத்தலையோ களவு போய்க்கொண்டுதான் இருந்தது.
எப்படிப் போகிறது, தோட்டத்துக்குள் என்ன நடக்கிறது என்றே அவனுக்குத் தெரியவில்லை. தலையைப் பிய்த்துக்கொள்ளலாம் போல் இருந்தது. பண்ணைக்குள் ஏதாவது மந்திரம் மாயம் நடக்கிறதா? இல்லாவிட்டால் விழித்தி ருக்கும் முழியைத் தோண்டி எடுப்பதுபோல் அவன் பண்ணையைச் சுற்றிச் சுற்றி இரவெல்லாம் நடக்கும்போதே இப்படி ஒரு களவு நடக்குமா? நேற்று இரவு அவன் பண்ணையைச் சுற்றி வரும்போதே இரண்டு பெரிய பலாப்பழங்களைக் காணவில்லை. காணாமல் போனால்கூடப் பரவாயில்லை. ஆனால், அப்படிக் காணாமல் போனது அவன் ஆண்மைக்கே இழுக்காகிவிட்டது. அவனைக் கேவலப்படுத்துவதுபோல இருந்தது இந்தக் களவு.
இதுவரையில் தான்தான் இந்த ஊருக்கே கெட்டிக்காரன், எந்தக் களவு என்றாலும் முதல் தரமாகக் கண்டுபிடிப்பவன் என்று ஊருக்குள் பேர் வாங்கியிருந்தான். அதோடு இரண்டு மூன்று களவுகளைக் கண்டுபிடித்துமிருந்தான். ஆனால், இப்போது இவனுக்கு மேல் ஒருத்தன் அதுவும் இந்த ஊரிலேயே இருக்கிறானே இந்தக் களவைக் கண்டுபிடிக்காவிட்டால் இவர்களின் மூதாதையரின் காலத்திலேயே அவர்களின் சேவைக்காகவும் காவலுக்காகவும் கொடுத்திருந்த மூணு ஏக்கர் நிலத்தையும் பிடுங்கிக்கொண்டு நடுத்தெருவில் விட்டுச் சாட்டையால் பத்து அடியும் கொடுத்து ஊரைவிட்டே விரட்டி அடிப்பேன் என்று பண்ணையார் போன மாதம் நடந்த கூட்டத்தி லேயே சொல்லிவிட்டார். ஆனாலும், சாகித்தியன் இந்த இரண்டு மாதமாகப் போய்க்கொண்டிருந்த களவைப் பிடிக்க முடியாமல் திணறுகிறான். அவனுக்கு மூன்று ஏக்கர் நிலத்தை விட்டுக்கொடுப்பதோ கசையடி வாங்கி ஊரைவிட்டுப் போவதோ பெரிதாகத் தெரியவில்லை.
வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் இருப்பான் என்பதை இதோ தன் நெஞ்சுக்கு எதிரில் கண்கூடாகக் கண்டு கொண்டிருக்கிறானே. அதுதான் அவனை அவமானப் படுத்தியது. ஒரு மாதத்துக்கு முன் வரையிலும் பண்ணையார் வீட்டுக் காவல்காரன் என்கிற பெருமிதத்தோடு தன் காதலி முத்துமணியைச் சந்தித்துக்கொண்டிருந்தவன் இப்போதெல்லாம் அவளைச் சந்திக்கவே அஞ்சுகிறான். மூன்று தெருவுக்குள் அடங்கும் ஊருக்குள் போனால் எங்கே அவளைச் சந்திக்க நேர்ந்துவிடுமோ என்று அஞ்சி வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறான்.
நாள்கள் கரைய இதோ, அதோ என்று இன்னும் கள்வனைப் பிடிப்பதற்கு நான்கு நாள்தான் இருக்கிறது. அன்று பௌர்ணமிக்கு இன்னும் ஐந்து நாள்தான் இருந்தது. நிலவு பால் பொழியலாக வெளிச்சத்தைப் பொழிந்துகொண்டிருந்தது. ஊரடங்கும் நேரம். சுற்றிலும் குருவிச் சத்தத்தைத் தவிர ஒரு சத்தத்தையும் காணவில்லை. சாகித்தியன் வெத்தலை கொடிக்கால் ஓரம் நின்றிருந்தான். மனத்துக்குள் பயமும் பதற்றமும் ஓடிக்கொண்டு இருந்தன. இவன் இங்கே காவல் இருக்க அந்தக் கள்ளன் பலா மரத்துக்கோ வாழைக்குலைக்கோ போய்விடுவானோ என்கிற பயம் சாகித்தியனைக் கொக்கிபோட்டு இழுத்துக்கொண்டிருந்தது.
அப்போது அவன் அருகே காலடிச் சத்தம் கேட்க, திருடன் வந்துவிட்டானோ என்று திரும்ப, இவன் பக்கமாக முத்துமணி நின்று கொண்டி ருந்தாள். சாகித்தியன் பதறினான். “முத்துமணி நீ எதுக்கு இங்க வந்தே?” என்று இவன் கேட்டு முடிக்கும் முன்பே இவளின் கண்ணீர் நிலா வெளிச்சத்தில் சிதறியது. “இன்னும் இரண்டு நாளைக்குள் கள்ளனைப் பிடிக்காவிட்டால் ஊரைவிட்டுப் போகப்போறீகளாமே?”.
“யாரோ உன்கிட்ட தப்பாச் சொல்லியிருக்காங்க. ஊரைவிட்டுப் போக மாட்டேன். இந்த ஊரிலேயே தற்கொலை செய்துகொள்ளப்போகிறேன்.”
“அப்படி நடக்காது. நடக்க நான் விடமாட்டேன். இன்னைக்கே அந்தக் கள்ளனை நான் பிடிச்சிக்காட்டுதேன். நானு கள்ளனைப் பிடிச்சதுமே முழங்க ஒரு குலவை போடுவேன். என் குலவச் சத்தம் கேட்டு நீரு வாரீரு. அந்தக் கள்ளனைக் கூட்டிப்போயி பண்ணையார்கிட்ட ஒப்படைச்சிரும். நாம இந்த ஊருலேயே புருசன் பொண்டாட்டியா வாழப்போறோம்” என்று சொல்லிக்கொண்டே சட்டெனப் பூசணிக்கொடி வழியே நடந்தாள் முத்துமணி.
இரண்டு நாழிகைதான் ஆகியிருந்தது. கொஞ்சமாய் வெளுத்த நிலா மேற்குத் திக்கம் நோக்கி நகன்றிருக்க, மேற்கே இருந்த மாந்தோப்பின் மூலையிலிருந்து மூச்சடங்கிய நீளமான குலவைச் சத்தம் கேட்டது. சாகித்தியன் பதறியடித்தவாறு சத்தம் வந்த திக்கம் ஓடினான். ஒரு முரட்டுக் கள்வனின் கைப்பிடிக்குள் அடங்கியிருந்தாள் முத்துமணி. அவள் மேனியெங்கும் மஞ்சள், சந்தனம், மல்லிகை, மரிக்கொழுந்து வாசம் அந்த மாந்தோப்பு முழுக்க வீசியது. அந்த முரடனின் கைக்குள் சிக்கியிருந்த முத்துமணி அவனிடமிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள துடிதுடித்தாள். தான் கொண்டு போன தடியால் அந்த முரடனை அடித்தான் சாகித்தியன். இடுப்பிலிருந்த அரிவாளால் வெட்டவும் செய்தான். ஆனால், அந்த முரட்டுக் கள்வனின் உயிர்தான் பிரிந்தது. கூடவே முத்துமணி உயிரும்தான்.