

கரோனாவுக்குப் பிறகு சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும் போக்கு அதிகரித்துள்ளது. குழந்தை வளர்ப்புப் பயிற்சி, பாலியல் கல்வி, கணவன் - மனைவி உறவு, கர்ப்ப கால உளவியல் ஆலோசனை, இயற்கை மருத்துவம், வீட்டிலேயே பிரசவம் என எல்லாவற்றுக்கும் ஆலோசனைகளை வழங்குபவையாக சமூக வலைதளங்கள் உருமாற்றம் அடைந்திருக்கின்றன.
இவை அல்லாமலும் பல ஆலோசனை களுக்கும் மக்கள் சமூக வலைதளங்களைச் சார்ந்திருக்கத் தொடங்கியிருக்கிறார்கள். சமூக வலைதளம் வழியாக இம்மாதிரியான ஆலோசனைகளை வழங்கி மக்கள் மத்தியில் ‘தாக்கம் செலுத்துபவர்க’ளும் (Influencers) தோன்றிவருகின்றனர். இவர்கள் எல்லாம் முறைப்படி பயிற்சி பெற்றவர்களா, அங்கீ கரிக்கப்பட்ட பயிற்றுநர்களா என்கிற அக்கறை யாருக்குமே இல்லை. மேல் நடுத்தர வர்க்கத்தினர் தங்கள் குழந்தை களுக்கு ‘ஐடியல்’ என்னும் நிறைவான மேம்பட்ட வாழ்க்கையை வழங்கப் பெரும் தொகையைச் செலவிடத் தயாராக இருக்கிறார்கள். இத்தகைய பெற்றோர்களைச் சுற்றித்தான் ‘தாக்கம் செலுத்துபவர்க’ளும் வட்டமிடுகின்றனர். இதில் பிரச்சினை என்ன வென்றால், குழந்தை வளர்ப்பில் ‘தாக்கம் செலுத்துபவர்கள்’ கூறும் ஆலோசனைகளை எந்த அளவு நம்புவது என்பதுதான்.
சர்ச்சையில் இன்ஸ்டாகிராம் பிரபலங்கள்
சமீப காலமாக, குழந்தை வளர்ப்புப் பயிற்சிகளை வழங்கும் இன்ஸ்டகிராம் பிரபலங்கள், குறிப்பாகப் பெண்கள் சர்ச்சையில் சிக்கிவருகின்றனர். காரணம், குழந்தை வளர்ப்பு பற்றிப் பயிற்சி வழங்கும் இவர்கள் அதற்கான ஆலோசனைகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், தங்களுடைய சந்தைப் படுத்துதலைச் (Marketing) சமூக வலை தளங்களில் பரவலாக்க, நிபுணத்துவம் இல்லாத பிற துறைகளிலும் ஆலோசனை வழங்குகின்றனர்.
‘தாக்கம் செலுத்துபவரான’ ஒரு பெண், குழந்தை வளர்ப்புப் பயிற்சிகளை வழங்குவதில் இன்ஸ்டகிராமில் பிரபலமாக இருப்பவர். பாலியல் கல்வி சார்ந்த தனது பயிற்சி வகுப்பில் பங்கெடுத்த தாய் ஒருவரிட மிருந்து வந்திருந்த குறுஞ்செய்தியைத் தன் சமூக வலைதளப் பக்கத்தில் அவர் பகிர்ந்திருந்தார். அதில், அந்தத் தாய் தன்னுடைய எட்டு வயது மகளுக்கு ஆபாச படக்காட்சிகளைக் காண்பித்ததாகவும், அதன் மூலம் பாலியல் உறவு சார்ந்த விளக் கத்தை மகளுக்கு விளக்க முடிந்ததாகவும் குறிப்பிட்டி ருந்தார். அந்தப் பதிவு தற் போது சமூக வலைதளங் களில் விவா தத்தை ஏற் படுத்தியுள்ளது. பலரும் இப்பதிவுக்குக் கண்டனங்களைத் தெரிவித்தனர்.
பாலியல் கல்வி என்கிற பெயரில் குழந்தைகளுக்கு ஆபாசப் படக் காட்சிகளைப் பெற்றோர் எப்படிக் காண்பிக்கலாம், இது சட்டப்படி குற்றமல்லவா, இந்தக் குற்றத் தைப் புரிந்த தாயும் அதற்கு உடந்தையாக இருந்த ‘தாக்கம் செலுத்துபவரான’ பெண்ணும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண் டும் எனக் குழந்தை நல மருத்து வர்களும் நெடிட்டிசன்களும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இதுவா பாலியல் கல்வி?
பதின்பருவக் குழந்தைகளுக்குப் பாலியல் கல்வி சார்ந்த புரிதல் நிச்சயம் தேவை. அதன் அடிப்படையில்தான் பாடத் திட்டத்தில் பாலியல் கல்வி சேர்க்கப்படுவதற்கான முக்கியத்துவத்தைக் கல்வியாளர்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்திவருகின்றனர். ஆனால், பாலியல் கல்விப் பயிற்சி என்று கூறி பத்து வயதைத் தாண்டாத சிறார்களுக்கு ஆபாசக் காட்சிகளைக் காட்டுவதை எப்படி ஊக்கப்படுத்த முடியும்? இத்தகைய படங்களைப் பார்க்கும் குழந்தைகளின் மன ஓட்டம் என்னவாக இருக்கும்? அத்தருணத்தை அந்தக் குழந்தைகள் எப்படிக் கடப்பார்கள்?
இது குறித்தெல்லாம் ‘தாக்கம் செலுத்து பவர்கள்’ கவலைப்படுவதில்லை. தங்களைப் பிரபலப்படுத்திக் கொள்வதற்காகச் சமூகப் பொறுப்பில்லாமல், தவறான ஆலோசனைகள் வழங்கும் போக்கே இவர்களிடம் அதிகரித்து வருகிறது.
பெற்றோர்கள் கவனத்துக்கு
நகைச்சுவைக் காட்சி ஒன்றில் நடிகர் வடிவேலு மூட்டைப்பூச்சியைக் கொல்லும் நவீன மெஷின் என்று சிறிய வடிவிலான ஆட்டுக் கல்லை விற்பார். மக்களும் ‘நவீன’ என்கிற சொல்லை நம்பி அப்பொருளை வாங்கிச் செல்வார்கள். இதுதான் பெரும்பாலான குழந்தை வளர்ப்புப் பயிற்சி வகுப்புகளிலும் நடக்கிறது.
குழந்தைகளுக்கு எப்படிப் பால் புகட்டுவது என்பதில் தொடங்கி எப்போது பால்குடியை நிறுத்துவது என்பது வரையிலான அடிப்படை விஷயங்களுக்குக்கூட ‘தாக்கம் செலுத்துபவர்க’ளின் ஆலோசனைகளைச் சார்ந்து இந்தத் தலைமுறை பெற்றோர்கள் இருக்கிறார்கள். இதில், தாய் - சேய் உறவின் புரிதல்கள் அனுபவத்தின் அடிப்படையில் யதார்த்தமாகத் தோன்றக்கூடியவை. அம்மாக்களும் பாட்டிகளும் அத்தகைய அனுபவத்திலேயே குழந்தைகளை வளர்த்திருக்கக்கூடும். ஆனால், ‘தாக்கம் செலுத்துபவர்கள்’ குழந்தைகள் நலன் சார்ந்த பெற்றோர்களின் சுய அனுபவங்களையும் தேடல்களையும் பயிற்சி வகுப்புகள் என்கிற பெயரில் தடுக்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.
சமூக வலைதளங்களில் ‘தாக்கம் செலுத்துபவர்கள்’ என்று தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் பலரும் சந்தைப்படுத்துதலைத்தான் முழுமையாக நம்பிச் செயல்படுகிறார்கள். அதற்காக கார்ப்பரேட் குழுக்களும் இயங்குகின்றன. எனவே, ‘தாக்கம் செலுத்துபவர்களைப்’ பின்தொடர்வதில் கூடுதல் கவனத்துடன் பெற்றோர் இருக்க வேண்டும்.
தீர்வு என்ன?
குழந்தை வளர்ப்பில் பயிற்சி வகுப்புகள் அவசியம்தானா இல்லை இவை எல்லாம் ஆடம்பரமா என்கிற கேள்வியை இன்றைய தலைமுறை பெற்றோர்கள் தங்களுக்குள்ளேயே கேட்டுக்கொள்ள வேண்டும். பெற்றோர்கள் குழந்தைகளுடன் நேரம் செலவிடும் பட்சத்தில், குழந்தைகளுடன் நட்புரீதியான உரையாடல்களைத் தொடரும்பட்சத்தில் குழந்தைகள் தங்கள் உடல் சார்ந்தும் பதின்பருவ மாற்றங்கள் சார்ந்தும் தங்களுக்குள் எழும் சந்தேகங்களைப் பெற்றோரிடமே எந்தவிதத் தயக்கமும் இன்றி முன்வைக்கும் சூழல் தன்னியல் பாகவே உருவாகும். ‘தாக்கம் செலுத்து பவர்களை’ நாடிச் செல்வதற்கான தேவையே ஏற்படாது. குழந்தைகள் வேறு ஏதேனும் உளவியல் சிக்கலால் பாதிக்கப்பட்டிருப்பதாக உணரும்பட்சத்தில் தகுதியான மன நல ஆலோசகர்களையோ மருத்துவர்களையோ நாட வேண்டுமே தவிர, பிரபலங்களின் பின்னால் செல்வது ஆபத்துக்குத்தான் வழிவகுக்கும். மக்களைத் தவறாக வழிநடத்தும் ‘தாக்கம் செலுத்துபவர்கள்’, தங்கள் சொந்த அனுபவத்தைப் பகிர்வதாகச் சொல்லி எளிதாகத் தப்பித்துக்கொள்கிறார்கள். இது போன்றவர்களுக்கும் ஏதேனும் ஒரு வகையில் கடிவாளம் வேண்டும்.