

மற்றவரைத் தன் உடைமையாகப் பார்க்கும் மனநிலை காதலர்களிடமும் இணையர்களிடமும் மட்டும் இருப்பதில்லை. நம் பிள்ளைகளும் இதுபோன்ற மனநிலையில் சிக்கித்தவிக்கிறார்கள். நாமாவது வளர்ந்துவிட்டோம். திராணி உள்ளவர்கள். மற்றவரின் உடைமையாக நாம் இருக்க வேண்டுமா, வேண்டாமா என்று ஒரு முடிவெடுத்தாவது செயல்படலாம். ஆனால், எல்லாவற்றுக்கும் நம்மையே அண்டியிருக்கும் பிள்ளைகளின் கதி? இப்படி உடைமையாக வளர்க்கப்படும் பிள்ளைகளே மீண்டும் மீண்டும் வளர்ந்து தங்கள் வாழ்வில் இணையாக வருபவர்களையும், தங்கள் பிள்ளைகளையும் தன் உடைமையாகப் பாவிக்க முற்படுகிறார்கள். இந்தச் சுழற்சி நிற்கவேண்டுமானால் நாம் சில உண்மைகளைப் புரிந்து ஏற்றுக்கொள்ளும், செயல்படுத்தும் மனநிலையை உருவாக்க வேண்டும்.
‘நம் பிள்ளைகள் நம் மூலம் பிறந்தவர் களேயன்றி நமக்காகப் பிறந்தவர்கள் அல்லர்’ என்கிற கலீல் ஜிப்ரானின் ஒரு வாசகம் மிகவும் பிரபலமானது. இதுபோன்ற சில வாசகங்கள் படிப்பதற்கு மட்டுமே எனப் பலர் நினைத்துவிடுவதுதான் துயரமே. திருமணம் புரிந்து இன்னோர் உயிருடன் சேர்ந்து வாழ்வதற்கு எப்படி இங்கே தகுதிகள் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லையோ அதேபோல் பிள்ளை பெற்று வளர்ப்பதற்கும் தகுதிகள் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. பிள்ளை பிறந்தால் அவர்கள் தகுதியானவர்கள், ஒருவேளை பிறக்காவிட்டால் அவர்கள் தகுதியானவர்கள் அல்லர். இவ்வளவுதான் அளவீடு. இயற்கையாக நடக்கும் ஒன்றுக்குப் பெருமைப்பட்டுகொள்வது ஏதோ முயற்சியெடுத்துச் சாதித்துவிட்டதைப் போலச் சொல்வது அறிவீனம். பிள்ளை பிறப்பு என்பது இயற்கையானது. பிள்ளைகளை எப்படி வளர்க்கிறோம் என்பதில்தான் இருக்கிறது நம் சாதனை.
ஊருக்காக வளர்க்கப்படும் பிள்ளைகள்
நாம் எப்படி வளர்க்கிறோம் பிள்ளைகளை? நம் உடைமைகளாக. தொப்புள்கொடி அறுபட்டதும் அது தனி உயிர், தனக்கான வாழ்வை வாழவே அது இங்கே வந்திருக்கிறது என்கிற உண்மை நமக்கு உறைப்பதேயில்லை. நாம் விரும்பியோ, இந்தச் சமூகத்தின் கண்களில் நாங்களும் பிள்ளை பெற்றுவிட்டோம் என்கிற பெருமைக்கோ, உற்றார் உறவினர் நம்மைத் தூற்றுவார்கள் என்கிற பயத்தாலோதான் பலரும் பிள்ளைகளைப் பெறுகிறோம். காரணம் எதுவாக இருப்பினும் நாமாகத்தான் அவர்களை இவ்வுலகுக்குக் கொண்டுவருகிறோம். அதனால், அவர்கள் வளர்ந்து அவர்கள் வாழ்வை அவர்கள் பார்த்துக்கொள்ளும் வரை அவர்களுக்கான தேவைகளை நம் சக்திக்கு உள்பட்டுப் பூர்த்திசெய்யவேண்டியது நம் கடமை.
ஆனால், நடப்பது என்ன? பிள்ளை பெற்றுக்கொள்வது நாங்களும் பெற்றோர் ஆகிவிட்டோம் என்கிற பெருமைக்கு. பிள்ளை வளர்ப்பதும் மற்றவர் மெச்ச வேண்டும் என்கிற பெருமைக்குத்தான். நாம் உட்கார் என்றால் அது உட்கார வேண்டும், நாம் சாப்பிடு என்றால் அது சாப்பிட்டாக வேண்டும். அதன் பசிக்கு இல்லை உணவு என்பது, நம் வேலையை முடிக்கவே. வெயில் காயும், வியர்த்து வழியும். ஆனால், வெளியே அதுவும் முக்கியமாக விசேஷங்களுக்குப் போகும்போதெல்லாம் பட்டுச் சட்டை, நைலான் சட்டை என்று விதவிதமாக நம் பெருமையைப் பறைசாற்ற அதற்கு உடையணிவிக்க வேண்டும். உடலின் எல்லாப் பாகங்களிலும் அது குடைந்து குழந்தைகளுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும். குழந்தை அழும். அதனால் என்ன?
வெற்றுப் பெருமை
ஓரிரு வயதானதும் நாம் பெருமை கொள்ள வீட்டுக்கு வருபவர்களிடமெல்லாம் குழந்தை பாடிக் காட்ட வேண்டும், ஆடிக் காட்ட வேண்டும். இவற்றைச் செய்வது குழந்தைக்குப் பிடிக்கவில்லை என்றாலும் கெஞ்சியோ, மிரட்டியோ செய்யவைத்தால்தான் நமக்குப் பெருமை. அதுவாகப் பிடிக்கிறதென்று எல்லாரிடமும் சென்றுவிடக் கூடாது. நமக்குப் பிடித்தவர்களிடம், குழந்தைக்குப் பிடிக்காதவர்களாக இருந்தாலும் போவதற்கு மறுப்பு தெரிவிக்கக் கூடாது. குழந்தைக்கென ஓர் உடல், உணர்வு, மூளை இருப்பதை நாம் உணரவே கூடாது. அப்படி உணர்ந்து செயல்பட்டால், அது உருப்படாமல் போய்விடும் என்று முடிவே செய்துவிடுவது. நம்மால் அவர்களுக்கு என்னவெல்லாம் தீமை விளைவிக்க முடியுமோ அதையெல்லாம் நாம் செய்யலாம். ஆனால், அவர்களாகத் தமக்கென ஒரு முடிவு எடுத்துச் செயல்பட்டால் பெற்றோரை மதிக்கவில்லை, பெரியோரை அலட்சியப்படுத்துகிறார்கள் என்று பேச்சு.
நமக்கு நம் பிள்ளைகளின் விருப்பு வெறுப்பு முக்கியமில்லை. வருகிறவர் போகிறவரெல்லாம் நம் பிள்ளை வளர்ப்பை மெச்ச வேண்டும். அது மட்டுமே முக்கியம். இப்படித்தான், இந்த நம் மனநிலையால்தான் சிறு பிள்ளைகள் மீதான பாலியல் அத்துமீறல்கள் பெரும் பாலும் நம் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாலோ இல்லை நாம் மதிப்பும் நம்பிக்கையும் வைத்திருக்கும் நம் குடும்பத்துக்கு நெருக்கமானவர்களாலோ நடக்கிறது.
விருப்பத்தைக் கேட்கிறோமா?
வெளியே போகும்போது குழந்தைகள் ஜாக்கிரதையாகப் போய் வரவேண்டுமே என்று கவலைப்படும் நாம்தான் வீட்டுக்குள் அவர்களுக்குப் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த தவறிவிடுகிறோம். நாம் நல்லவர்கள் என நினைப்பவர்கள் அனைவரும் பிள்ளைகளிடம் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாது. அதனால்தான் நாம் நம் பிள்ளைகளின் உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். குழந்தைக்கு ஒன்றும் தெரியாது என்று நிராகரிக்கக் கூடாது. ஒரு குழந்தை அது ஆறு மாதக் குழந்தையாக இருக்கலாம், ஒரு வருடக் குழந்தையாக இருக்கலாம் இல்லை அதற்கு மேலும் இருக்கலாம். நீங்கள் கைகாட்டும் மனிதரிடம் உங்கள் குழந்தை போகாமல் முரண்டுபிடித்தால் அவர் எவ்வளவு நெருக்கமானவராக இருந்தாலும், உங்களுக்கு வேண்டப்பட்டவராக இருந்தாலும், குழந்தையின் உணர்வை மதித்து அவரிடம் போயே தீரவேண்டும் என வற்புறுத்துவதை விட்டு, ‘குழந்தைக்கு விருப்பமில்லை. அதை நான் வற்புறுத்த முடியாது’ என்று அவரிடம் சொல்லுங்கள்.
பிள்ளைகள் நம் மேல் இருக்கும் அன்பிலும் நம்பிக்கையிலும்தான் மகிழ்வாக வாழ்கின்றனர். நாமே குழந்தைக்கு விருப்பமில்லாத செயலை மற்றவருக்காக அதனிடம் திணிக்கும்போது நம்மீதான நம்பிக்கையைக் குழந்தை இழந்துவிடும். பாதுகாப்பின்மை மனதில் தொற்றிக்கொண்டுவிடும். நீங்கள் மதிப்பு வைத்திருப்பவர் பிள்ளைக்கு ஒவ்வாத ஒரு தொந்தரவைக் கொடுக்கும்போது அதை நம்மிடம் சொல்லத் தயங்கும். பெரும்பாலும் சொல்வதில்லை என்றே ஆய்வுகள் அறிவிக்கின்றன.
சிறிது வளர்ந்து மாசு நிறைந்த இந்த உலகில் வாழக் கற்றுக்கொள்ளும் வரை பிள்ளைகள் இயற்கைத்தன்மையுடன், இயற்கை உணர்வுடன், இயற்கை உந்துதல்களுடன்தாம் வாழ்கின்றன. அவற்றுக்கான ஒப்புமையும் ஒவ்வாமையும் அந்த இயற்கை உணர்வுடன்தான் ஒன்றியிருக்கும். அந்த உணர்வுகள் நமக்குப் புரியாவிட்டாலும் அவற்றை மதித்து வாழ நாம் கற்றுக்கொள்வதின் மூலம், நம் பிள்ளைகளுக்கு நாம் நன்மை செய்யலாம். பிள்ளை வளர்ப்பென்பது பிள்ளை விளையாட்டல்ல. அறிந்து, தெளிந்து வாழ இன்னும் நிறைய இருக்கிறது.
(விவாதிப்போம் மாற்றுவோம்)
கட்டுரையாளர் எழுத்தாளர்