Last Updated : 19 Nov, 2017 11:43 AM

 

Published : 19 Nov 2017 11:43 AM
Last Updated : 19 Nov 2017 11:43 AM

முகங்கள்: அழகிய தமிழ் மகள்

கடந்த வாரம் கொல்கத்தாவில் நடந்த சர்வதேசத் திரைப்பட விழாவில் இந்தியா, இங்கிலாந்து, மொரோக்கோ, சர்வதேசம் உள்ளிட்ட பல பிரிவிகளின் கீழ் படங்கள் திரையிடப்பட்டன. அவற்றுள் தமிழ்ப் படம் ஒன்று அங்கிருந்த பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்தப் படம் இந்தியப் பிரிவில் முதல் பரிசையும் பெற்றுள்ளது. அந்தப் படத்தில் நடித்துள்ள கதாநாயகியின் நடிப்பும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தொலைக்காட்சிகளில் நடித்திருந்தாலும் அந்தக் கதாநாயகிக்கு இதுதான் முதல் படம். அந்தப் படம் ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கிய ‘டூலெட்’. அந்தக் கதாநாயகி அழகிய தமிழ் மகள். அப்படித்தான் இப்போது அழைக்கப்படுகிறார் ஷீலா ராஜ்குமார். ஜீ தமிழ்த் தொலைக்காட்சியில் தினமும் ஒளிபரப்பாகும் ‘அழகிய தமிழ் மகள்’ தொலைக்காட்சித் தொடர் அவருக்கு அந்தப் பெயரைத் தேடிக் கொடுத்திருக்கிறது.

கதைகேட்டு வளர்ந்தவர்

ஷீலாவின் சொந்த ஊர் ஜெயங்கொண்டம். பள்ளிப் படிப்பை அந்த ஊரில்தான் படித்திருக்கிறார். கிறிஸ்துவரான ஷீலாவின் குடும்பத்தினர்தான் அந்த ஊரின் கிறிஸ்த்துவப் போதனைகளை நிகழ்த்துவார்கள். அப்படி கிறிஸ்த்துவப் பாடல்கள், கதைகள் கேட்டு அவர் வளர்ந்துள்ளார். அதனால் நிகழ்த்து கலை மீது ஷீலாவுக்கு ஆர்வம் வந்துள்ளது.

பள்ளி அளவிலான போட்டிகள் பலவற்றிலும் பரிசுகள் பெற்றுத் தான் யார் என அடையாளம் கண்டிருக்கிறார். அதனால் கல்லூரி வந்தபோது அவர் எந்தக் குழப்பமும் இல்லாமல் பரதம் பயில முடிவெடுத்தார். ஆனால், பெற்றோரோ பெண் பிள்ளைகளுக்கு ஏற்ற படிப்பு ‘பி.காம்., பி.ஏ.’ எனப் படிக்க வற்புறுத்தியிருக்கின்றனர். திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரியில் பி.காம். படிப்பில் கட்டாயப்படுத்திச் சேர்த்தும்விட்டார்கள். ஆனால் ஷீலா விடவில்லை.

பத்து நாட்களுக்கு மேல் தொடர் உண்ணாவிரதத்தில் தன் விருப்பத்தில் விடாப்பிடியாக இருந்திருக்கிறார். இருமனதாகப் பெற்றோரும் சம்மதம் தெரிவிக்க, திருச்சி கலைக்காவிரி கலைக் கல்லூரியில் இளநிலை பரத நாட்டிய வகுப்பில் சேர்ந்தார். அங்கேயே முதுநிலையும் முடித்துத் தேறியிருக்கிறார். பரதநாட்டியம் பயின்றதன் மூலம் பல்வேறுவிதமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் பாவனைகளைக் கற்றுள்ளார். அவரது திறமையைக் கண்ட கல்லூரிப் பேராசிரியர், குறும்படங்களில் நடிக்க ஊக்கப்படுத்தியுள்ளார்.

வாழ்க்கையை மாற்றிய வாய்ப்பு

அதற்குப் பிறகு குறும்படங்கள் பலவற்றில் நடித்துள்ளார். இவர் நாயகியாக நடித்த குறும்படங்கள் ‘நாளைய இயக்குநர்’ போட்டியில் பரிசு பெற்றுள்ளன. அப்படி நாடகக் கலைஞர் தம்பிச்சோழன் இயக்கிய குறும்படத்தில் நடிக்கும் வாய்ப்பும் அவருக்கு வந்துள்ளது. “அந்த வாய்ப்பு எனக்கு முக்கியமானது. சோழன் நாடக ஆளுமையாக இருப்பதால் அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது. மேலும் அது என் வாழ்க்கையை மாற்றிவிட்டது” எனச் சிரிக்கிறார் ஷீலா. தம்பிச்சோழனை வாழ்க்கைத் துணையாக்கிக் கொண்டதுதான் அவர் சிரிப்புக்கான காரணம். நவீன நாடக, நவீன இலக்கிய அறிமுகமெல்லாம் சோழன் மூலம் அவருக்குக் கிடைத்த பிற மாற்றங்கள்.

தம்பிச்சோழன் மூலமாகப் பிரளயன் கலைக் குழுவில் சேர்ந்து நவீன நாடகம் பயின்றார். மூத்த நாடகச் செயற்பாட்டாளர் ந.முத்துசாமியின் ‘இங்கிலாந்து’ நாடகத்தில் பிரளயன் இயக்கத்தில் நடித்தது, அவருக்குச் சிறந்த அனுபவத்தைத் தந்துள்ளது. தனது நாடகத்தில் நடிக்கும் நடிகர்கள் பற்றி அபூர்வமாக வாய் திறக்கும் முத்துசாமி, ஷீலாவின் நடிப்பை அன்று பாராட்டியிருக்கிறார்.

வெள்ளித்திரையும் சின்னத்திரையும்

நாடகங்களில் சாதித்த ஷீலாவுக்கு ‘டூலெட்’ படத்தின் நாயகி வாய்ப்பு கிடைத்தது. கவிஞர் அய்யப்பமாதவன் இந்தப் படத்துக்காக ஒளிப்படங்கள் எடுத்துள்ளார். அந்த ஒளிப்படங்களே ஷீலாவின் பாவனையைச் சொல்லியிருக்கின்றன. அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தப் படத்தில் இவருடன் கவிஞர் விக்கிரமாதித்தனின் மகன் சந்தோஷும் நடித்துள்ளார். நடிகர்கள், நாடக ஆசிரியர் என்ற சூழலில் பழகிய ஷீலாவுக்குத் தொழில்நுட்பக் கலைஞர்கள் உட்பட பலரது கூட்டு முயற்சியிலான சினிமா புது அனுபவத்தைத் தந்துள்ளது.

மாற்று சினிமா ஆளுமையான அம்ஷன் குமாரின் ‘முள்ளுக்கா’டிலும் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கிறார். நாடகம், மாற்று சினிமா எனத் தொடர்ந்த ஷீலா இப்போது தொலைக்காட்சித் தொடர் என்கிற இன்னொரு தளத்துக்குச் சென்றிருக்கிறார். இயக்குநர் கவிதா பாரதியின் ‘அழகிய தமிழ் மகள்’ தொலைக்காட்சித் தொடரில் நாயகியாக நடித்துவருகிறார். அதன் மூலம் பரவலான கவனம் பெற்றுள்ள ஷீலா, “அர்ச்சனா, ஷோபனா, சரிதா போன்ற நடிகைகள்தான் எனக்கு முன்மாதிரி. பார்வதி நடித்த ‘டேக் ஆஃப்’ என்ற மலையாளப் படத்தைப் பார்த்தேன். அதுபோன்ற வாய்ப்புதான் என் லட்சியம்” என்கிறார். தமிழ் சினிமா அதை ஏற்படுத்தித் தரட்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x