

#லைசென்ஸ், இன்சூரன்ஸ் போன்ற ஆவணங்களின் நகல்களை எப்போதும் வண்டியில் வைத்திருக்க வேண்டும்.
#அவசியம் ஹெல்மெட் அணிய வேண்டும்.
#சுடிதார் அணிந்து செல்லும்போது துப்பட்டாவைப் பின்னால் இழுத்துக் கட்டிய பிறகே வண்டியில் உட்காருங்கள். இல்லையெனில் காற்றில் பறந்து, சக்கரத்தில் சிக்கக்கூடும்.
#பெட்ரோல் ‘ரிசர்வ்’ என்று காட்டினால் உடனே பெட்ரோல் போட்டுக்கொள்வது நல்லது. பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று அலட்சியப்படுத்தினால், வண்டியைத் தள்ளிச் செல்ல நேரிடலாம்.
#வாரம் ஒரு முறை இரண்டு சக்கரங்களிலும் காற்றடிக்கத் தவற வேண்டாம். சரியான காற்றழுத்தம் பெட்ரோல் பயன்பாட்டைக் குறைவாக வைக்கும்.
#புறப்படும் நேரத்தைவிட சற்று முன்னதாகக் கிளம்பினால், போக்குவரத்து நெரிசலில் சிக்கினாலும் பதற்றம் இல்லாமல் இருக்கலாம்.
#எடுத்ததுமே வண்டியின் வேகத்தைக் கூட்டாமல் படிப்படியாக வேகத்தை அதிகரிப்பது நல்லது.
#வாகனத்தை ஓட்டிக்கொண்டிருக்கும்போது செல்போன் அடித்தால் எடுக்கக்கூடாது. முக்கிய அழைப்பாக இருந்தால், வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டுப் பேசுங்கள்.
#இரவு நேரத்தில் வண்டி ரிப்பேராகிவிட்டால், உங்கள் வீட்டுக்குத் தொடர்புகொண்டு தகவல் தெரிவிப்பீர்கள். உங்கள் வீட்டில் இருந்து யாரும் வரமுடியாத நிலையில் இருந் தாலோ, அருகில் மெக்கானிக் கடை இல்லாமல் இருந்தாலோ, பக்கத்தில் உள்ள வீட்டில் உங்கள் நிலையை விளக்கி வண்டியை விட்டுவிட்டு வரலாம்.
#நீங்கள் வீடு திரும்பும் வழியில்தான் உங்கள் அலுவலகத் தோழியின் வீடும் என்றால், அவரையும் உங்களோடு அழைத்துச் செல்லுங்கள். முடிந்தால் பஸ்ஸுக்கான பணத்தை அவரிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம், தவறில்லை. சிறு தொகையாக இருந்தாலும் நிச்சயம் அதுவும் சேமிப்பே.
- கோ.சு. சுரேஷ், வடவள்ளி, கோயம்புத்தூர்.