

சென்னையில் படிக்கும் கல்லூரி மாணவி நான். கிராமப்புறத்திலிருந்து வந்த எனக்கு இங்கே எதைப் பார்த்தாலும் மிரட்சியாக இருக்கிறது. என் நடை, உடை, தோற்றம் போன்றவை குறித்த தாழ்வு மனப்பான்மை அதிகமாக இருக்கிறது. ஆங்கிலம் தெரியாதது என்னை அச்சுறுத்துகிறது. யாருடனும் நட்பாகப் பழக முடியவில்லை. இதற்குத் தீர்வு சொல்லுங்கள்.
- சத்யா, செங்கல்பட்டு.
அன்பான தோழி, உங்களுக்கு இருக்கும் மிரட்சி, தாழ்வு மனப்பான்மை, தயக்கம் இவை அனைத்தும் கிராமத்திலிருந்து நகரத்துக்குப் படிக்கவரும் பெண்கள் பலருக்கும் இருக்கும். கலாச்சாரத் தாக்கத்தினால் ஏற்படும் அதிர் வலைதான் இந்த ‘ரியாக்ஷன்’. நகரத்துக் குடும்பச் சூழ்நிலை, பேச்சு வழக்கு, வாழ்வுமுறை இவையெல்லாம் கிராமச் சூழலைவிட முற்றிலும் மாறுபட்டிருப்பதால், அதில் பழகும்வரை உங்களுக்குப் பொருந்தாமல் இருக்கும். அதைக் கடந்துவர இதோ சில வழிமுறைகள்:
சுயமதிப்பு:
மற்றவர்களைவிட நீங்கள் எந்த விதத்திலும் குறைவாக இல்லை என்று நம்புங்கள். உங்கள் மதிப்பெண்கள் உங்கள் அறிவுத்திறனைப் பறைசாற்றும். சில மாணவிகளைவிட நீங்கள் புத்திசாலியாக இருக்கலாம்! சில நகர்ப்புற மாணவிகள் தங்கள் தகுதியை மிகைப் படுத்திக் காட்டிக்கொள்ள விரும்பக்கூடும். அவர்களது நுனி நாக்கு ஆங்கிலம், மேலைநாட்டு உச்சரிப்பு, ஆடம்பர அலங்காரம் போன்றவற்றையெல்லாம் பார்த்து மிரண்டுபோக வேண்டாம். ஆப்பிரிக்க அமெரிக்கக் குழந்தை ஒன்று, ஹீலியம் பலூன் விற்பவரின் காதில் மெதுவாக, ‘கறுப்பு பலூனும் உயரே எழும்புமா?’ என்று கேட்டானாம்; அவர், ‘பலூனின் நிறம் முக்கியமில்லை தம்பி. அதன் உள்ளே இருக்கும் காற்றுதான் முக்கியம்’ என்று சொன்னராம். உங்கள் தகுதி என்ன என்பதுதான் முக்கியம். நடை, உடை, தோற்றத்தை வைத்து உங்களைக் குறைத்து மதிப்பிடுகிறீர்கள். அதனால்தான் தாழ்வு மனப்பான்மை. உங்களிடம் உள்ள நல்லவற்றைத் தினமும் நினைவூட்டும் வகையில் ஒரு காகிதத்தில் பட்டியலிடுங்கள். நீங்கள் உங்களை மதிக்காவிட்டால் பிறரும் மதிக்க மாட்டார்கள்.
சீரமைப்பு (Grooming)
மாணவிகளில் ‘ஷோ ஆஃப்' இல்லாத ஒரு மாணவியிடம் நட்பை வளர்த்துக்கொள்ளுங்கள். அவளிடம் நாகரிக ஆடைகளைப் பற்றித் தெரிந்துகொண்டு, உங்கள் ‘பட்ஜெட்’டுக்கு ஏற்ப இரண்டு ‘செட்’ ஆடைகளை வாங்கிக்கொள்ளுங்கள். உங்கள் முகம், கை, கால், முடி இவற்றை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள கிராமத்து அழகு சாதனங்களை உபயோகியுங்கள். உங்களைப் பார்த்தவுடன், ‘அட நேர்த்தியாக அலங்கரித்துக்கொண்டிருக்கிறாளே’ என்று பிறர் புருவத்தை உயர்த்துவார்கள்!
ஆங்கிலப் பேச்சு
தப்போ, சரியோ தயக்கமின்றி உங்கள் தோழியிடம் ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தால்தான் சரளமாகப் பேசவரும். சுலபமாக ஆங்கிலத்தில் பேசிப் பழகச் சில ‘ஆப்'கள் இருக்கின்றன. தொடர்ந்து இவற்றைச் செய்தால் மூன்றே மாதங்களில் நீங்கள் தயாராகிவிடுவீர்கள், வாழ்த்துகள்.
நான் காதல் மணம் புரிந்தவள். மகள் பத்தாம் வகுப்பு படிக்கிறாள். தனியார் அலுவலகத்தில் மேலதிகாரியாக இருக்கும் என் கணவர், எனக்கு எந்தக் குறையும் வைக்காதவர். சில நாள்களாக அவரது போக்கு சரியில்லையோ எனத் தோன்றுகிறது. வீட்டுக்கு வந்த பிறகும்கூட செல்போனும் கையுமாக இருக்கும் அவர், என்னிடம் எதையோ மறைக்கிறார் எனத் தோன்றுகிறது. பணத்தை நிறைய செலவழிக்கிறார், கணக்கு கேட்டால் ஏதேதோ சொல்லி மழுப்புகிறார். சில நாள்கள் வீட்டுக்கு மிகத் தாமதமாக வருகிறார். வேறு யாருடனாவது இவருக்குப் பழக்கம் ஏற்பட்டிருக்குமோ என்று பயமாக இருக்கிறது. நேரடியாகக் கேட்கவும் முடியவில்லை. என்ன செய்வது எனவும் தெரியவில்லை. இதிலிருந்து விடுபட வழிகாட்டுங்களேன்.
- பெயர் வெளியிட விரும்பாத வாசகி.
அன்பான தோழியே, நீங்கள் எவ்வளவு கவலையில் இருக்கிறீர்கள் என்று புரிகிறது. கவலைப்படுவதால் எதுவும் சரியாகப் போவதில்லை. உங்கள் உடல், மன நலம்தான் வீணாகும். மனதை அமைதிப்படுத்திச் சிந்தியுங்கள். நிரூபணம் எதுவும் கிடைக்காதவரை உங்கள் கணவரை எதுவும் கேட்க முடியாது. நீங்கள் சந்தேகப்படுவதை வெளிப்படுத்தினால், (வேறிடத்தில் உறவு உண்மையிலேயே இருந்தால்) நீங்களே மேலும் அவரை அங்கே தள்ளிவிடுவீர்கள்; அது நல்லதல்ல. வேறு உறவு இருந்தாலும் இல்லாவிட்டாலும் நீங்கள் அவரை உங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் இறங்குங்கள். இணக்கமாக அமையும் ஒரு நேரத்தில் நட்புறவோடு, கரிசனத்துடன் பேசுங்கள். ‘நான் உங்களை ரொம்ப ‘மிஸ்' பண்ணுகிறேன், தெரியுமா? நம்ம பெண்ணும் அதையேதான் சொல்கிறாள். அதிக மன அழுத்தத்தோடு இருக்கிறீர்களா? முன்னாடி நாம ஒண்ணா உட்கார்ந்து சீட்டு விளையாடுவோம்; டி.வி. பார்ப்போம். இப்போ அதெல்லாம் முடியறதே இல்லை’ என்று தொடங்கலாம். நீங்கள் பேசப் பேச, அவரது மறுமொழி, ஊக்குவிக்கிற மாதிரி இருந்தால் இவ்வளவு பேசலாம். எரிச்சல் வருகிறமாதிரி இருந்தால், பேச்சைச் சுருக்கிவிடுங்கள். தினசரி வாழ்க்கையில் அவருக்குக் கூடுதல் கவனம் கொடுத்து, அவருக்குப் பிடித்தவற்றைச் செய்யுங்கள் - குறிப்பாகப் பிடித்த சாப்பாடு, அன்பு, அக்கறை, முக்கியத்துவம் இவையெல்லாம் தேவை. படுக்கை அறை உறவையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளுங்கள்.
அவர் போக்குச் சரியில்லை என்றால் தனிமையில் யாருடனோ கைபேசியில் பேசுகிறாரா, தாம்பத்திய உறவில் ஆர்வமில்லையா, குடிப்பழக்கம் அதிகமாகியிருக்கிறதா என்பன போன்றவற்றைக் கவனியுங்கள். எதுவும் தெரியாமல் உங்கள் சந்தேகம் சரிதான் என்கிற முடிவிற்கு வரவேண்டாம். உங்கள் துப்பறியும் திறனைக் கூர்மைப்படுத்தி நிரூபணத்தைத் தேடுங்கள். அது கிடைத்துவிட்டால், நேரடியாகக் கேட்க முடிவெடுங்கள். 'நான் உனக்கு என்ன குறை வைத்தேன்?' என்று வெடிக்கும் கோபத்தோடு பேசாதீர்கள். ஆசுவாசப்படுத்திக்கொண்டு பேசுங்கள். பெரும்பாலும் அவர் மறுக்கலாம். அவசரப்பட்டு உங்கள் குடும்பத்தாருடன் பேசுவதும், விவாகரத்து என்று பேசுவதும் தவிர்க்கப்பட வேண்டும். சில காலம் ஒதுங்கி இருந்து, மனதை அமைதிப்படுத்திக்கொண்டு தீர்மானம் எடுங்கள். உளவியல் ஆற்றாளர் ஒருவரைச் சந்திப்பது தெளிவைக் கொடுக்கும்.
கட்டுரையாளர், உளவியல் ஆற்றாளர்.