எம்.எஸ். பாட்டும் காஞ்சிபுரம் பட்டும் | ஆகஸ்ட் 7 - தேசியக் கைத்தறி நாள்

படங்கள்:மாதூர்யா
படங்கள்:மாதூர்யா
Updated on
2 min read

இசையரசி எம்.எஸ். சுப்புலட்சுமி தன் பாட்டால் மட்டும் மனத்தைத் தொடவில்லை; உடுத்திய பட்டாலும்தான். எம்.எஸ்.சுப்புலட்சுமி காஞ்சிபுரம் பட்டுச் சேலைகளை உடுத்தியதன் மூலம் அங்குள்ள கைத்தறி நெசவாளர்களைக் கௌரவித்தார். 1960களில் ‘எம்.எஸ். புளூ’ என்கிற பெயரிலேயே பட்டுச் சேலைகள் பிரபலமாயின. அதை நெய்தவர் காஞ்சிபுரம் கைத்தறி நெசவாளர் முத்து என்பவர்.

ஆயிரம் ஆண்டு வரலாறு கொண்ட இந்த நெசவின் அழகியல், இன்றும் புதிய மாற்றங்களோடு காலத்தில் அழியாமல் இருக்கிறது. அதில் உன்னதமானது காஞ்சிபுரம் பட்டு. காலத்துக்கு ஏற்றவகையில் இளைய தலைமுறைகளைக் கவரும் வகையில் அது தன்னைத் தானே புதுப்பித்து வந்திருக்கிறது. ‘எம்.எஸ்.புளூ' சேலைகளுக்குக் கோயில் கல்வெட்டு, வேதங்களிலிருந்து எடுக்கப்பட்ட படிமங்கள் ஆகிய அம்சங்கள் அழகு சேர்த்திருக்கின்றன.

கர்நாடகக் கைவினை ஆணையக் குழு உறுப்பினர் பத்மஜா, “ஒவ்வொரு நெசவுப் படைப்பும் மாற்றங்களை உள்வாங்கிக்கொண்டு உருவாக வேண்டும். இல்லையெனில் அவை நீண்ட காலம் நீடித்திருக்க இயலாது. காஞ்சிப் பட்டில் குறுக்கு நெசவு சிறப்பாக இருக்கும். அதில் பைத்தானி பாணியில் பார்டர் இருக்கிறது. சில பார்டர் வடிவமைப்புகள் போச்சம்பள்ளி பார்டரைத் தழுவி உள்ளன. ஆனால், அது நகல் அல்ல. காஞ்சி முத்திரையுடன் தயாரிக்கப்பட்ட தழுவல். தற்போது கலம்காரியும் பாந்தானியும்கூட காஞ்சிப் பட்டுடன் இணைக்கப்பட்டு நுட்பமான கலவையை உருவாக்கியுள்ளனர்” என்கிறார்.

பெங்களூரு மாதுர்யா கிரியேஷன்ஸ் உரிமையாளர் பாரதி ஹரிஷ் “ஜவுளி உற்பத்தியாளர்கள் காஞ்சிபுரம் நெசவாளர்களைக் கொண்டு பாரம்பரிய, நவீன பாணியில் சேலைகளை உருவாக்குகிறார்கள். காஞ்சிபுரம் சேலைகளில் பட்டைத் தாண்டி அம்சங்கள் நிறைய இருக்கின்றன. மிளகாய்ச் சிவப்பு, கத்தரி ஊதா, மஞ்சள், கிளிப் பச்சை, மயில் நீலம், பாக்குப் பழுப்பு, இலை பச்சை, வெங்காயத் தோல் இளஞ்சிவப்பு, அரக்கு (மெரூன்), ஃபேன்டா ஆரஞ்சு உள்ளிட்டவை காஞ்சிப் பட்டுச் சேலையின் தனித்துவமான வண்ணங்கள். பாரம்பரிய நெசவு முறை, வடிவமைப்பில் நேர்த்தி, பரம்பரை நெசவாளர்களின் கைப்பக்குவம் ஆகியவற்றின் மூலம் திருமணச் சேலைகளை வடிவமைக்கின்றனர்.

உதாரணத்துக்கு ஜரி, நூல் வேலைப்பாடுகளுடன் கூடிய 44 கிளிகளின் உருவங்கள் கொண்ட ராணி இளஞ்சிவப்பு முந்தானை கொண்ட பச்சை நிறச் சேலையைச் சொல்லலாம். அதில் கிளி ஒரு நேர்மறையான சின்னம். அன்பு, பக்தி, ஞானம், தெய்விகம் ஆகியவற்றின் சின்னமாகக் கிளி சொல்லப்படுகிறது.யாளி என்பது சிங்கம், யானை, மயில், அன்னம் ஆகியவற்றின் கலவை. அது மணமகள் புகுந்த வீட்டில் நல்லிணக்கத்தைச் சேர்ப்பதை குறிக்கிறது'' என்கிறார்.

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் சேலை வடிவமைப்பு ஆய்வாளர் சபிதா ராதாகிருஷ்ணா, “காஞ்சிப் பட்டு சோழர், பாண்டியர், விஜயநகரப் பேரரசு, ஆர்க்காடு நவாப், பிரிட்டிஷ் அரசு போன்ற ஆட்சிக் காலங்களில் செழித்தோங்கியது. இந்த வரலாறு அதை அணிபவர்களுக்குத் தெரிவதில்லை. நான்கு தலைமுறைகளாக இது குறித்து ஆராய்ந்து ‘அறிவூரின் தறிகள்’ என்கிற நூலில் எழுதி இருக்கிறேன். அண்மைக் காலத்தில் வடிவமைப்பு, நிறம் ஆகியவற்றில் நிறைய சமரசங்கள் நடந்திருக்கின்றன. ஆனால், காஞ்சி நெசவாளர்கள் ஒருபோதும் அவர்களின் பாரம்பரிய அடையாளத்தைக் கைவிடாமல் தொடர்கின்றனர்'' என்கிறார்.

நெசவாளர் செல்வத்தின் மனைவி விசாலாட்சி, “காஞ்சிபுரத்தில் ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 60 ஆயிரம் நெசவாளர்கள் பட்டுச் சேலை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். வீட்டின் உள்ளே அமைக்கப்பட்ட தறிகள் ஒவ்வொரு குடும்பத்திலும் அங்கமாக இருக்கின்றன.

நூல் சாயமிடுதலுக்கு நாங்கள் செம்புப் பாத்திரங்களில் கொதிக்கும் நீரைப் பயன்படுத்துகிறோம். சாயப் பொடி, சோடா, சோப்பு எண்ணெய் ஆகியவற்றின் லேசான கலவையைச் சேர்க்கிறோம். நிறங்களைச் சேர்ப்பதற்கு உள்ளூர்க் குளங்களின் நீரையும் சேலையின் விறைப்புத்தன்மைக்குச் சோற்றுக் கஞ்சியைப் பயன்படுத்துகிறோம்'' என்கிறார்.

தேசிய விருது பெற்ற நெசவாளர் பி.கிருஷ்ணமூர்த்தி, ''1000 கோயில்களின் நகரமான காஞ்சிபுரம் 'பட்டு நகர’மாகத் திகழ்கிறது. பாரம்பரியப் பட்டு, தனித்துவமான வடிவமைப்பு, நெசவு முறைக்காகப் புவிசார் குறையீடு பெற்றிருக்கிறது. கர்நாடகத்தில் தயாராகும் மல்பெரி பட்டில் இருந்து நெய்யப்படும் சேலைகள், குஜராத்தின் சூரத்தில் உருவாக்கப்பட்ட செழுமையான ஜரி (தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி நூல்), அடர்த்தியான துணியின் செழுமையான பளபளப்பு, மென்மையான நிறப்பூச்சு ஆகியவை இணைந்து காஞ்சிப் பட்டைத் தீர்மானிக்கின்றன.

நாங்கள் மூன்று தலைமுறைகளாக இந்தத் தொழிலில் ஈடுபட்டிருக்கிறோம். நான் கற்றதை இப்போது ஆடை வடிவமைப்பு துறை மாணவர்களுக்கு கற்றுத் தருகிறேன். '' என்கிறார்.

- ரஞ்சனி கோவிந்த்

தமிழில்: அன்னபூர்ணி சேது

படங்கள்:மாதூர்யா

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in