கிராமத்து அத்தியாயம் - 27: தன் மானம்

கிராமத்து அத்தியாயம் - 27: தன் மானம்
Updated on
2 min read

திருவேங்கடத்துக்கும் சிவகாமிக்கும் கல்யாணம் முடிந்து இன்றோடு மூன்று மாதம் ஆகிவிட்டது. இனி அவர்கள் வீட்டில் போய் இருக்க வேண்டுமென்று பெரியவர்கள் சொல்ல, திருவேங்கடத்துக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. விடியற்காலையிலேயே தன் மாமனார் தனக்கு வெயில் பட்டுவிடக் கூடாதென்று கூடார வண்டி கட்டி தன்னைப் பொன்னம்போல் கொண்டுபோய் விடுவார் என்று இருக்க, அவரோ காலையில் நன்றாக விடியும் முன்பே, “மாப்பிள்ளை, இந்தக் கல்யாணத்து வேலையால பிஞ்சைக்கு இறைக்கவே போகலை. கருது வாங்குன காடெல்லாம் பட்டுப் போயிரும் பொலுக்கோ. அதனால நானு இறைக்கப் போறேன். நீங்களும் சிவகாமியும் ஊருக்குப் போயிட்டு வாங்க. உங்ககூட துணைக்கு நம்ம லிங்குசாமி வருவான். மக சிவகாமிய நல்லாப் பார்த்துக்கோங்க. அவ நம்மளை மாதிரி காடு கரை பக்கமெல்லாம் போனதில்லை. நம்மல்லாம் பெரிய சம்சாரி (விவசாயி). ஆனாலும் சொல்லவே வெக்கமா இருக்கு. எம்மவளுக்குக் காட்டு வேலையே தெரியாது. ஆனா, வீட்டுல எத்தனை படின்னாலும் குந்தி அடுப்பு வேலை நல்லா செய்வா. எத்தனை பேருக்குன்னாலும் கஞ்சி காய்ச்சி ஊத்துவா. அவளை அவ மனம் கோணாதபடி பார்த்துக்கிடணும். நானு பத்துநா கழிச்சி உங்க வீட்டுக்கு வாரேன்”னு சொல்லிட்டு அப்படியே கழனிக்குக் கிளம்பிட்டாரு.

மாமனார் சொன்னதைக் கேட்டதும் மருமவன் திருவேங்கடத்துக்குக் கோபமின்னா இந்த மட்டுல்ல. திருவேங்கடம் ஏற்கெனவே மண்டக்கனம் புடிச்சவன். அதோட அவனுக்குச் சொந்தமா ஒரு ஏக்கர் தென்னந்தோப்பு, ஒரு காளை மாடு, பெரிய ஓட்டு வீடுன்னு இருந்ததால ஊருக்கே நான்தான் பணக்காரன்னு சொல்லிக்கிட்டு அலைவான். யாரையும் மதிக்கிறதில்லை. அதனால ஒரு வேலைக்காரனைத் துணைக்கு அனுப்பிவச்ச மாமன் பழனிச்சாமி மேல கோபமா இருந்துச்சு.

ஊரைவிட்டுக் காட்டுப்பாதைக்குத் திரும்பின உடனே, “லிங்குசாமி நீ எங்ககூட வர வேண்டாம். நீ போ”ன்னு சொல்லிவிட்டான். புருசன்காரன் அப்படிச் சொன்ன உடனே சிவகாமி பதறிப்போனாள். ’இதென்ன கொடுமை. நம்ம புருசன் வீட்டுக்குப் போவணுமின்னா இன்னும் ரொம்ப தூரம் போகணுமே. நம்ம புருசன்கிட்ட வாயத் தொறக்கலை. வார்த்தை ஒன்னும் பேசலை. நம்ம வெத்தல மடிச்சிக் கொடுக்கலை. அவரு விரும்பி ஒன்னும் கேக்கலை. இந்த லட்சணத்துல அம்புட்டுத் தொலைவுக்கு ரெண்டு பேரும் பேசாம எப்படிப் போவ. அவரு போவாரு. அவருக்குப் போயி வந்து பழக்கம். நம்ம என்ன செய்ய’ன்னு நினைச்சவள், “லிங்குசாமி நீ ஊருக்குப் போவ வேண்டாம். நீ எங்கக்கூடவே வா. ஏதாச்சிலும் பேசிக்கிட்டுப் போலாம்”னு சொன்னா. உடனே திருவேங்கடத்துக்குக் கோவம் வந்திருச்சி. “நீ எது பேசுனாலும் என்கிட்டே பேசு. நீ போடா உன் ஊருக்கு”ன்னு லிங்குசாமிய திருவேங்கடம் விரட்டியே விட்டுட்டான்.

பிறகு ரெண்டு பேருமா எதுவுமே பேசாம ஊருக்கு நடந்தாக. பாதி தொலைவு வந்துருக்காக. இன்னும் திருவேங்கடம் ஊருக்குப் பாதி தொலைவு போவணும். அப்ப திடீர்னு இந்நேரம் வரையும் தீயா அடிச்ச வெயிலு மாறி வானம் முழுக்க கருமேகம் சூழ்ந்திருச்சி. உடனே சிவகாமி, “அய்யய்யோ பெரிய மழை வரும் போலருக்கே”ன்னு சொல்லி வாய் மூடல. சோன்னு பெரிய மழை வந்திருச்சு. எங்கன பார்த்தாலும் வெள்ளாமக்காடா இருந்துச்சாங்காட்டி இவுகளுக்கு எங்கனயும் போயி ஒதுங்க எடமில்ல. அப்படியே மழையிலேயே நனைஞ்சிக்கிட்டு நின்னாக. கோடை மழை குமுறி பெய்யுமின்னு சொலவடை. அந்தக் கணக்கா இடி மின்னலுமா ஒரு நாழிக பேஞ்சுட்டு மழை விட்டுருச்சி. வரப்பு, வாய்க்கா எங்க பார்த்தாலும் தண்ணி வெள்ளக்க காடா ஓடுது. எங்கிட்டுப் பாத்தாலும் சவதி காலில் கப்பு கப்புன்னு அப்புது. சிவகாமி ஊருக்கு அதுவும் முதன் முதலா புருசன் வீட்டுக்குப் போறோமின்னு ’அரிஞ்சான்’ பட்டுச்சேலை உடுத்தி வந்திருக்கா. சீலை தடுக்குத தடுக்கில ஒரு எட்டு எடுத்துவைக்க முடியலை. இப்படி தடுக்குதே சீலை, தூக்கிக்கிட்டு நடப்போமின்னாலும் கெண்டக்காலுக்கு வரைக்கும் தெரியுமே, போற ஊரு நமக்குப் புதுசு. நமக்குத் தெரியாதவகளும் அறியாதவகளுமா இருப்பாகளேன்னு இவ யோசிச்சிக்கிட்டு மலைச்சிப் போயி நிக்கையில் திருவேங்கடம் செருப்பைக் கழட்டிப் போட்டான். வேட்டிய மடிச்சி தொடைக்கு மேல ஏத்திக் கட்டுனான். தோள்ல போட்டுருந்த துண்டை எடுத்துத் தலைக்கு மேல தலைப்பாயா கட்டிக்கிட்டு சிவகாமியப் பார்த்து, “இந்தா என் செருப்பு ரெண்டையும் தூக்கிட்டுவா”ன்னு சொல்லிட்டு நடக்க ஆரம்பிச்சான்.

சிவகாமிக்குன்னா எரிச்சலு. நம்மளே நடக்கமாண்டாம என்னடா செய்வோமின்னு பரிதவிச்சிக்கிட்டுக் கிடக்கோம். இந்த லட்சணத்தில இவன் செருப்ப வேற தூக்கிட்டு வரணுமாமின்னு நினச்சவ “உம்ம செருப்ப எல்லாம் என்னால தூக்கிட்டுவர முடியாது. நானே எப்படிடா நடப்போமின்னு மருவிக்கிட்டு கிடக்கேன்”னு சொன்னா. இவனும், “கையில தூக்க முடியலேன்னா ரெண்டு செருப்பையும் உன் தலையில தூக்கிவச்சிட்டு வா” என்று சொல்லவும், “அப்படி யெல்லாம் என்னால தூக்கிட்டுவர முடியாது” என்றாள் சிவகாமி. “என் செருப்பைத் தூக்கிட்டு வராட்டி அப்படியே உன் அப்பன் வீட்டுக்குத் திரும்பிப் போ” என்று திருவேங்கடம் சொல்ல உடனே சிவகாமி தன் ஊரை நோக்கி நடந்தாள். அதன் பிறகு ரெண்டு பேரும் சேர்ந்து வாழவே இல்லை.

கட்டுரையாளர், எழுத்தாளர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in