Last Updated : 26 Nov, 2017 11:34 AM

 

Published : 26 Nov 2017 11:34 AM
Last Updated : 26 Nov 2017 11:34 AM

முகம் நூறு: சாதிக்கத் தூண்டும் சாதனையாளர்

 

ள்ளி ஆசிரியை ஆகியிருக்க வேண்டிய ராமநாதபுரத்தைச் சேர்ந்த இளம்பெண் சாதனைகள் செய்வதிலும் மாணவர்களை சாதனை செய்ய ஊக்குவிப்பதிலும் கவனம் செலுத்தினார். இதன் மூலம் அந்த மாவட்டத்தின் முக்கிய ஆளுமையாக தற்போது உயர்ந்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் களஞ்சியம் நகரைச் சேர்ந்தவர் கலைவாணி (23). எம்.ஏ. ஆங்கில இலக்கியம், பி.எட். படித்துள்ள இவருக்குத் தன்னம்பிக்கைப் பேச்சாளர், கவிஞர், சாதனையாளர்களை உருவாக்கும் சாதனையாளர், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுகாதாரம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் சமூக ஆர்வலர் எனப் பல முகங்கள்.

இளம் வயது ஆர்வம்

ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தால் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளியில் படித்த காலத்திலேயே பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டிகள் பலவற்றில் பங்கேற்றுப் பரிசுகளைப் பெற்றுள்ளார். அதன் பின்பு கல்லூரியிலும் அவருடைய பரிசுவேட்டை தொடர்ந்தது.

A.kalaivani

“கீழக்கரை தாசீம்பீவி கல்லூரியில் இளங்கலை ஆங்கிலம் படித்தேன். கல்லூரி நிர்வாகம் என் ஆர்வத்தை ஊக்குவித்தது. இதனால் மாநில, தேசிய அளவிலான சாதனைப் புத்தகங்கள் தொடங்கி, அசிஸ்ட், லிம்கா உள்ளிட்ட உலக சாதனைப் புத்தகங்கள்வரை இடம்பெற்றேன்” என்று பெருமிதத்துடன் கூறுகிறார் கலைவாணி.

இவர் எழுதிய கவிதை ‘மிக நீளமான கவிதை’ என்ற பெயரில் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. 2016-ல் பெண்கள் நெற்றியில் வைக்கும் பொட்டுகளைப் பல வடிவங்களில் சேகரித்தும் தயாரித்தும் சாதனை படைத்துள்ளார். சாதனைப் புத்தகங்களில் இடம்பெறத் தன் தோழி தஹ்மிதா பானு மிகவும் உதவியாக இருந்ததை நன்றியுடன் நினைவுகூரும் கலைவாணி, தற்போது மற்றவர்கள் சாதனைகளைப் படைத்து அங்கீகாரம் தேட வழிகாட்டியாக இருந்துவருகிறார்.

சாதனையாளர்களின் வழிகாட்டி

“தமிழகத்தில் பலர் திறமையும் ஆர்வமும் இருந்தும் இதுபோன்ற சாதனைகள் செய்ய வழி தெரியாமல் உள்ளனர். இந்த நிலையை மாற்றும் நோக்கில் களமிறங்கினேன். அதன்படி திருச்சியை மையமாகக்கொண்டு செயல்படும் உலக சாதனைப் புத்தக அமைப்பில் ஒருங்கிணைப்பாளராக இணைந்து பணியாற்றினேன். ராமநாதபுரம் மாவட்டச் சிறுவர்கள் சிலரை உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற வைத்தேன். தனியார் அமைப்புகள் நடத்தும் உலக சாதனைப் போட்டிகளில் பங்கேற்க அதிகக் கட்டணம் வசூலிப்பதால், பலரால் பங்குபெற முடியாமல் போகிறது. அதனால் ராமநாதபுரத்தில் ‘வில் மெடல் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அன்ட் ரிசர்ச் பவுன்டேஷன்’ என்ற அமைப்பை ஒரு மாதத்துக்கு முன் தொடங்கினேன். அதன் மூலம் உலக சாதனையாளர்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுவருகிறேன்” என்கிறார்.

கிராமங்களில் விழிப்புணர்வு

உலக சாதனை மட்டும் இல்லாமல் வெளியூர்களில் நடக்கும் பேச்சு, கவிதை, கட்டுரைப் போட்டிகளில் வழிகாட்டுதலும் வசதியும் இல்லாத திறமையான மாணவர்கள் பங்கேற்கத் தவறுகின்றனர். இதை உணர்ந்து இந்தப் போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்க ஊக்குவிப்பதோடு நிற்காமல், அதற்குத் தேவைப்படும் நிதியைத் திரட்டி மாணவர்களைப் போட்டிகளுக்கு அழைத்துச் சென்றும் பங்கேற்க வைக்கிறார்.

ராமநாதபுரம் தமிழ்ச் சங்கம், ராமேசுவரம் கம்பம் கழக இளைஞரணி அமைப்பு, ராமநாதபுரம் மாவட்ட தேசிய பசுமைப்படை அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து இந்தப் பணியில் ஈடுபட்டுவருகிறார் கலைவாணி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x