கிராமத்து அத்தியாயம் - 26: மூத்தவர்களின் கல்யாணம்

கிராமத்து அத்தியாயம் - 26: மூத்தவர்களின் கல்யாணம்
Updated on
2 min read

விமலாவுக்கும் வியாலினிக்கும் மூன்று மாதத்துக்கு முன்பே கல்யாணம் பேசியாகிவிட்டது. மாப்பிள்ளைகள் வேறு யாருமில்லை. அவர்களின் மாமா பையன்களான சங்குத்துரையும் சீமைத்துரையும்தான். மூத்தவள் விமலாவை மூத்தவனான சங்குத்துரைக்கும் இளையவள் வியாலினியை இளையவனான சீமைத்துரைக்கும் பேசியிருந்தார்கள். இப்படிக் கல்யாணம் பேசியதுதான் தாமதம். இந்த அக்கா, தங்கையின் சேத்திக்காரர்கள் எல்லாம் காட்டு வேலைக்குப் போகும்போதும் வரும்போதும் கேலியும் கிண்டலும் பண்ணிப் பாடாகப் படுத்தினார்கள். அக்காவுக்கும் தங்கைக்கும் சேத்திக்காரிகள் கேலி பண்ணுவது மகிழ்ச்சியாக இருந்தாலும் வெட்கம் பிடுங்கித் தின்றது.

இது போதாதென்று இவர்களுக்குப் பேசிய மாப்பிள்ளைகள் இவர்கள் ஒண்டியாக வருவதைப் பார்த்தால் வழியை மறிப்பது, ஏதாவது வம்பு பண்ணுவது என்று ரொம்பவும் ரகளை செய்தார்கள். நாளாக, நாளாக இவர்களுக்கே சீக்கிரம் கல்யாணமானால் போதும் என்று ஆகிவிட்டது. கல்யாணத்துக்கு முன்னால் தன் சொந்தத்தில் இருக்கும் ஆண், பெண்ணென்று பெரியவர்களையெல்லாம் கூப்பிட்டு, குத்துவிளக்குப் பூஜை வைத்து விருந்து சமைத்துப் பெண் வீட்டில் போட வேண்டும். அப்படித்தான் பாஞ்சாலியும் அவள் புருசன் பரசுராமும் எல்லாரையும் கூப்பிட்டு இருந்தார்கள்.

பாஞ்சாலி தன் மகள் விமலாவைக் கூப்பிட்டு, “நம்ம வீட்டுக்கு நிறைய விருந்தாளிக வந்துருக்காக. நீ போயி பிஞ்சையில் இருக்க கத்தரிக்கா, சுரக்கா, பூசணிக்கா, தக்காளி பச்சைமிளகாய் எல்லாம் நிறைய புடுங்கிட்டு வா. வந்தவக எல்லாருக்கும் ‘கக்க, கனிக்க’ வெஞ்ஞனம் வச்சிப் போடறதோட ஊருக்குப் போறவகளுக்குக் கொஞ்சம் கொஞ்சம் காயும் கொடுத்துவிடுவோம்” என்றாள். பிஞ்சைக்குப் புறப்பட்ட விமலா பாதை நெடுக மஞ்ச தேராகப் பூத்திருந்த ஆவாரம் பூக்களைப் பார்த்தாள். அவளுக்கு ஆசையாக இருந்தது. கொப்பும் கவுறுமாகப் பிடுங்கிக் கொண்டை நிறைய வைத்துக்கொண்டாள். பிறகு தண்டட்டிக்காகக் குழலாகக் காத்துக் கிடந்த காதிலும் வைத்துக்கொண்டு பிஞ்சையை நோக்கி நடந்தாள். அவள் நடந்த ஓடையோரமாக முள்கிரீடம் சூட்டியவாறு கத்தாழைப் பழங்கள் பழுத்துக் கனிந்திருந்தன. அதையும் பிடுங்கி முள்ளை உரசி நாலைந்து பழங்களைத் திங்க உள்நாக்கிலிருந்து உதட்டு வரை பழுத்த தக்காளியாகச் சிவந்து கிடந்தது. சுற்றும் முற்றும் பார்த்தாள். ஒரு சனமில்லை. சுற்றிலும் அரண் அமைத்ததுபோல் சோளக்காடும் கம்மங்காடும் ஊடுகருது வாங்கி மெல்லிய காற்றுக்கு ஆட்டம் போட்டுக்கொண்டிருந்தன.

அந்தச் சூழ்நிலையில் விமலாவுக்குப் பாட்டுப் பாடவேண்டும் போல் இருந்தது.

மாமன் மகனே மண்டபத்துக் கல்தூணே

ஆளுக்குள்ளே வேல செஞ்சா

நானு யாரவிட்டுக் கூப்பிடுவேன்

வெங்கல ரோதையில வேலை பாக்கும் என் மாமன் மவன்

உமக்கு வெத்தல வேணுமின்னா விட்டெறிங்க உம்ம பட்டுத்துண்டை

- என்று ராகம் போட்டுப் பாட, “பட்டுத்துண்டெல்லாம் எறிய வேண்டாம், உன் பக்கத்திலேயே நானிருக்கேன்” என்று அவள் பாட்டுக்கு இசைப்பாட்டு பாடியவாறே அவள் பக்கத்தில் வந்து நின்றான் சங்குத்துரை. அவன் பக்கத்தில் வந்ததும் நடுங்கிப் போனாள் விமலா. உடனே தான் கொண்டுவந்த கடாப்பெட்டியை எடுத்துக்கொண்டு வரப்பு, வாய்க்கால் என்று பார்க்காமல் தாவித் தத்தளித்தவாறு ஓடினாள். அவளை ஓடவிடாமல் தடுத்தான் சங்குத்துரை. ஆவாரம்பூவின் அலங்காரத்தோடு சிவந்த உதடுமாகத் தன்னந்தனியாக நிற்கும் அவளைப் பார்க்கையில் ஆசை அவன் உடம்பெல்லாம் ஆனந்த முத்திரை குத்த, “என்ன விமலா, நமக்குக் கல்யாணம் பேசி நாள்கூட குறிச்சிட்டாக. இம்புட்டுக்கு வெக்கப்பட்டு ஒதுங்கிப்போனா...” என்றவாறே அவளை நெருங்க அவனிடமிருந்து தப்பிக்க தக்காளித் தோட்டத்தில் அவள் ஓட முயல செடியின் வேர் தடுக்கி விமலா கீழே விழுந்தாள். அவனும் தடுமாறியதுபோல் அவள் மேலேயே விழுந்தான். சின்ன சூறாவளிக் காற்று ஒரு நிமிஷம் இருவரையும் தழுவிவிட்டுச் சோளக்காட்டில் நுழைந்தது.

இங்கே குத்து விளக்குப் பூசை ஆரம்பிக்கும் முன்பே மாப்பிள்ளை பெயரும் பெண்ணின் பெயரும் சொல்ல பாலமுத்து பாஞ்சாலியை அதட்டினாள். “ஏண்டி உனக்குக் கொஞ்சமாச்சிலும் கூறு இருக்கா? தலைநாளையில் பிறந்த மூத்தவனுக்கும் மூத்தவளுக்குமா பேசுவாக? எப்பவும் தலசும் தலசும் பொருந்தாது. மூத்தவனுக்கு எளையவளைக் கொடுத்து எளையவனுக்கு மூத்தவளைக் கொடு” என்றாள். “அய்யோ சின்னாத்தா இன்னாருக்கு இன்னாருன்னு பேசி மூணு மாத்தைக்கு மேல ஆவப்போவுது. என் பொண்ணுக ரெண்டும் தனக்குன்னு பேசுனவன் பேர நெஞ்சில் எழுதி சுமந்துக்கிட்டுல்ல அலையுதுக” என்றாள். “நல்லா அலைஞ்சாக. ரெண்டும் மாம மக்கதான. கருப்பட்டியில் எந்தத் திக்கம் கடிச்சா என்ன இனிச்சிதான் கிடக்கும். நீ பேசாம நானு சொன்னது கணக்கா மாத்திக்கட்டு. அப்பத்தேன் உன் பொண்ணுக பதினாறும் பெத்துப் பேர் சொல்ல வாழ்வாங்க” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போது விமலா வேகமாக உள்ளே வந்தாள். அவளைப் பார்த்த பாஞ்சாலி திடுக்கிட்டுப் போனாள். “என்ன தாயீ அன்னம் குலையாம ஆசைமுகம் வாடாம போனவ இப்ப முகம் வாடி வெம்பரப்பா வந்து நிக்குதே. காயவும் காணோம். காயி புடுங்கறதுக்காகக் கொண்டுபோன காடாப்பொட்டியவும் காணோம்” என்று கேட்க, “அதெல்லாம் இருக்கட்டும். இப்ப நானு வரும்போது என்ன பேசுனீக?” என்றாள் ஆவேசமாக. “இல்லத்தா. தலசுக்கும் தலசுக்கும் பொருந்தாது. அதனால உன்ன சீமத்துரைக்குக் கொடுப்போமின்னு பெரியவக சொன்னாக” என்று பாஞ்சாலி சொல்லி முடிக்குமும் முன்பே, “எனக்கு இந்தக் கல்யாணமே வேண்டாம்” என்று சொன்ன விமலா கொல்லைப்புறத்திலிருந்த கிணற்றுக்குள் குதித்தாள். எல்லாரும் பதறிப்போனார்கள். கூடவே அவள் மாமனோடு இன்னும் இரண்டு ஆளும் குதிக்க அவள் அம்மா பாஞ்சாலி மட்டும் பதறவில்லை. ஏனென்றால் மகளுக்கு நீச்சல் தெரியும் என்பது பாஞ்சாலிக்கு நன்றாகவே தெரியும்.

கட்டுரையாளர், எழுத்தாளர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in