

இளமை தொடங்கி முதுமை வரைக்குமான உளவியல் சிக்கல்கள் குறித்து இதுவரை பார்த்தோம். இவை தவிர அன்றாட வாழ்க்கையில் பலருக்கும் பல பிரச்சினைகள் ஏற்படலாம். அதைச் சீர்செய்யும் வழி அறியாமல் அவர்கள் தவிக்கலாம். அவற்றை இங்கே பகிர்ந்துகொள்ளுங்கள், கலந்துரையாடலாம்.
என் மகன் 11ஆம் வகுப்பு படிக்கிறான். சமீப காலமாக அவனது நடத்தையில் நிறைய மாற்றங்கள். எதைச் சொன்னாலும் எதிர்த்துப் பேசுகிறான். சில நேரம் வார்த்தைகள் தடித்துவிடுகின்றன. எந்நேரமும் செல்போனும் கையுமாகத் தனிமையில் இருப்பதையே விரும்புகிறான். அவனைக் கையாள்வது பெரும் சிரமமாக இருக்கிறது. என்ன செய்யலாம்?
- பிரியா, சென்னை.
அம்மா, உங்கள் மகன் மட்டுமல்ல; இன்றைய பதின்ம வயதினருடைய நடத்தை, பெரும்பாலும் இப்படித்தான் இருக்கிறது. அவர்களுக்குக் கட்டுப்பாடு பிடிக்காது. ஆனால், எல்லாப் பெற்றோரும் அதைத்தான் செய்கிறார்கள். பதின்ம வயதினருக்கு அறிவுரையும் கண்டிப்பதும் வேலைசெய்யாது. அவர்கள் கோணத்திலிருந்து அவர்களது பிரச்சினைகளை அணுகுங்கள். ‘நீ நல்லா படிக்கணும்னுதான் ஆசைப்படறே, ஆனால் உன் மனசு சண்டித்தனம் பண்ணுது. கைபேசி, தொலைக்காட்சி, நண்பர்கள் போன்ற கவனச்சிதறல்கள் உன்னை ஆட்டிப்படைக்கின்றன. அவற்றிலிருந்து வெளியேறுவது கடினமாக இருக்கு, இல்லையா?’ என்று நீங்கள் கேட்கும்போது, தன் பிரச்சினையை அம்மா புரிந்துகொண்டது அவனுக்கு ஆறுதல்தரும். ‘இந்தப் பிரச்சினையை எப்படி அணுகலாம் என்று நாம ஆலோசிக்கலாமா?’ என்று ஆரம்பித்து, தண்டிப்பதைத் தவிர்த்து அவன் செய்யும் செயல்களின் பின்விளைவுகளை அனுபவிக்க விடுங்கள். எப்படி? அவனிடமிருந்து நீங்கள் எதிர்பார்ப்பது படிப்பு; அவன் உங்களிடமிருந்து எதிர்பார்ப்பது சுதந்திரம். இரண்டையும் கோத்துவிடுங்கள்.
‘நான் எதிர்பார்ப்பதை நீ செய்தால் உனக்குப் பிடித்ததைச் செய்ய அனுமதிப்பேன். அது நடந்துவிட்டால் நாம் ஏன் சண்டைபோட வேண்டும்? எப்போ படிப்பாய், எப்போ உனக்குப் பிடித்ததைச் செய்வாய் என்று என்னிடம் சொல்லிவிடு. நான் எதிர்பார்ப்பதெல்லாம் நீ சொன்னபடி செய்யவேண்டும் என்பதுதான். அப்படிச் செய்யவிட்டால் நான் உனக்குப் பிடித்ததை நிறுத்த வேண்டிவரும் சரியா? நீ கேட்டது கிடைக்க வேண்டுமென்றால், நான் கேட்டதும் கிடைக்க வேண்டாமா?’ என்று முடியுங்கள். மறுநாள் அவன் படிக்கவில்லையென்றால் அவனுக்குப் பிடித்ததை ‘கட்’ செய்யுங்கள், அவன் எவ்வளவு கெஞ்சினாலும்.
பின் விளைவுகளைச் சந்திக்கும்போது பாடம் கற்றுக்கொள்வான். மறுநாளும் படிக்காவிட்டால் இதே நடக்கும் என்று புரிய ஆரம்பிக்கும். நீங்கள் விடாமல் இதே வழியைத் தொடர வேண்டும். ஒருபோதும் குரலை உயர்த்திப் பேசக் கூடாது. அவன் தனக்குப் பிடித்ததைச் செய்ய ஆரம்பித்தால் உங்களால் தடுக்க முடியாது. ஆனால், ‘நீ சொன்னதைச் செய்ய வில்லை. திரும்ப நானும் கத்த ஆரம்பிக்கவா?’ என்று குரலை உயர்த்தாமல் சொல்லிவிட்டு, அவனிடம் அவசியமானதற்கு மட்டும் பேசுங்கள். அம்மா ‘அப்செட்’ என்று புரிந்து கொள்வான். உங்களைச் சமாதானப்படுத்த முயல்வான். அப்போது, ‘எனக்கு உன்னை ரொம்பப் பிடிக்கும். ஆனால், நீ செய்யும் சில செயல்கள் பிடிக்கவில்லை. நீ மட்டும் மாத்திக்கிட்டா நீதான் ‘பெஸ்ட்’ பிள்ளை’ என்று ஊக்குவித்துப் பேசுங்கள். அற்புதம் நடக்கும்!
திருமணத்துக்கு முன் வேலைக்குச் சென்ற நான், திருமணத்துக்குப் பிறகு குழந்தைகளையும் கணவரையும் கவனித்துக்கொள்வதற்காக வேலையை விட்டுவிட்டேன். வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருப்பதால் என்னை யாரும் மதிப்பதில்லை. சும்மாதானே இருக்கிறாய் என்று குழந்தைகள்கூடக் கேலி பேசுகின்றனர். வீட்டு வேலைக்கு ஆள் வைத்துவிட்டு வேலைக்குச் செல்லும் நிலையில் எங்கள் குடும்பம் இல்லை. வேலைக்குச் செல்லாமல் இருப்பது அவமானமா?
- சாந்தி, கோவை.
வேலை பார்க்கும்போது உங்களுக்கு ஒரு சுய கௌரவம் இருந்திருக்கும். இப்போதும் வேலைசெய்துகொண்டுதான் இருக்கிறீர்கள். ஆனால், ஊதியம் இல்லை! ஒரு குடும்பத்தைக் கட்டிக்காக்கும் முக்கியமான வேலையில் இருக்கும் நீங்கள் பெருமைப்பட வேண்டும்! நீங்கள் ரூபாய் நோட்டு மாதிரி. அதை யார் கசக்கினாலும் அதன் மதிப்பு குறையுமா? பிறர் உங்களைக் கசக்கினாலும் உங்கள் தகுதி, மதிப்பு உங்களுக்குத் தெரிந்திருந்தால், அவர்கள் செயல்கள் உங்களைப் பாதிக்க விடமாட்டீர்கள். இனி சுடு சொற்களைக் கேட்டால், ‘என்னை யார் கசக்கினாலும் என் மதிப்பு எனக்குத் தெரியும்’ என்று சொல்லிக் கொள்ளுங்கள்!
வேலைக்குப் போகாவிட்டால் அவமானம் என்கிற எண்ணத்தை வேரோடு பிடுங்கி எறியுங்கள். நீங்கள் ஒரு நிர்வாகத்திறன் கொண்ட மேலாளர்; பொருளாதாரம், உள் நிர்வாகம், உணவு நிர்வாகம், மக்கள் தொடர்பு, குழந்தை, முதியோர் நலம் போன்ற பலதுறைகளைச் சிறப்பாகச் செயல்படுத்தும் நிர்வாகி. இது பெருமைப் படவேண்டிய விஷயம்.
வீட்டுக்கு வருமானம் கொண்டுவரும்போது உங்களுக்குப் பெருமையும் பாராட்டும் உண்டு.மறுக்க முடியாது. உங்கள் திறமைகள் இப்போதும் உங்களுக்குள் இருக்கின்றன. தட்டி எழுப்புங்கள். வீட்டிலிருந்தபடியே இப்போதெல்லாம் பல பெண்கள் ஊதியம் கொண்டுவருவதை நீங்களும் கவனித்திருப்பீர்கள். யூடியூப் சேனல் தொடங்கி பலர் தங்கள் திறமைகளை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். ஒரு மொபைல் போன் கேமரா போதும்; செலவும் இல்லை! இதைச் செய்யும் தோழிகளிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். அல்லது வீட்டிலிருந்தபடியே மின்பத்திரிகைகளுக்கு ‘எடிட்’ செய்யலாம். எடிட்டிங்கில் சின்ன பயிற்சி இருந்தால் போதும். சிறு கைத்தொழில், அலங்காரமான பரிசுப் பைகள், வாழ்த்து மடல்கள், பூங்கொத்து செய்தல் என ஏராளமான வழிகள் இருக்கின்றன. நிறைய பேரிடம் பேசுங்கள். விரிந்து கிடக்கும் வாய்ப்புகள் கண்ணுக்குத் தெரியும்! ‘முடியும்; ஆனால் கடினம்’ என்பது தோல்வியைத் தழுவுபவர்களின் வாதம். ‘கடினம்; ஆனால் முடியும்’ என்பது வெற்றியாளர்களின் தேர்வு. நீங்கள் எந்த வகை? தீர்மானியுங்கள்.
அன்பு வாசகத் தோழிகளே, உங்களை வாட்டும் பிரச்சினை எதுவாக இருந்தாலும் எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். தீர்வுசொல்லத் தயாராக இருக்கிறார் உளவியல் ஆற்றாளர் பிருந்தா ஜெயராமன்.