பெண்கள் ஆண்கள் குழந்தைகள் - 9: திருமணத்தைப் பெண்கள் மறுக்கிறார்களா?

பெண்கள் ஆண்கள் குழந்தைகள் - 9: திருமணத்தைப் பெண்கள் மறுக்கிறார்களா?
Updated on
2 min read

ஆண்கள் சிலருக்கும் ஆண்களைப் பெற்ற பெற்றோர் சிலருக்கும் முன்னால் பூதாகரமாக ஒரு பிரச்சினை தற்போது உருவெடுத்திருக்கிறது. திருமணம் புரிந்துகொள்ள இவர்களது எதிர்பார்ப்புக்கு ஏற்ற பெண்கள் கிடைப்பதில்லை. தங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ற ஆண் கிடைத்தால் மட்டுமே திருமணம் புரிவோம் என்று சொல்லும் பெண்களும் இப்போது பெருகிவருகிறார்கள்.

படிக்கவும், வேலைக்குச் செல்லவும், தனக்கென ஒரு பாதையை வகுக்கவும் இன்று குறைவான சதவீதப் பெண்களுக்கு சுதந்திரம் வாய்த்திருக்கிறது. பெண்கள் பள்ளிகளுக்குச் செல்லத் தொடங்கி பல வருடங்கள் ஆனபின்னும் திருமணத்தை நோக்கித்தான் பெற்றோர் பலர் பெண்களின் வாழ்வை நகர்த்திவருகிறார்கள் இன்றும். ஆண்கள் படிக்கும் அதே பாடத்தைத்தான் பெண்களும் படிக்கிறார்கள். ஆணுக்கு நிகராகத்தான் பெண்ணும் உழைக்கிறாள். ஆனால், ஆணுக்கு நிகராக அவளுக்கெனக் கனவுகள் மட்டும் இருக்கக் கூடாது என எண்ணுவது எப்படிச் சரியாகும்?

யாருடைய முடிவு?

நம் குடும்ப அமைப்பு ஒரு பெண்ணை அறிவுத்தளத்தில் நிறுத்திப் பார்க்கவே தயங்குகிறது. மகள் எவ்வளவு படித்திருந்தாலும், எத்தனை தகுதிகள் இருந்தாலும் திருமணம் முடிந்தவுடன், அவள் வேலைக்குப் போவதோ போகாமல் இருப்பதோ அவளது முடிவாக இருக்க இயலாது என்பதை அவளைப் பாடுபட்டுப் படிக்கவைத்த பெற்றோரே கூறிவிடுகிறார்கள். அவளுடைய கணவரோ, கணவர் வீட்டாரோ அனுமதித்தால் மட்டுமே அவளால் வேலைக்குச் செல்ல முடியும். அப்படியே வேலைக்குச் செல்ல அனுமதி கிடைத்தாலும், இருவரும் வேலைக்குச் செல்லும் வீட்டிலும் சமையல் உள்ளிட்ட வீட்டு வேலைகள் பொதுவில் வைக்கப்படுவதில்லை. அவையெல்லாம் ஒரு பெண்ணின் கடமையாக மட்டுமே பார்க்கப்படும். கணவனைவிட மனைவி கூடுதலாகச் சம்பாதித்தாலோ, பெரிய பதவியில் இருந்தாலோ சில ஆண்களுக்குத் தாழ்வு மனப்பான்மை எனும் நோய் வேறு பீடித்துவிடுகிறது. வேலை மாற்றம் இருவரில் யாருக்கு வந்தாலும் கணவரின் வேலை எவ்விடமோ அதற்கு ஏற்ப முடிவுகள் எடுக்கப்படும். மனைவி எந்நேரமும் வேலையை விடத் தயாராகவே இருக்க வேண்டும். குழந்தை பிறந்துவிட்டால் கேள்வியே இல்லை. அதை முழுநேரம் வளர்க்கும் பொறுப்பு அம்மாவுக்கு மட்டுமே. அப்பாவின் பங்கு இருக்க வேண்டிய அவசியமேயில்லை.

சிறு வயதிலிருந்து எவ்வளவு கனவுகளுடன் வளர்ந்திருந்தாலும், தன் கனவுகள் மெய்ப்பட எவ்வளவு உழைத்திருந்தாலும், எவ்வளவு உயரத்தைத் தொட்டிருந்தாலும் திருமணம் என்பது ஒரு பெண்ணின் வாழ்வை அப்படியே புரட்டிப்போட்டு, ‘உனக்கான கனவுகள் முக்கியமல்ல. உன் உழைப்பு இங்கு கணக்கேயில்லை. நீ ஓர் அம்மா, ஒரு மனைவி, இந்தக் குடும்பம் மட்டுமே உனக்கானது. இதில் மட்டுமே நீ பெருமை காணலாம்’ என்று தலையில் அடித்து உட்கார வைத்துவிடுகிறது.

இதெல்லாம் இன்று மாறிவிட்டது என்று சிலர் கோஷம் போடக்கூடும். உண்மையில் எத்தனை சதவீதப் பெண்கள் இந்த மாற்றத்தைக் கண்டுவிட்டனர்? பெரிய பதவியில் பல பொறுப்புகளுடன் இருக்கும் பெண்கள்கூட வீட்டு வேலைகளில் ஏதாவது குறைவைத்துவிட்டால், குற்றவுணர்வில் வேகிறார்கள். பலரின் பேச்சுக்கு ஆளாகிறார்கள். அதிலிருந்து வெளிவரத் தன் வேலையை, பதவியை, தன் தொழில் சார்ந்த கனவுகளை மூட்டைகட்டி வைப்பது இன்றும் தொடர்ந்துவரும் ஓர் அநியாயம்.

அவரவர் வாழ்க்கை அவரவர் முடிவு

இந்தச் சூழலே எப்படி என்றென்றும் நிலைத்திருக்கும்? சிறிது சிறிதாக மாற்றங்கள் வரத்தானே செய்யும்? அதை யார் தடுக்க இயலும்? இன்றைய பெண்களில் சிலர் தகுதிகள் பல இருந்தும் குடும்பத்துக்காக முடக்கப்பட்ட தன் அம்மாவையோ, அத்தையையோ, அக்கம் பக்கத்து பெண்களையோ பார்த்து வளர்ந்திருப்பார்கள். திருமணம் என்பது தன் கனவுகள், லட்சியங்கள் அத்தனையையும் முடக்கிவிடக்கூடும் என்கிற அச்சத்தை அது விளைவித்திருக்கும். தன் வாழ்வின் முடிவுகளைத் தன் கையில் வைத்திருந்தால் மட்டுமே தான் இங்கு தன் வாழ்வை வாழமுடியும் என்பதை உணர்ந்திருப்பார்கள். என்னிடம் படிப்பு இருக்கிறது, சம்பாத்தியம் இருக்கிறது, இன்னும் நான் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது, அதனால் இந்தத் திருமணம் என்கிற கோட்பாட்டுக்குள் நான் வரத் தயாரில்லை என்று சிலர் முடிவெடுக்கிறார்கள்.

ஆனால், இந்த முடிவுகளால் தன் செளகரியம் குறைந்துவிடுமே என்று பயப்படுகிறவர்கள் நடுக்கம் கொள்கிறார்கள். இது சமூகத்துக்கு நல்லதா, குடும்பம் என்கிற கட்டமைப்பு என்னவாவது என்று பொங்குகிறார்கள். வாரிசுகளை உருவாக்குவது நம் கடமையில்லையா என்று அங்கலாய்க்கிறார்கள். அந்தப் பெண்கள் தங்கள் வாழ்க்கையை வாழ விரும்புகிறார்கள். தன் வாழ்வை, தான் வாழ்வதற்கான வழியைத் தேடுகிறார்கள்.

மாற்றம் ஒன்றுதான் மாறாதது. ஒரு காலத்தில் பெண்கள் சுதந்திரம் இல்லாமல் இருந்தார்கள். போராடி சிறிது சிறிதாக முயற்சிகள் எடுத்துப் பெரிது பெரிதாகச் சாதிக்கத் துடிக்கிறார்கள். ஆண்கள் இன்னும் தன் அம்மாவைப் போல, அப்பாவுக்குப் பணிவிடை செய்யும் அம்மாவைப் போல மனைவி வேண்டும் என்கிற எண்ணத்தைக் கைவிட்டு, பெண்ணைத் தனக்கு ஈடாக மதித்து, குடும்பப் பொறுப்புகளையும் பிள்ளை வளர்ப்பையும் பாதிக்குப் பாதி சுமந்து, அவள் முன்னேற்றத்தில் மகிழ்வு கொள்வதுடன் உடனிருந்து உதவிகள் புரிந்து, மொத்தத்தில் ஆண் என்கிற அகந்தை ஒழித்து, சக உயிராக, சரியான இணையராக இருக்கும் பட்சத்தில் இங்கு அச்சங்கள், புலம்பல்கள் என எல்லாவற்றையும் தவிர்க்கலாம்.

பெண்கள் வளர்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதை மனதில் நிறுத்தி, தானும் அவளுடன் சேர்ந்து வளரத் தயாராகும் ஆண் மட்டுமே இனி பெண்ணைக் கவரும் தகுதியுடையவர் ஆவார். இதை மனதில் பெற்றோரும் நிறுத்தி மகளையும் மகனையும் ஒன்றுபோல் வளர்ப்பதை வைத்தே இனி வரும் மக்கள் இணைந்து வாழத் தகுதியுடைவர்களாக வளர்வார்கள்.

(விவாதிப்போம் மாற்றுவோம்)

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in