தினமும் மனதைக் கவனி - 25: இவர்களுக்கும் வாழ உரிமை உண்டு!

தினமும் மனதைக் கவனி - 25: இவர்களுக்கும் வாழ உரிமை உண்டு!

Published on

நம் நாட்டில் தமது உண்மையான அடையாளத்தை வீட்டுக்கும் சமுதாயத்துக்கும் காட்ட முடியாமல், முகமூடி அணிந்துகொண்டு வாழ்ந்துகொண்டிருப்பவர்களாகத்தான் பால் புதுமையினர் பலர் இருக்கின்றனர். வாழ்நாள் முழுவதும் தனது உண்மையான முகத்தை வெளிப்படுத்த முடியாமல், மனப் போராட்டத்தோடு வாழ்வது சித்ரவதை அல்லவா? homosexuals எனப்படும் தன்பாலுறவாளர்களைப் பற்றித்தான் குறிப்பிடுகிறேன். இவர்கள் பெண்களாக இருந்தால் ‘லெஸ்பியன்’ (Lesbian) என்றும், ஆண்களாக இருந்தால் ‘கே’ (Gay) என்றும் குறிப்பிடப்படுகிறார்கள்.

இவர்களுக்குத் தன்பாலினத்தவரிடம்தான் ஈர்ப்புவரும்; அவர்களுடன்தான் உறவுவைத்துக் கொள்வார்கள். மற்றொரு வகையினர் சற்றே விலகியவர்கள், அதாவது Bisexuals. இவர்களுக்கு இருபாலினத்தவரிடமும் ஈர்ப்பு ஏற்படும். இது ஒரு நோயோ, குறைபாடோ அல்ல என்பதை மற்றவர்கள் புரிந்துகொண்டால், இவர்களை வெறுத்து ஒதுக்க மாட்டார்கள். அந்தப் புரிதலைத்தான் இவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இவர்கள் ஏன் இப்படி வித்தியாசமாக உணர் கிறார்கள்? உலக அளவில் பல ஆய்வுகள் மேற்கொண்டபோது இவர்களது பாலியல் நோக்குநிலை (Sexual orientation) மாறுபட்டு இருப்பது தெரியவந்தது. சில மரபணுப் பண்புகள், இவர்களது சூழ்நிலையின் பாதிப்பு போன்ற காரணிகளால் ஏற்படும் மாற்றம்தான் இது. இந்த மூன்று வகையினரும் தாமாகப் பாலியல் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை. பிறவி யிலேயே இப்படி ‘புரோகிராம்’ ஆகியிருக்கிறது. பூப்பெய்தும் முன்பே, அந்த நாட்டம் நிகழ்ந்துவிடுகிறது! உலகச் சரித்திரத்தில் பல நாடுகளில் இவர்களும் இருந்திருக்கிறார்கள் எனும் செய்தியும் பதிவாகியிருக்கிறது.

இப்படி இருப்பது இவர்கள் தவறா? நம் பண்பாட்டில் இது ஏற்றுக்கொள்ளப்படாத விஷயம் என்பதால் பெண்கள் பெரும்பாலானோர் தங்கள் பெற்றோரிடமே இதை மறைத்துவிடுவார்கள். திருமணப்பேச்சு வரும்போது, ஏதோ சாக்குகளைச் சொல்லி ஒத்திப்போடுவார்கள். உண்மை வெளிவந்தால் குடும்பத்தில் பூகம்பம் வெடிக்கும். அவர்களுக்கு ஓர் ஆணுடன் உறவில் இருப்பதென்பது இயலாது.

எதிர்நோக்கும் சவால்கள்

பள்ளி, கல்லூரி நாள்களில் ‘பாய் ஃபிரெண்ட்’ போன்ற பேச்சுகளில் தோழிகள் ஈடுபட, இவர்களுக்கு அது ரசிக்காது. சற்றே ஒதுங்கித் தனியே இருப்பார்கள். தனக்கொரு துணையைக் கண்டுபிடிப்பது, பகிரங்கமாகத் துணையோடு வாழ்வது, குடும்பத்தை ஏற்றுக்கொள்ள வைப்பது இவையெல்லாமே இவர்களுக்குச் சவால்தான். தனக்கு ஈர்ப்பு ஏற்படும் ஒருவரிடமிருந்து சரியான சமிக்ஞை கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டும். துணை கிடைத்தாலும் தொடர்ந்து உறவு வளர வாய்ப்புகள் நிறைய கிடைக்காது. ரகசியமாகச் சந்தித்துப் பழகும்போது அன்பு ஆழமாகலாம். ஆனால், கணவன்-மனைவி இடையே இருப்பதுபோல் ஊடல்களும் அதிகரிக்கும். உறவு முறிதல், மனச்சோர்வு, மீண்டும் தேடல், புதிய உறவின் வரவு எல்லாமே குடும்பத்துக்குகூடத் தெரியாமல் நடக்க வேண்டுமென்றால், இவர்களின் மன அழுத்ததைப் புரிந்துகொள்ள முடிகிறதுதானே? இறுதியில் இருவரும் இணைந்து குடும்பம் நடத்தத்தான் முடியுமா? மனபலம் இல்லாத லெஸ்பியன்கள் இவர்களுக்கென்று உள்ள ‘சப்போர்ட்’ குழுவில் சேர்ந்து மனபலம் பெறலாம். தற்காலிகப் பிரச்சினைக்குத் தற்கொலை என்ற தவறான தீர்வை எடுக்க வேண்டாமே. ‘கே’யானவர்களுக்கும் இதே நிலைதான்.

சமுதாயத்தால் அங்கீகரிக்கப்படாத உறவில் இருப்பதால் ஏற்படும் குற்ற உணர்வு, என்னவாகுமோ என்கிற ஒரு பதற்ற நிலை, தாழ்வு மனப்பான்மை, எதிலும் கவனக்குறைவு, இனம் புரியாத கோபம் போன்ற மன நலப் பிரச்சினைகள், குடல் புண், ரத்த அழுத்தம், மாதவிடாய், ஹார்மோன் பிரச்சினைகள் ஆகியவை விடாது இவர்களைத் துரத்தும்.

மேலை நாடுகளில் இது ஏற்றுக்கொள்ளப்பட்ட உறவாகிவிட்டதால், இந்த மாதிரிப் பிரச்சினைகள் கிடையாது. நம் நாட்டில் சட்டரீதியான அங்கீகாரம் இவர்கள் திருமணத்துக்கு அளிக்கப்படாவிட்டாலும், ‘இது குற்றம் அல்ல’ என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. உளவியல் ஆற்றாளரான என்னிடம் கொட்டித் தீர்த்த, இந்தச் சிறுபான்மையினரின் வேதனைகளை என்னால் புரிந்துகொள்ள முடிவதால், அவர்கள் சார்பில் பேசுகிறேன். அவரவர் நினைத்தபடி வாழ இந்த உலகில் எல்லாருக்கும் அனுமதி உண்டென் றால் இவர்களுக்கும் ஏன் இருக்கக் கூடாது?

(மனம் திறப்போம்)

கட்டுரையாளர், உளவியல் ஆற்றாளர்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in