

“நான் எதையோ இழந்துவிட்டதாக உணர்ந்தேன். ஆனால், அது என்னவென்று தெரியவில்லை. மெதுவாகக் கீழே பார்த்தேன். ஐயோ... என் காலின் எச்சங்களைத்தான் கைகளில் வைத்திருந்தேன். உயிர் போகும் வலி இருந்தாலும், நான் கத்தவோ அழவோ இல்லை” என்று குண்டு வெடிப்பில் தன் காலை இழந்ததை நினைவுகூர்கிறார் டிமா அல்-அக்தா.
சிரியாவைச் சேர்ந்த ஓட்டப்பந்தய வீராங்கனை டிமா, 11 ஆண்டுகளுக்கு முன்பு, 18 வயதில் தன் ஒரு காலை இழந்தார். சிரியாவில் போர் ஆரம்பித்த சில நாள்களிலேயே வீட்டில் இருந்தபோது குண்டுவெடிப்பை எதிர்கொண்டார். “காலை இழந்த துயரம் என்னை ஆக்கிரமித்தாலும் உயிர் பிழைத்திருக்கிறேனே என்கிற எண்ணம் என்னை வலிமையானவளாக மாற்றியது” என்கிறார் டிமா.
நிலம், கடல், வான்வழியாகப் போரின் பயங்கரத்திலிருந்து தப்பி ஓடிய ஆயிரக்கணக்கான சிரியர்களைப் போலவே டிமாவின் குடும்பமும் லெபனானில் தஞ்சம் அடைந்தது.
“எல்லாப் பெண்களையும் போலவே எதிர்கால லட்சியம் எனக்கும் இருந்தது. ஒரு மாற்றுத்திறனாளியாக இனி என்ன செய்யப்போகிறேன் என்று யோசித்தேன். ஒரு வேலையில் சேர விரும்பினேன். மாற்றுத்திறனாளி என்பதாலும் அகதி என்பதாலும் எனக்கு வேலை கிடைக்கவே இல்லை. என்னைப் பார்ப்பவர்கள் எல்லாம், நீ இப்படி இருப்பதற்குப் பதில் உயிரிழந்திருக்கலாம் என்றார்கள். நான் ஏன் வாழக் கூடாது என்கிற வைராக்கியம் என் மனதுக்குள் ஏற்பட்டது. ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்துக்குச் சென்றோம். இங்கிலாந்தில் எனக்குச் செயற்கைக் கால் பொருத்தப்பட்டது. மீண்டும் ஓட முடியும் என்கிற நம்பிக்கை வந்தது. எதையாவது சாதிக்க முடியும் என்று நீங்களே சொல்லிக்கொள்ளும்போது, உங்கள் மனம் உங்களுக்கு ஒரு வழியைக் காட்டும் என்பதை நான் உணர்ந்தேன். இதோ, 2024ஆம் ஆண்டு பாராலிம்பிக்கில் பங்கேற்கப் போகிறேன்” என்கிறார் டிமா.
காலை இழந்த பிறகும் மீண்டும் ஓட்டப்பந்தய வீராங்கனையாக மாறியிருக்கும் டிமா, தன்னைப் போல் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் பெரும்பான்மையான நேரத்தைச் செலவிடுகிறார். பிபிசி தேர்ந்தெடுத்த 2022ஆம் ஆண்டுக்கான நூறு சிறந்த பெண்களில் டிமாவும் ஒருவர். பிரபல பாப் இசைப் பாடகரான ஆனி மேரியின் ‘பியூட்டிஃபுல்’ என்கிற ஆல்பத்தில் டிமாவின் கதை இடம்பெற்றதைத் தொடர்ந்து, இவரை உலகம் கண்டுகொண்டது.