

காசிநாதன் நல்ல உழைப்பாளி. அவனுக்கு நஞ்சை, பிஞ்சை என்று மூன்று ஏக்கர் வரை இருந்தது. அதனால், கொஞ்சம்கூட ஓய்வில்லாமல் எந்த நேரமும் வேலை செய்தபடிதான் இருப்பான். அவன் பக்கத்து வீட்டில் பவுன்தாசு இருந்தான். அவன் அநியாயத்துக்குச் சோம்பேறி. எப்போதும் வாய் நிறைய வெற்றிலையைப் போட்டுக்கொண்டு வேலைக்குப் போகிறவர்களையும் வருகிறவர்களையும் நிப்பாட்டிப் பேசிக்கொண்டே இருப்பான்.
“மேயுற மாட்ட கெடுத்துச்சாம் போற மாடுங்கிற கதையா இவன்தேன் சும்மா இருக்கான்னா அவசரமா வேலைக்குப் போறவளையுமில்ல பேச்சு கொடுத்து நிப்பாட்டிருதான்” என்று பொம்பளைகள் அலைமோதிக்கொண்டு போவ, ஆண்கள் அவன் கூப்பிட்டதே கேட்காதது போல போய்விடுவார்கள். சிலர், “இவன் பக்கத்து வீட்டுக்காரன் காசி எப்படி அவகாச்சி புடிச்சிப்போயி வேலை செய்யுதான். அவனைப் பாத்தும் இவனுக்குப் புத்தி வரலையே” என்று அங்கலாய்த்துக்கொண்டு போவார்கள்.
ஒருநாள் நல்ல மழை பெய்யோ பெய்யென்று பெய்து பாதி கம்மாய் ரொம்பிவிட்டது. காசிக்கு இரவெல்லாம் உறக்கம் வரவே இல்லை. விடிஞ்சும் விடியாம மாடுகளைக் கொண்டுபோய் வயல்ல தொழி உழவு உழுது நெல்லை விதச்சிட்டு வந்துரணுமின்னு நினச்சவன் அந்நேரமே காளைகளின் வயிற்றை நிரப்பித் தண்ணீரெல்லாம் விட்டுத் தயாராக வைத்திருந்தான். அதேநேரம் பொண்டாட்டியை எழுப்பி விதை நெல்லை எடுத்து அள்ளி வைக்கச் சொன்னவன் விடிவதற்காகக் காத்திருந்தான்.
மறுநாள் வெட்டென்று விடிய மழையும் நின்றுவிட்டது. சம்சாரிகள் எல்லாரும் தங்கள் காளைகளைப் பத்திக்கொண்டு ஏரோட்டக் கிளம்ப, அவர்களின் பொண்டாட்டிகள் விதைப்பெட்டியோடு புருசனைப் பின்தொடர்ந்தார்கள். ஊரெங்கும் காளைகளின் மணிச்சத்தம் எல்லாரையும் எழுப்பிவிட்டது. இந்த மணிச்சத்தத்தால் பவுன்தாசும் எழுந்துவிட்டான். இவனுக்கு மழைபெய்ததும் தெரியாது, கம்மாய்க்குத் தண்ணி வந்ததும் தெரியாது. அப்படி ஒரு உறக்கம். வெளியே வந்து என்ன ஏது என்று விசாரித்த பிறகுதான் மழைபெய்த விசயமும் கம்மாய்க்குத் தண்ணி வந்த விசயமும் தெரிந்தது.
உடனே காசியைத் தேடி வந்தான். அவனும் கலப்பையும் காளையுமாகப் புறப்பட்டவன், இவன் கூப்பிடுவதைக் கேட்டு நின்றான். “ஏ காசி... ஊரெல்லாம் விதைக்கப் போறாக பொலுக்கோ. எனக்கு இன்னும் உறக்கச்சடவு தீரல. நானு ஒரு பயகிட்ட விதை நெல்லைக் கொடுத்து அனுப்புதேன். நீ உன் வேலையோட வேலையா என் வயலையும் உழுது விதைச்சிரு” என்றான். காசியும், “என் வயல்லேயே வரப்பு வாய்க்கா கொத்தி, மேடு பள்ளம் நிரப்பி விதைச்சிட்டு வாரதுக்கு எம்புட்டு நேரம் ஆவுதோ. அதுவும் தொழி உழவு” என்றான்.
பவுன்தாசு, “அப்படிச் சொல்லாத. உனக்கு விதைப்புக் கூலியா மூணு மரக்கா நெல்லு தாரேன்” என்று கெஞ்சினான். அப்போது நெல் என்பது விவசாயிகளுக்கு அரிய பொருளாயிருந்தது. பவுன்தாசு மூணு மரக்கால் நெல் தாரேன் என்றதும் காசிநாதனுக்குச் சந்தோசம் பொறுக்க வில்லை. உடனே, “சரி பையங்ககிட்ட நெல்லைக் கொடுத்துவிடு. நானு விதச்சிட்டு வாரேன். உனக்கு நேரம் கிடைக்கும்போது நானு எப்படி விதைச்சிருக்கேன் என்னன்னு போயி பார்த்துக்கோ” என்றான்.
உடனே பவுன்தாசும், “என்னப்பா நீ பேசுத. நீ பெருத்த சம்சாரி. பேரு வாங்கின யாவாரி. உன் விதைப்புல குறை சொல்ல முடியுமா? நீ உன் பாட்டுக்கு விதைச்சிட்டு வா” என்றான்.
அவன் சொன்ன மாதிரி ஏறு பொழுதுக்கு மேலே ஒரு பையனிடம் விதை நெல்லைக் கொடுத்துவிட காசிநாதனும் தன் வயல் வேலையை முடித்த பின்பு பவுன்தாசு வயலுக்குச் சென்றான். இவனது பக்கத்து வயல்தான் அவன் வயல். இதற்குள் பொழுது மேற்கே போய்விட்டது. புல் செழித்துக் கிடந்த பவுன்தாசு வயலில் ஏதோ பேருக்கு உழுதேன் என்ற பெயரில் உழுது அவன் கொடுத்துவிட்ட நெல்லை விதைத்துவிட்டு வந்தான் காசிநாதன். வந்ததுமே, “உன் வயலில் உழவு இல்லாம புல்லு மண்டிக்கிடக்கு. நான் அதுலயே ஒரு உழவு உழுது விதச்சிட்டு வந்தேன். நீ பத்து ஆளுகளைக் கூட்டிட்டுப் போயி களையெல்லாம் வெட்டிப் போடு. அப்பத்தேன் நெல்லுப்பயிறு நல்லா வரும்” என்றான். உடனே பவுன்தாசும், “உன் வயலுக்கு எப்ப களை எடுப்பயோ அப்ப என் வயலுக்கும் களை எடுத்துரு. அதுக்காக உனக்கு மூணு மரக்கா தானியம் தாரேன்” என்றான்.
காசிநாதனும், “களைக்காச்சிலும் நீ போயி கிட்டத்துல இருந்து எடுக்கச் சொல்லு. அப்பத்தேன் உனக்குப் பயிரோட வளர்ச்சி தெரியும்” என்றான்.
பவுன்தாசும், “அதெல்லாம் வேண்டாம்பா. நீயே களையும் எடுத்துரு” என்றான்.
காசி தன் வயலில் களை எடுத்துவிட்டு உப்பு, புண்ணாக்கு என்று உரம் போடும்போது பவுன்தாசும் உப்பு, புண்ணாக்கு எல்லாம் வாங்கி அவனிடம் கொடுத்துத் தன் வயலில் போடும்படிச் சொன்னான். காசியோ, “உன் வயல்ல போட்டா உரம் நெல்லுக்குப் போவாது, புல்லுக்குத்தேன் போவும்” என்றான். எல்லாவற்றையும் போட்டு முடித்து ஒரு மாதம் ஆன பிறகு நெல் விளைந்துவிட்டது. “நானு ஆளுகளைக் கூட்டிட்டுப் போயி கருதறுக்கப் போறேன்” என்றான் காசிநாதன்.
“அப்படியே எனக்கும் கருது அறுத்துரு” என்றதும் .“இந்த வேலைக்கு மட்டும் என்னை ஏவாத. நீயே வா” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான் காசி.
பவுன்தாசும் ஆட்களைக் கூட்டிக்கொண்டு போனான். அவன் வயலில் வெறும் புல்தான் இருந்தது. “விதைக்கிற நேரமெல்லாம் வீட்டுல இருந்துட்டு அறுக்குத நேரம் அரிவாளைத் தூக்கிட்டு வந்தா வயல்ல என்ன இருக்கும்?” என்று எல்லாரும் கேட்க, பவுன்தாசு தலைகுனிந்தான்.
கட்டுரையாளர், எழுத்தாளர்.
உன் வயலில் உழவு இல்லாம புல்லு மண்டிக்கிடக்கு. நான் அதுலயே ஒரு உழவு உழுது விதச்சிட்டு வந்தேன். நீ பத்து ஆளுகளைக் கூட்டிட்டுப் போயி களையெல்லாம் வெட்டிப் போடு. அப்பத்தேன் நெல்லுப்பயிறு நல்லா வரும்.