Last Updated : 19 Nov, 2017 11:34 AM

 

Published : 19 Nov 2017 11:34 AM
Last Updated : 19 Nov 2017 11:34 AM

வரலாற்றுத் தடம்: அவர் ஏன் பெரியார் ஆனார்?

“பெண்கள் எங்களாலே எவ்வளவோ நன்மைகள் பெற்றிருக்கிறார்கள். இன்று பெண்கள், ஆண்களைப் போலவே எல்லாவிதமான உத்யோகங்கள், கல்வி முதலியவைகள் பெற்றுள்ளதைப் பார்க்கின்றோம். பெண்கள் கலெக்டராகவும் வக்கீலாகவும் பெரிய பெரிய உத்யோகங்களில் எல்லாம் இருப்பதைப் பார்க்கின்றோம். இவ்வளவும் பெண்கள் அடைய எவ்வளவு கஷ்டப்பட்டிருப்போம்? எவ்வளவு ஏசல்கள் வாங்கியிருப்போம்? நாங்கள் என்னென்ன மாறுதல்கள் அடைய வேண்டும் என்று கூறி பாடுபட்டு வந்தோமோ, அவையெல்லாம் சட்டமாகி அமலில் இருப்பதைக் காணும்போது இதைவிட மகிழ்ச்சி தரக்கூடிய சேதி வேறு இருக்க முடியுமா? எங்களது துணிவு எவ்வளவு தூரம் என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.” - (26.08.1959 அன்று வாலிகண்டபுரத்தில் பெரியார் ஆற்றிய உரை)

பெரியார் என்றழைத்தவர்: ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என்று அறியப்பட்டவர் 1927-ம் ஆண்டிலேயே நாயக்கர் என்ற சாதிப் பெயரைப் புறக்கணித்துப் புறம்தள்ளிவிட்டார். பெரியார் என்று பெண்கள் பட்டம் கொடுப்பதற்கு முன்னதாகவே அன்பின் பொருட்டும் பெரியார் என்ற பட்டத்துக்குப் பொருத்தமானவர் அவர் என்பதாலும் அப்படி முதலில் அவரை அழைத்தவர் சுயமரியாதை இயக்கத்தின் முக்கியப் பிரமுகர்களில் ஒருவரான வழக்கறிஞர் நாகர்கோவில் பி.சிதம்பரம் பிள்ளை. அவர் தென்னிந்திய திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் நிர்வாகியாகவும் இருந்தவர் (ஐந்தாவது நிர்வாகி). ‘ஆலயப் பிரவேசம்’ என்ற ஆங்கில நூலையும் 1930-களில் அவர் எழுதியுள்ளார். பின்னர், அது தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டது. அந்த நூலுக்கு அணிந்துரை எழுதியவர் பெரியார்.

பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கம் பெண்கள் உரிமைகள் குறித்து மிக விரிவாகப் பேசியது. மதம் எவ்வாறு பெண்களை ஒடுக்குமுறைக்கு ஆளாக்குகிறது, மதச் சடங்குகள் ஏன் பெண் மீது வலிந்து திணிக்கப்படுகின்றன, சாதியின் கூறுகளும் அதில் எவ்வாறு சேர்ந்தே பங்களிக்கின்றன என்பதையெல்லாம் 1929-ல் செங்கல்பட்டில் நடத்தப்பட்ட இயக்கத்தின் முதல் மாநாடு விளக்கியதுடன், அவற்றை எதிர்த்துத் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. பெண்களுக்குச் சமமான சொத்துரிமை அளிக்க வேண்டும் என்பது அதில் முக்கியமான தீர்மானம்.

பெண்கள் நடத்திய மாநாடு: அதற்கு அடுத்த ஆண்டு, அவர் பிறந்த ஈரோட்டு மண்ணில் நிகழ்த்தப்பட்ட சுயமரியாதை இயக்கத்தின் இரண்டாவது மாநாட்டிலும் பெண்களுக்கெனத் தனி மாநாடு நடத்தியது குறிப்பிடத்தக்கது. இதற்கு முக்கியமான காரணம், ‘எலியின் விடுதலைக்குப் பூனை எங்காவது முயற்சி செய்யுமா?’ என்று பெரியார் குறிப்பிடுவது வேடிக்கையாகப் பேசுவதுபோல் தோன்றினாலும், பெண்களின் விடுதலைக்காக ஆண்கள் பேசுவதைவிடத் தங்கள் விடுதலைக்காக, சுயமரியாதைக்காகப் பெண்களே முன்னின்று உழைப்பதே சிறந்தது என்பதைத்தான் அப்படிக் குறிப்பிட்டார்.

அதற்கான செயல் வடிவம்தான் ஒரே மாநாட்டு அரங்கில் தனித்தனியாக நடத்தப்பட்ட இளைஞர்கள் மாநாடும் பெண்கள் மாநாடும். பெண்கள் உற்சாகத்துடன் தங்களுக்கான மாநாட்டைத் தாங்களே முன்னின்று நடத்தினர்.

இந்த மாநாட்டின் தீர்மானங்கள் பெண்களுக்கு 16 வயதுவரை கண்டிப்பாகக் கல்வி அளிக்க வேண்டும் என வலியுறுத்தியது. பெண்களைக் கோயிலுக்குப் பொட்டுக்கட்டி விட்டு தேவதாசிகளாக்கும் நடைமுறைக்கு எதிர்ப்பு, கைம்பெண்கள் மறுமணம், தேவதாசிப் பெண்களை இளைஞர்கள் மணம் முடிக்க வேண்டும் என ஒவ்வொரு மாநாட்டிலும் பெண்களின் நலன் முன்னெடுக்கப்பட்டது.

பெண்களுக்கே முன்னிலை: அனைத்து மாநாடுகளிலும் பெண்கள் பங்கெடுக்க வேண்டும் என்பதைப் பெரியார் முதன்மைப்படுத்தினார். அதனால்தான் தொண்டர்கள் குடும்பமாக வந்து பங்கெடுக்க வேண்டுமென்பதை அவர் வலியுறுத்தினார். மாநாட்டின் தொடக்க உரைகளைப் பெண்களே நிகழ்த்த வேண்டும் என்ற நடைமுறையையும் அவர் வழக்கமாக்கினார். சுயமரியாதை இயக்க மாநாடுகளில் பெண்கள் பங்கெடுப்பதும் தொடக்க உரை நிகழ்த்துவதும் வெற்றுச் சம்பிரதாயமாக மட்டும் நின்றுவிடாமல், தொடர் நிகழ்வுகளாகவும் அவை மாறின.

சுயமரியாதை இயக்கத்தின் வழியாகப் பெண்களிடையே ஏற்பட்ட இந்தத் தன்னெழுச்சி பற்றி தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் என்று அறியப்பட்ட சிங்காரவேலர் குறிப்பிடும் கீழ்க்கண்ட வாசகங்கள் கவனத்துக்குரியவை:

“சமையலறைக்குள்ளே மட்டும் முடக்கப்பட்ட பெண்கள் இன்று மேடையேறிப் பேசுகிறார்கள், பொதுமக்கள் பிரச்சினை பற்றி விவாதிக்கிறார்கள். ஆண்களோடு சரிநிகர் சமமாக நின்று சமூகத் தொண்டாற்றுகிறார்கள். இதற்கான பெருமைகள் எல்லாம் பெரியாருக்குத்தான் சேரும், இந்த இயக்கத்தில் இருப்பதுபோல் பேச்சாற்றல் மிக்க பெண்களை வேறு இயக்கங்களில் பார்ப்பது மிகவும் அபூர்வம்.”

1937-ல் சென்னை மாகாணப் பிரதம அமைச்சர் ராஜாஜி, இந்தி மொழி கட்டாயமாக்கப்படும் என்று அறிவித்ததைத் தொடர்ந்து இந்தி எதிர்ப்புப் போராட்டம் வலுப்பெற்றது. 1938-ல் உச்ச நிலையை எட்டியது. பெண்கள் பலரும் அதில் கலந்துகொண்டு குழந்தைகளுடன் சிறை சென்றார்கள்.

தினந்தோறும் போராட்டமும் கைதுமாகத் தொடர்ந்தது. அதைத் தொடர்ந்துதான் தர்மாம்பாள், மீனாம்பாள் சிவராஜ், நாராயணி அம்மாள் போன்ற பெண்கள் அவருக்குப் ‘பெரியார்’ என்று பட்டம் சூட்ட முடிவெடுத்தனர். 1938 நவம்பர் 13 அன்று சென்னையில் முற்போக்குப் பெண்கள் சங்க மாநாடு நடத்தப்பட்டது.

மாநாட்டை மீனாம்பாள் சிவராஜ் கொடியேற்றித் தொடங்கி வைக்க, நீலாம்பிகை அம்மையார் தலைமை உரை நிகழ்த்தினார். இந்த நிகழ்வில் தனக்கு வழங்கப்பட்ட ‘பெரியார்’ என்கிற பட்டத்தை மகிழ்வுடன் பெரியார் ஏற்றுக்கொண்டார். 20.11. 1938 தேதியிட்ட ‘குடிஅரசு’ இதழில் ‘தமிழ் நாட்டுப் பெண்கள் மாநாடு’ என்று தலைப்பிட்டு முகப்புச் செய்தியாகவும் இது வெளியிடப்பட்டுள்ளது.

என்றைக்கும் நிலைத்துநிற்கும் பட்டம்: பெண் ஏன் அடிமையானாள் என்பதையும் பெண்ணுக்குப் புரிய வைத்தவர். ‘உன் விடுதலைக்குத் தடையாக இருக்கும் கூந்தலை நறுக்கு. ஆறு கெஜம், ஒன்பது கெஜம் புடவைக்கு மாற்றாக பேண்ட் அணிந்துகொள். பிள்ளைப்பேறு உன் முன்னேற்றத்துக்குத் தடையாக இருக்கும் என்றால், கருப்பையையும் அறுத்துப் போடு’ என்றெல்லாம் பெரியார் மட்டுமே பேசினார். தமிழ்நாட்டில் அவரளவுக்குத் தீவிரமாகப் பெண்ணுரிமையை வலியுறுத்தியவர்கள் மிகக் குறைவு. இதை மட்டுமே அவர் பெண்களுக்குச் சொல்லவில்லை.

தன் வாழ்நாளில் தான் எப்போதாவது அமைச்சராக நேர்ந்தால், பெண்களின் கல்விக்காக மட்டுமே பணத்தைச் செலவழிப்பேன் என்றும் அவர் பேசியிருக்கிறார். ஆனால், அவர் அமைச்சராகவும் இல்லை, ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்கவும் இல்லை.

சமூகநீதியும் எளியவர்களுக்கான கல்வியும் இன்று பெரும் கேள்விக்குறியாகி இருக்கும் நிலையில் பெரியாரை நினைக்காமல் இருக்க முடியுமா?

மாணவி அனிதாவின் தற்கொலைக்குப் பிறகு நம் குழந்தைகளின் உயர்கல்வி, எதிர்காலம் குறித்து யோசிக்கும்போது தவறாமல் நினைவில் எழும் சமூகநீதிக் காவலரை ‘பெரியார்’ என்றழைத்த பெண்கள் போற்றத்தக்கவர்கள். தன் வாழ்நாள் கடந்தும் அவர் பெரியாராகவே நிலைத்து வாழ்கிறார்.

-கட்டுரையாளர் எழுத்தாளர்,
பெண்ணியச் செயல்பாட்டாளர்
தொடர்புக்கு: asixjeeko@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x