

ஒ
ரு தந்தைபோல் என் பின்புலமாக இருந்து அனைத்து வழிகளிலும் என்னை ஊக்குவித்தார். முதுகலைப் பட்டத்துடன் பல்கலைக்கழக விரிவுரையாளராக இருந்த நான் முனைவர் பட்டம் பெற்றது முதல், சவாலாக அமைந்த பல்கலைக்கழக நிர்வாகப் பணியை வகித்ததுவரை, அனைத்துக்கும் தூண்டுகோலாக இருந்தவர் என் கணவர். நான் அமெரிக்கா சென்றிருந்தபோது என் உடல்நலம் பாதிக்கப்பட்டு இரண்டு நாட்கள் ஐ.சி.யுவில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். இந்தியாவிலிருந்த என் கணவருக்கு இதைத் தெரிவிக்கவில்லை. அப்படி இருந்தும் அந்த இரண்டு நாட்களும் ‘உங்கம்மாவுக்கு அங்கு ஏதோ பிரச்சினை’ என்று மகன்களிடம் சொல்லி சரியாகச் சாப்பிடாமல் மன உளைச்சலுடன் இருந்துள்ளார்.
வாழ்வில் ஒரு பொழுதும் என் உறவினர் அவர் உறவினர் எனப் பிரித்துப் பார்த்ததேயில்லை. ஆண் என்ற ஆணவமோ கணவன் என்ற அதிகாரமோ துளியும் இன்றி எப்பொழுதும் என் நலனையே முன்னிறுத்தும் உயிர்த்தோழன் அவர். வாழ்க்கையில் சில சோகங்களும் பணியிடத்தில் சில பின்னடைவுகளும் ஏற்பட்டபோது நான் துவண்டுவிடாமல் தாங்கிப்பிடித்தவர் அவர்.
வீட்டில் அனைத்துப் பணிகளிலும் எனக்கு உதவியாக இருப்பார். நான் அவரைப் பலமுறை பேர் சொல்லி அழைத்திருக்கிறேன். ஆனால் அவர் அவசியமான நேரங்களில் மட்டுமே என்னைப் பேர் சொல்லி அழைத்திருக்கிறார். கேட்டால், ‘ எல்லாம் மனைவிக்கு ஒரு மரியாதைதான்’ என்று சொல்லி அழகாகச் சிரிப்பார். அவர் என்னிடம் பேசும்போதும், என்னைப் பற்றிப் பிறரிடம் பேசும்போதும் அவர் பயன்படுத்தும் வார்த்தைகளே மனைவிக்கு அவர் தரும் மரியாதையை உணர்த்தும். ஆனால், வார்த்தை ஜாலங்கள் எல்லாம் அவருக்குக் கைவராத கலை. ‘ஏம்பா ஒரு நாளாவது ஐ லவ் யூன் னு சொல்லியிருக்கிங்களா?’ என்று வம்புக்கிழுத்தால் ‘சொன்னால்தான் தெரியுமா? என்று குழந்தையைப் போல் சிரிப்பார்.
அவரது உயிர்க் கொல்லியாக வந்த நோய் பற்றி அலுத்துக்கொண்டதுமில்லை. நான் வருத்தப்படக் கூடாது என்பதற்காகத் தன் வலியை வெளிக்காட்டிக் கொள்ளவுமில்லை. அவருக்குப் பின்னும் நான் மன நலம், உடல் நலம் பாதிக்கப்படாமல் இயல்பான வாழ்க்கை வாழ வேண்டுமென்பதற்காகச் சிறிய விஷயங்கள் முதல் பெரிய விஷயங்கள்வரை பார்த்துப் பார்த்துச் செல்படுத்துவதில்தான் அவர் கவனம் முழுவதும் இருந்தது. அவர் விருப்பப்படியே நான் இயல்பான வாழ்வை எதிர்கொள்ள நான் அறியாமலேயே என்னையும் பக்குவப்படுத்திச் சென்றுவிட்டார்.
தான் வாழும்போதும், தன் வாழ்க்கைக்குப் பின்னும் மனைவியை நேசித்துக் கொண்டாடிய தோழமையான கணவருடன் வாழ்ந்த 40 ஆண்டுகால வாழ்க்கை பல நூறு ஆண்டுகள் போல எனக்குத் தோன்றுகிறது.
-தெய்வமணி ராஜசேகரன், மதுரை.