நலமும் நமதே: மழைக்காலத்தை எளிதாகச் சமாளிக்கலாம்

நலமும் நமதே: மழைக்காலத்தை எளிதாகச் சமாளிக்கலாம்
Updated on
2 min read

ழைக்காலம் தொடங்கிவிட்டாலே சளி, இருமல், காய்ச்சல் போன்ற மழைக்கால தொற்று நோய்களைச் சமாளிப்பது குறித்துதான் பலரும் கவலைப்படுவார்கள். அதிலும் எத்தனை முறை சொன்னாலும் மழையில் விளையாடிவிட்டு வரும் குழந்தைகளைப் பாதுகாப்பதில் கூடுதல் கவனம் எடுக்க வேண்டிவரும். முதியவர்கள், குழந்தைகள், பெண்கள் ஆகியோருக்கு எளிதில் நோய்த்தொற்று ஏற்படக்கூடும். மழைக்காலத்தில் பொதுவாக ஏற்படும் உடல்நலப் பிரச்சினைகள் குறித்து விளக்குவதோடு அவற்றைத் தடுப்பதற்கான ஆலோசனைகளையும் வழங்குகிறார் சென்னை மருத்துவக் கல்லூரியின் பொதுநல மருத்துவர் ஆர். ரகுநந்தன்.

“பொதுவாக மழைக்காலத்தில்தான் வாந்தி, வயிற்றுப் போக்கு, காய்ச்சல் போன்றவை அதிக அளவில் பரவும். மழைக்காலத்தில் தேவையில்லாமல் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். அதிலும் இரண்டு வயதுவரையுள்ள குழந்தைகளைத் தவிர்க்க முடியாத காரணங்கள் இருந்தால் மட்டுமே வெளியே அழைத்துச் செல்லலாம். குழந்தைகள் வீட்டில் இருந்தாலும் அவர்களுக்குக் கனமான ஆடை, காலுக்கு சாக்ஸ் ஆகியவற்றை அணிவிக்க வேண்டும். முந்தைய நாள் உணவைச் சூடாக்கிச் சாப்பிடுவதைத் தவிர்த்துவிட்டு, அவ்வப்போது சமைத்துச் சாப்பிடுவது நல்லது. கேன்களில் வாங்கும் தண்ணீராக இருந்தாலும் நன்றாகக் கொதிக்கவைத்த பிறகு குடிப்பது நல்லது. வெளியே விற்கப்படும் அசைவ உணவை மழைக் காலத்தில் தவிர்க்க வேண்டும். குறிப்பாக வெளியிடங்களில் விற்கப்படும் சூப் உள்ளிட்ட திரவ உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். சாலையோரங்களில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களைச் சாப்பிடுவதால் வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்படலாம்.

மழைக் காலத்தில் இரண்டு நாட்களுக்கு மேல் தொடர்ச்சியாகக் காய்ச்சல், இருமல், சளி போன்றவை இருந்தால் நிமோனியா காய்ச்சலாக இருக்கலாம். இரண்டு நாட்களுக்கு மேல் உடலில் எந்தப் பிரச்சினை இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம். தைராய்டு, மூச்சுத் திணறல், சைனஸ், நீரிழிவு ஆகிய பிரச்சினை உள்ளவர்கள் சரியான நேரத்தில் மாத்திரைகளைச் சாப்பிட வேண்டும். மற்ற நாட்களைவிட மழைக்காலத்தில் எளிதாகக் காற்று மூலமாகக் கிருமிகள் பரவிவிடும். இதனால் உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவாக உள்ளவர்களை நோய்த்தொற்று விரைவில் தாக்கிவிடும்.

மழையில் நனைந்துவிட்டால் ஈரமான ஆடைகளைக் கழற்றிவிட வேண்டும். கொஞ்ச நேரத்தில் காய்ந்துவிடும் என ஈரமான ஆடைகளை அணிந்துகொண்டிருக்கக் கூடாது. இதனால் உடல் அரிப்பு, காய்ச்சல் போன்றவை ஏற்படலாம். உடலை நன்றாகத் துடைத்து உலர்வான ஆடைகளை அணிய வேண்டும். அதேபோல் மழைக்காலத்தில் பலருக்குக் கால்களில் சேற்றுப் புண் உண்டாகும். அதனால் மழை நேரத்தில் வெளியே சென்றுவிட்டு வந்தால் உடனடியாகக் கால்களை சோப்பு போட்டுக் கழுவிவிட்டு, ஈரம் போகத் துடைக்க வேண்டும்.

மழைக்காலத்தில் சாலைகளில் மின் கம்பிகள் அறுந்து விழுந்திருக்கக் கூடும். மழை பெய்யும் நேரத்தில் குழந்தைகளைக் கடைக்கு அனுப்புவது, விளையாட விடுவது எனத் தனியாக வெளியேவிட வேண்டாம். தண்ணீர் அதிக அளவில் தேங்கியிருக்கும் இடங்களில் நடக்கக் கூடாது. வீட்டில் யாருக்காவது மின்சாரம் தாக்கிவிட்டால் முதலில் மின்சார இணைப்பைத் துண்டிக்க வேண்டும். மின்சாரம் தாக்கியவரைத் தொட்டால் தொடுபவருக்கும் மின்சாரம் தாக்கும் ஆபத்து இருப்பதால் அவரைத் தொட்டுத் தூக்கக் கூடாது.

05CHLRD_DR RAGUNANDHAN ஆர்.ரகுநந்தன்right

அதேபோல் வீட்டில் சுவிட்ச் போடும்போது மின்சாரம் தாக்கக்கூடும். அப்போது சிலர் உடனடியாகக் கைகளை எடுத்துவிடுவார்கள். ஷாக் அடித்தவுடன் கைகளை உடனடியாக எடுத்துவிட்டாலும் உடலில் ஒரு அதிர்வு பாய்ந்ததுபோல் இருக்கும்.

அதனால் மின் அதிர்வுக்கு உள்ளானவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம் ஆகியவை சரியாக உள்ளனவா என்று சோதித்துப் பார்த்துக்கொள்ள வேண்டும். ஷாக் அடித்ததும் சிலர் கீழே விழுந்துவிடுவார்கள். அப்படிக் கீழே விழுந்துவிட்டால் தலையில் அடிபட்டிருக்கிறதா என்று சோதித்துப் பார்க்க வேண்டும்.

ஷாக் அடிப்பதைவிட அதனால் கீழே விழுவதால்தான் பலருக்கு அதிக பாதிப்பு உண்டாகிறது.

நன்றாகக் காய்ச்சிய சுத்தமான குடிநீர், உணவு, தேவையில்லாமல் வெளியே செல்வதைத் தவிர்த்தல் ஆகியவற்றைக் கடைப்பிடித்தாலே மழைக்காலச் சிக்கல்களைத் தவிர்க்கலாம்” என்கிறார் மருத்துவர் ரகுநந்தன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in