

என்னுடைய உயிர்த்தோழி ஒருவர் இன்று அவளுக்கு ஐம்பத்தியந்து ஆறு ஆகிறது அவளுக்கு. பேரன், பேத்தி, மகன்கள் என அழகான குடும்பச் சூழ்நிலை. ஆனால் இருபது வயதில் பூட்டப்பட்ட பெண் விலங்கிற்கு இன்றும் அவள் அடிமைதான். கட்டுகிற சேலை, செய்கிற சாப்பாடு எல்லாம் அவளின் கணவரின் விருப்பம்தான். அவளின் கணவருக்கு சாப்பிடும் போது டி.வி வேண்டும், சாப்பாடு சூடாகாவும், சுவையாகவும் இருக்க வேண்டும். இதனால் ஹாலுக்கும், சமையல் அறைக்கும் அலைந்துக் கொண்டு இருப்பதான் என் தோழியின் அன்றாட வேலை.
என் தோழியின் கணவரை பொருத்தவரை மனைவி என்பவள் சம்பளம் இல்லா பணிப்பெண். அவள் பிறவி எடுத்ததே தனக்கு சேவை செய்யத்தான். குளிப்பதற்கு ஆறு குடம் தண்ணீர், பல் துலக்க மூன்று குடம் என வீட்டில் உள்ள அனைவரும் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தெருக்குழாயில் தண்ணீர் பிடித்துவந்து நிரப்புவால். சாப்பாட்டு பாத்திரங்களை அவரின் மேற்பார்வையில் கழுவ வேண்டும். இவ்வளவு பிரச்சனைகள் இருந்த போதும் என் தோழி இதுநாள் வரை தன் வாழ்க்கையை பற்றி அலட்டிக் கொள்ளாமல் இருந்தால்.
மகன்கள் படிப்பு முடியும் வரை வீட்டிலேயே ராணுவச் சிறையில் இருந்தார்கள். படிப்பு முடிந்து வேலை கிடைத்ததும் வெகுதூரம் பறந்துவிட்டார்கள். அப்போது பறந்த சென்றவர்கள்தான் மீண்டும் தங்களுடைய சொந்த வீட்டுக்கு திரும்பவே இல்லை. வெளியூரில் இருந்துக் கொண்டே பேரன், பேத்திகள் எல்லாம் என் தோழியிடம் தொலைபேசி வாயிலாக பேசுவார்கள். அப்படி பேசும் போதெல்லாம் அவளின் மகன்கள் “‘எப்படி அம்மா இவரோடு காலம் தள்ளுகிறாய்? என கேட்பதுண்டு. பேர பசங்களும் தொலைபேசியில் பேசும் போது “பாட்டி தாத்தா வாயைத்திறந்தாலே பயமா இருக்கு” என கூறுவார்களாம். அதற்கேற்றார் போல் என் தோழியின் கணவரும் “பேரப் பசங்கள் எல்லாம் உங்கிட்டதான் நல்ல பேசுறாங்க என்னிடம் அலந்துதான் பேசுறாங்க” என்பாராம். அத்தையை மாமா படுத்துறபாடு அப்பப்பா என பயப்படுகிறார்களாம் மருமகள்கள்.
ஆனால் எல்லாவற்றுக்கும் என் தோழியின் பதில் புன்னகைதான். மகன்களின் ஊருக்கு போனாலும் காரில் ஏரியதும் முதல் இறங்கும் வரை சாலை விதிகள், மேடு பள்ளங்கள் என அறிவுரைகள்தானாம். இப்போதெல்லாம் என் தோழி எதற்கு கவலைப்படுகிறார் தெரியுமா? நான் முந்திவிட்டால் இவர் கதி என்னவாகும்? இவர் குணத்துக்கு யார் இவரை வைத்துக் கொள்வார்கள்? என்பதுதான்.
என் தோழி அடிமையா? சராசரிப் பெண்ணா? அடி மேல் அடி விழுந்ததில் மறத்துப் போய்விட்டாளா? எனக்கு புரியவில்லை.
எஸ்.சண்முகசுந்தரி சிவசுப்பிரமணியன்,திருநெல்வேலி.