தினமும் மனதைக் கவனி - 24: அந்தக் குழந்தைகளை விட்டுவிடுவோம்

தினமும் மனதைக் கவனி - 24: அந்தக் குழந்தைகளை விட்டுவிடுவோம்
Updated on
2 min read

பெண்களுக்குக் கடைசிவரை வாழ்க்கை ஒரு போராட்டம்தான். ஆனால், ‘பச்சிளங்குழந்தைகளுக்குக் கூடவா?’ என்று அதிர்ந்து போகிறோமல்லவா? குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் முறைகேடு என்பது 0 முதல் 18 வயதுக்குள்பட்ட குழந்தையிடம் விரும்பத்தகாத தொடுதல் முதல் ஆபாசப் படங்களைப் பார்க்கவைத்தல், பாலியல் வன்புணர்வு, சைபர் குற்றம் வரை பலவற்றையும் உள்ளடக்கியது. பெரும்பாலும் உறவினர்களோ, தெரிந்தவர்களோதான் இளம்வயதில் குழந்தைகளைப் பாலியல் முறைகேடுகளுக்கு உட்படுத்துகிறார்கள் என்பது அதிர்ச்சியளிக்கும் தகவல்.

உலகச் சுகாதார நிறுவனம் 2009இல் எடுத்த கணக்கெடுப்பின்படி 0லிருந்து 18 வயதுக்குள், 19.7% பெண் குழந்தைகளும் 7.9% ஆண்குழந்தைகளும் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கப்படு கிறார்கள். இவற்றில் வெளியே வராத தகவல்கள் எத்தனையோ!

குழந்தைகள் பயந்துபோய், யாரிடமும் சொல்லாமல் உளைச்சலில் இருப்பார்கள். ஏனெனில், குற்றமிழைத்தவன் மிரட்டிவைத் திருப்பான். தாயிடம்கூடச் சொல்லத் தயக்கம் இருக்கும். சில அம்மாக்கள் நம்ப மாட்டார்கள். சிலர் குடும்ப கௌரவம் கருதி வெளியே சொல்லாமல் அதை நிறுத்த வேறு வழிமுறைகளை எடுப்பார்கள். இது மூடிமறைக்க உதவுமேயன்றி வேறெந்த நன்மையையும் தராது. தவிர இது தற்காலிகத் தீர்வுதான். பாலியல் அத்துமீறல்களைத் தடுப்பதற்கான வழிமுறைகளைப் பெண்ணுக்குச் சொல்லிக்கொடுப்பதுதான் நிரந்தரத் தீர்வு.

ஒருமுறைக்கு மேல் பல தடவை பாலியல் முறைகேடுகளுக்கு உள்ளானபெண்குழந்தைகள் கற்பனைசெய்ய முடியாத அளவுக்குப் பாதிக்கப்பட்டிருப்பார்கள். பாலியல் முறை கேடால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்குப் பலவிதமான மனநலப் பிரச்சினைகள் (அவமானம், பதற்றம், மனச்சோர்வு, தாழ்வு மனப்பான்மை, தாய், ஆண்கள், சமுதாயம் உள்ளிட்ட எல்லார்மீதும் கோபம், கணவனுடன் படுக்கையறை பிரச்சினை) ஏற்படலாம். ஒரு பெண் தன் கணவன் நெருங்குகையில் எல்லாம் ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டதைப் போல் நடுக்கம் ஏற்பட்டு விலகிவிடுவாள். காரணம்? பத்து வயதில் நடந்த ‘அந்தச்’ சம்பவத்தின்போது ஆம்புலன்ஸ் ஒன்று தெருவில் போனதால் இப்போதும் அந்தச் சத்தம் பழைய கசப்பான சம்பவத்தை நினைவுப்படுத்த, நடுக்கம் ஏற்படுகிறது. மருத்துவர் இது ‘பிந்தைய மன உளைச்சல் கோளாறு’ (Post Traumatic Stress Disorder) என்று விளக்கி, சிகிச்சையை ஆரம்பித்தார்.

இணைந்து செயலாற்றுவோம்

பீடோஃபீலியா (Pedophilia) எனும் மனநலக் கோளாறு உள்ள வளர்ந்த ஆண்கள் பருவமடையாத பெண்ணிடம் பாலியல் முறைகேடான நடத்தையில் ஈடுபட்டால், அது குற்றம். இளம் வயதில் நடந்த கசப்பான அனுபவங்களை மருத்துவருடன் பல வளர்ந்த பெண்களும் பகிர்ந்துகொள்கிறார்கள். உங்களுக்கு இந்த அனுபவம் இருந்திருந்தால், ஆண் வாசனையே இல்லாமல் பெண்ணை வளர்க்கவேண்டும் என்று கருதுவீர்கள். அது நடைமுறைக்கு ஒவ்வாது. எல்லா ஆண்களும் அப்படி அல்ல. குழந்தைக்கு ஆரோக்கியமல்லாத தொடுதல் எது என்பதைப் புரியவைத்து, அது நடந்தால் உடனே உங்களிடம் தைரியமாகத் தெரிவிக்கச் சொல்லுங்கள். அவள் தெரிவிக்கும்போது 100% கவனம் கொடுத்துக் கேளுங்கள்; அதை நிறுத்த வழிமுறைகள் இருக்கின்றன என்றும் இது வெளியே தெரிந்தால் அவன் ஜெயிலுக்குப் போவான்; அவன் மிரட்டலுக்குப் பயப்பட வேண்டாம் என்றும் உறுதியாகச் சொல்லுங்கள். அவளை அரவணைத்துப் பாதுகாப்பைத் தெரிவியுங்கள். தனிமையில் யாருடனும் வெளியே அனுப்ப வேண்டாம்.

குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை விசாரிக்க 2012இல் பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஒரு நீதிமன்றத்தை அமைத்தது (POSCO). இரு குழந்தைகளுக்கிடையே, ஆர்வக் கோளாறு காரணமாகப் பாலியல் முறைகேடான நடத்தை இருக்கலாம்; ஆனால், தன் செயல் மற்ற குழந்தைக்கு ஏற்படுத்தும் பாதிப்பைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாத வயதில் நடப்பதால், அவர்களுக்கு மனநல ஆற்றாளர் உதவ முடியும். பெண்குழந்தைகளுக்கு நடக்கும் அனுபவங்கள் எல்லாமே ஆண் குழந்தைகளுக்கும் நடக்கின்றன என்று ஆய்வுகள் சொல்கின்றன. விகிதாச்சாரம் குறைவாக இருக்கலாம்.

மலரவேண்டிய மொட்டைக் கருக விடலாமா? முளையிலேயே கிள்ள வேண்டிய கொடுமை இது. பெற்றோர், பள்ளிகள், சமுதாயம் மூவரும் இணைந்து குழந்தைகளின் மனங்களுக்கு உரம் போட்டுப் பலப்படுத்தவேண்டும்.

(மனம் திறப்போம்)

கட்டுரையாளர், உளவியல் ஆற்றாளர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in