

என் அப்பாவும் அம்மாவும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஏதாவது படித்துக்கொண்டே யிருப்பார்கள். என் அப்பாவுக்கு 74 வயது. இன்றும் படித்துக்கொண்டேயிருக்கிறார். என் மாமியார் கோமதி கருப்பையா (74) ஓய்வுபெற்ற ஆசிரியர். அவரது பெரும்பாலான நேரத்தைப் பயனுள்ளவையாக ஆக்குபவை புத்தகங்களே. அவரும் என்னை உற்சாகப்படுத்தி நல்தகவல்களைச் சேகரித்துத் தரும் தேனீ போன்றவர்.
தான் படிக்கும் புத்தகங்களின் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் நல்ல தோழி என் மாமியார். ஆயிரம் அம்மாக்களுக்குச் சமமானவர். ஒவ்வொரு பிறந்தநாளின்போதும் புத்தகங்களைப் பரிசளித்துப் பள்ளி வயதிலேயே படிப்பின் பேரார்வத்தை என்னுள் விதைத்து உத்வேகமாக ஓட வைத்தவர்கள் என் அப்பா, தாத்தா, சின்னண்ணா. நானும் என் தம்பிகளும் புத்தகங்கள் வாங்கத்தான் அதிகம் செலவிட்டிருப்போம். அம்புலிமாமா, கோகுலம், பாலமித்ரா, விஸ்டம் எனத் தொடங்கிய எங்களின் வாசிப்பு அப்படியே படிப்படியாக முன்னேறி ராஜேஷ்குமார் க்ரைம் நாவல், பட்டுக்கோட்டை பிரபாகர், வைரமுத்து, அறிவியல் துணுக்குகள் எனத் தொடர்ந்தது.
என் அம்மாவின் இறப்பால் துடித்துத் துவண்டுபோன நேரத்தில் தாய்மை உணர்வுடன் எங்களைத் தாலாட்டியவை புத்தகங்களே. என் மனதை ஒருமுகப்படுத்தி அதில் பயணிக்க வைப்பதும் அவையே. வாசிக்க வாசிக்க என் சிந்தனையிலும் செயலிலும் மாற்றங்களும் முன்னேற்றங்களும் ஏற்பட்டன. ஆசிரியராக இருக்கும் என்னை நூல் ஆசிரியராக வலம்வர வைத்தவையும் இப்புத்தகங்களே. ஆகச்சிறந்த ஆத்மாக்களைப் புத்தகங்கள் மூலமாகத் தானே தெரிந்துகொண்டோம்? முந்தைய நூற்றாண்டுத் தலைவர்களையும் காவியங்களையும் படைப்புகளையும் இவற்றின் வழியாக அறிந்தும் புரிந்தும் கொண்டிருக்கிறோம்.
ஒவ்வொரு நொடியும் எழுதிக் கொண்டும் படித்துக்கொண்டுமே இருக்கப் பேராவலும் பேரார்வமும் கொண்டுள்ளேன். எல்லா நாள்களும் ஒவ்வொரு நொடியும் படிப்பதும் எழுதுவதும் வாய்க்கப்பெற்றால், அதைவிட மகிழ்வும் நிறைவும் எனக்கில்லை. வாசிப்பை எந்த அளவுக்கு அதிகப்படுத்துகிறோமோ அந்த அளவுக்குச் சிந்தனைகள் சிறகடிக்கும், பேச்சில் தெளிவு பிறக்கும், மனித மாண்புகள் போற்றப்படும். உலகை நோக்கும் பார்வை வேறுபடும், வியக்கவைக்கும். வாழ்க்கை பொருள்படும். தன்னம்பிக்கை வளரும்.
அகிலனின் ‘சித்திரப்பாவை’, கண்ணதாசனின் ‘சேரமான் காதலி’, எம்.எஸ்.உதயமூர்த்தியின் ‘எண்ணங்கள்’, கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’, ‘பார்த்திபன் கனவு’, நா.பார்த்தசாரதியின் ‘மணிபல்லவம்’, ‘குறிஞ்சிமலர்’, ‘அப்துல்கலாமின்’ ‘அக்னிச் சிறகுகள்’, துளசிதாசனின் ‘கனவு ஆசிரியர்’, ஆயிஷா நடராஜனின் ‘நீ எறும்புகளை நேசிக்கிறாயா?’, தந்தை பெரியாரின் ‘பெண்ணுரிமைச் சிந்தனை’, ச.மாடசாமியின் ‘என் வகுப்பறை எங்கே’?, கலகல வகுப்பறை சிவாவின் ‘நாள்குறிப்பு’, நா.முத்துநிலவனின் கவிதைத் தொகுப்பு, வைரமுத்துவின் ‘சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன்’, ரோண்டா பைரனின் ‘இரகசியம்’, லியோ டால்ஸ்டாயின் ‘அன்னா கரினீனா’ இப்படி என் பட்டியல் ரயில் பெட்டிகளைப்போல நீண்டுக்கொண்டே போகும்.
கல்லூரிக்குச் செல்லும் என் மகனுக்கு இரவு நேரத்தில் கதைசொல்ல இன்றும் உதவுபவை இப்புத்தகங்களே. என் வகுப்பறையை அலங்கரிக்கும் தோரணமாகவும் இப்புத்தகங்கள் விளங்குகின்றன என்றால் மிகையில்லை. மானுடப் பிறவி எடுத்ததையே பெருமையாக எண்ணுகிறேன். தற்பொழுது சு.வெங்கடேசனின் ‘வேள்பாரி’ என்னை வரலாற்று உலகத்தில் மிதக்க வைத்துக் கொண்டிருக்கிறது. இன்னும் ஆகச்சிறந்த படைப்பாளர்களும் என்னுள் புத்தம் புது மலர்களாக நாளும் பூத்துக்குலுங்கிக் கொண்டேயிருக்கின்றனர்.
-
, ஆர். நொரப்புக்குட்டை, கெலமங்கலம்.
| புத்தகங்கள் நமது நண்பர்கள். தடுக்கி விழுந்தால் தாங்கிப்பிடிக்கவும் வருந்திக் கிடந்தால் வழிகாட்டவும் அவற்றால் முடியும். நினைத்துப் பார்கக முடியாத பேரதிசயங்களை நம் வாழ்க்கையில் ஏற்படுத்திவிடும் வல்லமை பெற்றவை அவை. அப்படி உங்கள் வாழ்க்கையை மாற்றிய அல்லது உங்களை வாசிப்பின் பக்கம் கரைசேர்த்த புத்தகங்களைப் பற்றியும் உங்கள் வாசிப்பு அனுபவம் பற்றியும் உங்களது ஒளிப்படத்துடன் எழுதி அனுப்புங்கள். |