கிராமத்து அத்தியாயம் - 24: கறிக் குழம்பு

கிராமத்து அத்தியாயம் - 24: கறிக் குழம்பு
Updated on
2 min read

தன் பொண்டாட்டிக்குப் பிள்ளை பிறந்திருக்கு என்று கேள்விப்பட்டுப் பார்க்க வந்திருந்தான் தண்ணிக்கொடி. அன்று லச்சுமிக்குப் பிள்ளை பிறந்து ஏழாவது நாள் என்பதால் ஒச்சாயி பெரிய முட்டைக்கோழியை அடித்து, பெருஞ்சீரகம், பட்டை, தேங்காயெல்லாம் அரைத்து ஊத்திச் சட்டி நிறைய குழம்பு வைத்து நெல்லுச் சோறு ஆக்கியிருந்தாள். மகளைத் தலைக்குக் குளிக்க வைத்த பின் ஒரு உருண்டைக் கடை மருத்தை எடுத்துக் கொடுத்தாள். பிறகு ஒரு பூண்டு உரித்து அரைவட்டுக் கருப்பட்டியும் கொடுக்க, அதையும் தின்று முடித்தாள் லச்சுமி. பிறகுதான் ‘பட்டினி கிடக்கும் வயிறுக்குப் பழுதில்ல’ என்று இரண்டு அகப்பை சோறு போட்டுக் கறிக்குழம்பை ஊத்தினாள். ‘சாப்பிட்டு முடிச்சதும் புள்ளைக்குப் பால் கொடுத்து உறங்கவை’ என்று லச்சுமியிடம் சொல்லிவிட்டு வெளியே வந்தாள் ஒச்சாயி.

பக்கத்தில் படுத்திருந்த பிள்ளைக்குத் தாலாட்டுப் பாடினாள் லச்சுமி.

‘நாலு தலவாச நாப்பத்தெட்டு சன்னல்களாம்

சன்னல் வழிகாத்து வர என்செல்லமக கண்ணுறங்க

எட்டுதலவாச எம்பத்தெட்டு சன்னல்களாம்

சன்னல்வழி காத்துவர என வருசமகன் கண்ணுறங்க’

என்று பாடினாள். அப்போதுதான் அவள் புருசன் வந்தான். மருமகனைப் பார்த்து மாமியார் சற்று ஒதுக்கமாக நின்றவாறு, “வாங்கய்யா மருமவனே. ஊர்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா?” என்று கேட்க அவன் தலையை அசைத்தான். “வீட்டுக்குள்ள போங்க. தாயும் மவனும் இப்பத்தேன் குளிச்சிட்டுப் படுத்திருக்காங்க” என்றாள். தண்ணிக்கொடி வீட்டுக்குள் நுழைந்தான். நுழைந்தபோதே கறி வாசனை அவன் மூக்கைத் துளைத்தது. அப்போதே போய் சாப்பிட வேண்டுமென்று அவனுக்கு ஆசையாக இருந்தது. ஆனால், பொண்டாட்டி, புள்ளைய பார்க்காம போனா நாளைக்குக் குத்தம் சொல்லுவாகளே என்று நினைத்தவாறு, “லச்சுமி...” என்று சொல்லிக்கொண்டே உள்ளே போனான்.

புருசனைப் பார்த்ததும் லச்சுமி சந்தோசமாக, “வாரும்... புள்ள பெறந்த அன்னைக்கே வருவீருன்னு பார்த்தேன். உம்மக் காணோம். நம்ம புள்ள எப்படி இருக்கான் பாத்தீரா? அப்படியே அர்ச்சுன மவராசன் கணக்கா இருக்கான்னு ஊரெல்லாம் சொல்லுதாகளாம். அம்மா நித்தமும் ‘முச்சந்தி’ மண்ணை அள்ளிட்டு வந்து சுத்திப் போடுதா” என்றாள். தண்ணிக்கொடிக்குப் புள்ளையப் பற்றி எந்தக் கவலையுமில்லை. ஆனால், பொண்டாட்டி சொன்னதுக்காகப் பார்த்தான். ஏழு நாள் பிள்ளை படுக்கை ஓரமாக கறுப்பாக மண்புழுவாகச் சுருண்டு கிடந்தது.

தண்ணிக்கொடியின் எண்ணமெல்லாம் கறிக்குழம்பின் மீது இருக்க, “ம் ம்... நல்லாத்தேன் இருக்கான்” என்றான். லச்சுமி பதற்றத்துடன் பிள்ளை மீது கை வைத்தவாறே, “நீரு பாட்டுக்குப் படக்குன்னு தூக்கிராதீரும். புள்ள இப்பத்தேன் உறங்குதான். பதறிப்போவான்ல” என்றாள். “சரி சரி. நானும் மம்மலோடவே கிளம்புனேனா? அதேன் வயிறு பசிச்சிக் கெடக்கு. சாப்புட்டு வாரேன்” என்றான். “நானும் இப்பத்தேன் புள்ளகூடப் படுத்தேன். சத்த பொறும். பெறவு சாப்பிடுவீரு. உங்கம்மா கோழி, அரிசி எல்லாம் கொண்டுக்கிட்டு வரணுமே வல்லயா?” என்று கேட்க, தண்ணிக்கொடிக்குத் தன் வீட்டு நிலைமை வெம்பரப்பாகக் கிடப்பது நன்றாகவே தெரிந்தது.

எல்லாரும் ஓடி, ஓடி உழைத்தாலும் வயிறு நிறைய சாப்பிட முடியவில்லை. அதுவும்கூட வெஞ்ஞனம் கண்டு ரொம்ப நாளாகிவிட்டது. சுட்ட வத்தலைக் கடித்துக்கொண்டு எல்லாரும் கஞ்சியைக் குடித்தார்கள். இதில் அரிசியாவது கோழியாவது என்று அவன் யோசித்துக்கொண்டிருக்கும்போது லச்சுமி அவனை மெல்ல இடித்தாள். “இங்க பாரும் இங்கன இருக்கவ அம்புட்டுபேரும் நீ அழகுபட்ட ஆம்பளப்புள்ள பெத்திருக்க. உன் மாமியா இன்னும் உன்ன வந்து பாக்காம இருக்கான்னு அப்படிப் பேசுதாக” என்றாள். “சரி, சரி, நானு போயி வரச்சொல்லுதேன். இப்ப பசிக்கு சாப்புட்டு வாரேன்” என்றவன் அடுப்படிக்கு வந்தான்.

சாணி வச்சி மெழுகிய மண் தரை, கூரை வீடு. ஒரே அறையில் இவளுக்கும் அடுப்படிக்குமாக நடுவில் ஒரு சீலை திரையாகக் கட்டப் பட்டிருந்தது. இவன் வட்டிலை எடுத்துச் சோறு போட்டுக் குழம்பை ஊத்தினான். உறைப்பு, புளிப்பு என்று வெஞ்ஞனம் இல்லாமலே சாப்பிட்ட அவன் வாய்க்குக் குழம்பு நன்றாயிருந்தது. குழம்பின் ருசி இவனை இழுக்க இங்கே சாப்பிட்டது போதாதென்று அங்கேயிருந்த தூக்குப் போணியில் எல்லாக் குழம்பையும் ஊற்றிக்கொண்டு, தானாகப் பேசிக்கொண்டிருக்கும் பொண்டாட்டியிடம் எதுவுமே பதில் சொல்லாமல் பின்வாசல் வழியாகத் தன் ஊருக்குப் புறப்பட்டான்.

புருசன் குழம்பை ஊற்றிக்கொண்டு போவதைப் பார்த்த லச்சுமி, “எம்மா எம்மா...” என்று அம்மாவைக் கூப்பிட்டாள். “என்ன தாயி. நீயும் உம் புருசனும் உறுத்தா பேசிக்கிட்டு இருப்பீகன்னுதேன் நானு வல்ல” என்று சொல்லிக்கொண்டே வந்த அம்மாவிடம், “அவரு எங்க பேசுனாரு. வந்ததே சரின்னு சாப்புட்டதுமில்லாம அம்புட்டுக் குழம்பையும் தூக்குப்போனியில் ஊத்திட்டுப் போறாரும்மா” என்றாள். மகள் சொன்னதைக் கேட்டதும் ஒச்சாயி, “அய்யய்யோ கொடுமையே. வெறும் கறிக்குழம்புக்கு இந்த மத்தியான நேரத்துக்கு ஏதாச்சிலும் காத்து கறுப்பு தொடர்ந்துருமே” என்றவள் அவசரமாக அடுப்புக் கரித்துண்டு இரண்டை எடுத்துக்கொண்டு, “இருடி இந்தக் கரித்துண்ட நானு மருமவன் கொண்டுபோற குழம்புல போட்டுட்டு வாரேன். அடுப்புக்கரிக்குக் காத்து, கறுப்பு அண்டாது” என்று சொல்லிக் கொண்டே, “எய்யா மருமவனே சத்த நில்லுங்க. இந்தக் கரித்துண்டைக் குழம்புல போட்டுருதேன்” என்று கூவிக்கொண்டே ஒடினாள். தண்ணிக்கொடியோ நம்ம கிட்ட இருக்க குழம்பைத்தான் பிடுங்க வாரா என்று ஓட மாமியாரும் மருமவனும் எதுக்காக இப்படி ஓடுதாக என்று காட்டில் வேலை செய்தவர்கள் சேர்ந்து தண்ணிக்கொடியையும் அவன் மாமியாளையும் நிறுத்தி விசயத்தைக் கேட்டவர்கள் அன்று முழுக்க பொறுக்க மாட்டாமல் சிரித்தார்கள்.

கட்டுரையாளர், எழுத்தாளர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in