

சோளக்காட்டுக்குள் குருவி வராமல் இருக்கக் கவட்டையில் செம்மண் கட்டியை வைத்து ‘சூ... சூ...’ என்று குருவிகளை விரட்டிக்கொண்டிருந்தாள் சீதா. அந்த வழியாக வந்த வெங்கடேசுவுக்கு சீதா தனியாயிருப்பதைப் பார்த்ததும் மனசுக்குள் உற்சாகமும் சந்தோசமும் கூடியது. சீதா அவனுக்கு மாமன் மகள்தான். நாள் முழுக்கக் காடுகளில் வேலை செய்தால்கூட நிறம் மாறாமல் ‘சிவப்பு உருட்டையாய், சீனிக்கட்டியாய்’ இருந்தாள். இந்த நிறத்துக்காகவே வெங்கடேசு அவளைக் கட்டிக்கொள்ள வேண்டுமென்று நினைத்தான். ஆனால், அவர்கள் வீட்டில் என்ன சொல்வார்களோ, தன் வீட்டில் என்ன சொல்வார்களோ என்று பயந்தான். இந்த சீதா மட்டும், “நானு மச்சான் வெங்கடேசுவைத்தான் கட்டிக்கப் போறேன்” என்று சொல்லிவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்தவாறே வந்துகொண்டிருந்தான்.
சீதா அம்மாவும் இவனுடைய அய்யா செம்மலையும் கூடப்பிறந்தவர்கள். செம்மலை தங்கச்சி கோசலை மீது உயிரையே வைத்திருந்தார். தங்கைக்குப் பொண்ணு பிறந்திருக்கு என்று கேள்விப்பட்டதும் காட்டில் உழுது கொண்டிருந்தவர் மாட்டைக்கூட அவிழ்க்காமல் உழவுச்சாலிலேயே போட்டுவிட்டு அப்படியே ஓடிவந்தார். வீட்டிற்குள் நுழையும்போதே “என்ன தாயி எனக்கு மருமக பிறந்திருக்காளாமில்ல” என்று சந்தோசத்தோடு சொல்லிக்கொண்டே ஒடிவந்தார்.
அண்ணனின் அன்பைக் கண்டு பூரித்துப்போனாள் கோசலை. “தாயி உம்மவள எம்மவனுக் கட்டி முத்தத்து வெயிலு முகத்துல படாம எப்படி வச்சிருப்பேன் பாரு” என்று சொல்லிவிட்டுப் போனார் செம்மலை. அண்ணன் சொல்லில் பகுமானம் அடைந்த கோசலை தன் புருசன் கார்மேகம் வந்ததும் புள்ளையைத் தூக்கிக் கொஞ்சியவாறு அண்ணன் சொன்னதைப் பெருமையாகச் சொன்னாள். கார்மேகமும், “ஆமா... ஆமா... உன் அண்ணன் சொன்னத நீதேன் மெச்சிக்கணும். உரலு வாங்கிக் கொடுத்தவனுக்கு ‘வாய்ப்பட்டி’ வாங்கிக் கொடுக்க வக்கில்ல. (வாய்ப்பட்டி என்பது கல்லால் ஆன வளையம். உரலின் மேல் வைத்துக் குத்துவார்கள். வாய்ப்பட்டி வாங்க முடியாதவர்கள் பெரிய மண்பானையை உடைத்து, அதன் வாய்ப்பகுதியை உரல் மேல் வைத்துக் குத்துவார்கள். கோசலை அப்படித்தான் குத்திக்கொண்டிருந்தாள்). இவரு எம்மவள கட்டிட்டுப் போயி முத்தத்து வெயிலு முகத்தில படாம வச்சிக்கிருவாராக்கும்” என்றான் இகழ்ச்சியாக.
அவ்வளவுதான் கோசலைக்கு அழுகை பொத்துக்கொண்டு வந்தது. புள்ளை பெத்த உடம்பு என்றுகூட பாராமல் தேம்பி, தேம்பி அழ, காய்ச்சல் வந்துவிட்டது. யாரோ போய் செம்மலையிடம் சொல்ல அவர் உடனே பதறியடித்து ஓடிவந்தார். “எதுக்குத் தாயி இப்படி அழுவுற. புள்ள பெத்த உடம்புக்கு இப்படி அழுதா ஆகுமா? ஜன்னில இல்ல கொண்டு வச்சுரும்” என்று தேத்தினார். கோசலையும் தன் புருசன் சொன்னதை அண்ணனிடம் சொன்னாள். அதைக் கேட்டதும் செம்மலைக்குக் கால் தரையில் நிற்கவில்லை. உடம்பெல்லாம் ஆடியது. உடனே நாலே நாலு வீச்சில் தன் வீட்டுக்கு வந்தார். தன் வீட்டு உரலில் இருந்த வாய்ப்பட்டியைத் தூக்கிக்கொண்டு போய் தங்கை வீட்டு உரலில் வைத்துவிட்டு, “இந்தாம்மா வாய்ப்பட்டி” என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்தார். வீட்டு வாசல்லயே கையில் தானியப் பொட்டியோடு இவர் பொண்டாட்டி வெள்ளத்தா நின்றிருந்தாள். அவள் முகத்தில் அனல் வீசிக்கொண்டிருந்தது. அவள் இவரைப் பார்த்து, “உரல் மேல் இருந்த வாய்ப்பட்டியை எங்க காணோம்?” என்று கேட்டதும் செம்மலைக்கி திடுக்கிட்டது. இருந்தாலும் சவுடாலாக, “என் தங்கச்சி வீட்டு உரல் மேல் இருக்கு” என்றார். “உம்ம தங்கச்சிக்கி வாப்பட்டி வேணுமின்னா நீரு விலைக்கு வாங்கிக் கொடுக்கணும். எனக்குக் கொடுத்த வாய்ப்பட்டிய கொண்டு போயி எதுக்குச் சீரா உம்ம தங்கச்சிக்குக் கொடுத்துட்டு வாரிரு?” என்றாள். “அப்படித்தான் கொடுப்பேன்” என்று இவர் சொல்லப் போக அன்றைக்கு இருவீட்டாருக்கும் ஆரம்பித்த சண்டை பிள்ளைகள் பெரியவர்களாகியும் வளர்ந்துகொண்டிருக்கிறது.
இப்போது சீதா குருவி விரட்டுகிறேன் என்று தன் மகன் நெற்றியில் கல்லால் அடித்துவிட்டாளாம் என்று கேள்விப்பட்டு இவர்களின் பிஞ்சைக்கே ஓடி வந்தாள் வெள்ளத்தாயி. அம்மா வருகிறாளாம் என்று கேள்விப்பட்ட வெங்கடேசு அவள் வரும்போது சீதா செம்மண்கட்டியால்தாள் எறிந்தாள் என்றால் நன்றாயிருக்காது என்று ஒரு கூர்மையான கல்லை எடுத்துத் தன் நெற்றியில் தானே அடித்துக்கொள்ள இப்போது ரத்தம் பெருகி ஓடியது. வந்து பார்த்த வெள்ளத்தாயிக்கு நெஞ்சு பொறுக்கவில்லை. “அடியே எவடி அது எம்புள்ளய இப்படி குத்துயிரும் கொலையுயிருமா அடிச்சிப்போட்டது” என்ற அத்தையின் குரல்கேட்டு சீதா ஓடிவந்தாள். அவளுக்குத் தெரியும் தான் வெறும் செம்மண்கட்டியை வைத்துத்தான் குருவியை முடுக்கினோம் என்று. பிறகு எதுக்கு இந்த வெங்கடேசு மச்சான் இப்படி ரணத்த காட்டிக்கிட்டு நிக்காருன்னு யோசித்துக்கொண்டே வந்தவளைப் பார்த்து குறும்பாகச் சிரித்தான் வெங்கடேசு. சீதாவுக்கு எல்லாம் புரிந்துபோனது. இதுவரையில் தன் நாத்தனார் மகளைப் பார்க்காத வெள்ளத்தாயி இப்போதுதான் பார்க்கிறாள். வாழைக்குருத்துப் போல வைய ஆத்துத் தண்ணி போல இடுப்பு நிறைய கொசுவமும் எடுத்துவச்ச நடையுமாக வந்த சீதாவைக் கண்டதும் வெள்ளத்தாயிக்கு வையவே முடியல. சீதா, “மச்சானுக்கு என்னைக் கட்டிக்கோங்க. உங்க வீட்டு வாய்ப்பட்டிய நானு சீரா கொண்டுவாரேன்” என்றதும் வெள்ளத்தாயிக்கு மறுத்துப் பேசத் தோணவே இல்லை.
- கட்டுரையாளர், எழுத்தாளர்.