பெண்கள் ஆண்கள் குழந்தைகள் - 6: பேசிப் புரியவைக்கத் தயங்க வேண்டாம்

பெண்கள் ஆண்கள் குழந்தைகள் - 6: பேசிப் புரியவைக்கத் தயங்க வேண்டாம்
Updated on
3 min read

நாம் அடிமைப்படுத்தப் பட்டிருக்கிறோம் என்பதுகூடப் புரியாமல் பெண்ணாகப் பிறந்துவிட்டதாலேயே நாம் ஆண்களுக்கு அடிமையாகத்தான் வாழவேண்டும் என்று நினைத்தே வாழ்வைக் கடத்தும் பெண்கள் பலர் உண்டு. “பொண்ணுன்னா கொஞ்சம் அடங்கித்தான் போகணும். ஆம்பள சொல்றத கேட்டுத்தான் நடக்கணும்” என்பது போன்ற வசனங்களை நம்மில் பலரும் கேட்டுத்தான் வளர்ந்திருப்போம். இப்படிப்பட்ட பெண்கள் பெரிதாகப் புலம்ப மாட்டார்கள். ஏனெனில், ஆண் தனக்கு மேலேதான், நாம் ஒரு படி கீழேதான் என்பது அவர்களது நம்பிக்கை. அதனால் அவன் இட்ட கட்டளையை நிறைவேற்றவே தான் பிறந்திருப்பதாக நம்பிக் காலம் கடத்திவிடுவார்கள்.

ஆனால், இது போன்றவர்களாலும் நிறைய பிரச்சினைகள் உண்டு. அவர்களுக்குப் பிரச்சினை இல்லை. இவர்கள் மற்றவர்களும் தன்னைப் போலவே இருக்க வேண்டும் என நினைப்பார்கள். அதனால், அந்த எண்ணத்தை வழிவழியாக மற்ற பெண்களிடமும் தெரிந்தோ தெரியாமலோ கடத்திக்கொண்டே இருப்பார்கள்.

புலம்புவதால் பயன் இல்லை

இப்படிப்பட்ட பெண்கள் ஒருபுறம் என்றால், இன்னொருபுறம் தான் அடிமைப்பட்டுத்தான் கிடக்கிறோம் எனப் புரிந்தாலும், அதில் தனக்கு உடன்பாடே இல்லாவிடினும், அடங்கிப்போவதில் தனக்குக் கிடைக்கும் சில செளகரியங்களுக்காகத் தன்னிலையை மாற்றிக்கொள்ள எந்தவிதமான முயற்சியையும் சில பெண்கள் எடுக்க மாட்டார்கள். அதேநேரம் அடிமைப்பட்டு வாழும் தன் வாழ்வை நினைத்துச் சுயபச்சாதாபத்தில் எப்போதும் புலம்பிக்கொண்டே காலம் கடத்துவார்கள். தன்னுடைய நிலை அதுவாகவே மாறவேண்டும் என ஓர் அதிசயக் கணத்துக்காகக் காத்துக் கொண்டிருந்தே வாழ்வைத் தொலைப்பார்கள்.

பிறர் மேல் ஆதிக்கம் செலுத்தி, செளகரியமாக வாழும் ஆண், இவர்களின் இந்நிலையை எப்படிப் புரிந்துகொள்வான்? அவர்கள் வீட்டிலும் அவனுடைய அப்பா ஆதிக்கம் செலுத்தி இருப்பார்; அம்மா அடங்கிப்போயிருப்பார். அதைப் பார்த்து வளர்ந்தவனுக்கு நம் மனதில் இருக்கும் ஆற்றாமை எப்படிப் புரியும்? நமக்கு என்ன வேண்டும் என்பதை நாம்தானே எடுத்துரைக்க வேண்டும்? பிரச்சினை யாருக்கோ அவர்கள்தானே அதைக் களைய முற்படவேண்டும்?

நிறைய பெண்கள், “ஆமாம் என்னத்த பேசி, என்னத்த புரியவைக்க?” என்று சலிப்பாகப்பேசிக்கொண்டே இருப்பார்களே தவிர, பேசித்தான் பார்ப்போமே, புரியவைக்க முயற்சி செய்வோமே என்கிற சிறு எண்ணம்கூட இல்லாமலேயே வாழ்வார்கள். சமீபத்தில் முகநூல் பதிவொன்றைப் படித்தேன். தனக்கு உடல்நிலை சரியில்லையென்றால்கூட வீட்டு வேலையெல்லாம் செய்து விட்டுத்தான் ஓய்வு எடுக்க முடிகிறது என்றும், வீட்டிலுள்ள ஆண்கள் சிறிதும் அலட்டிக் கொள்வதில்லையென்றும் ஒருவர் எழுதியிருந்தார். அதற்கு வந்த பின்னூட்டங்களைப் படித்தபோது கொஞ்சம் அதிர்ச்சியாகவே இருந்தது. ’எங்கள் வீட்டிலும் இப்படித்தான், இதெல்லாம் எப்போது மாறுமோ, வாழ்வு முழுவதும் இப்படியேதான் போகும் போலிருக்கிறது’ என்று பத்துப் பதினைந்து பெண்கள் வந்து புலம்பியிருந்தார்கள்.

மாற்றம் பரவலாகட்டும்

எனக்குத் தெரிந்து நிறைய ஆண்கள் வீட்டு வேலைகளில் பங்கெடுக்க ஆரம்பித் துள்ளார்கள். இப்படிப்பட்ட பங்கேற்புகள் இப்பொழுதெல்லாம் ஏற்படத் தொடங்கிவிட்டன. ஆனால், அனைவரின் வீடுகளிலும் இந்த மாற்றம் வரவில்லை. இன்னும் பல வீடுகளில் பெண் என்பவர் வீட்டு வேலை செய்வதற்காக மட்டுமே படைக்கப்பட்டவராகவே நினைக்கப்பட்டு ஓய்வில்லாமல் உழைக்க வேண்டும் என எதிர்பார்க்கப் படுகிறார்கள். உழைக்கும் வீட்டுப் பெண்களின் மேல் ஒரு பரிவு உணர்வுகூட இல்லாமல்தான் பலரும் இருக்கிறார்கள் என்பதே நிதர்சனம்.

இதெல்லாம் சரி. இப்படிப் புலம்பியே காலம் தள்ளும் உத்தேசமா உங்களுக்கு என்பதே என் கேள்வி. உங்கள் வீட்டு ஆண்களுக்கு எந்த அளவுக்கு வாழும் உரிமை இருக்கிறதோ, அந்த அளவு உரிமை உங்களுக்கும் உண்டு. வீட்டு வேலைகளைப் பெண் செய்வதும் சம்பாதிப்பதை ஆண் செய்வதும் குடும்பத்துக்கான வேலைப் பளுவை இருவருமாகப் பகிர்ந்துகொள்வதற்காகத்தான் இருக்க வேண்டுமேயல்லாது, பொருள் ஈட்டுபவன் பெரியவன் என்றோ, இல்லை ஆண் பெரியவன் என்றோ இருத்தல் எந்த விதத்திலும் நியாயமான வழியில்லை. கேட்டால், ’இப்படியே இவ்ளோ வருஷம் பழகியாச்சு. இனிமே என்னத்த புரிய வைச்சு இதெல்லாம் மாறப்போவுது?’ என்பதுதான் பதிலாக இருக்கிறது. இன்று வரை ஒன்று நடந்திருக்கிறது என்பதால் நாளையும் அது தொடர வேண்டும் என்கிற கட்டாயம் எதுவுமில்லை. நம் வாழ்வில் மாற்றம் வேண்டாம் என நினைப்பவர்கள் புலம்பித் தவிப்பதில் மட்டும் என்ன சாதித்துவிடப் போகிறீர்கள்? மாற்றம் வேண்டும் என்று நினைத்தால் அந்த மாற்றத்துக்கான முயற்சியை நீங்கள்தானே முன்னெடுக்க வேண்டும்?

யாருடைய வீடு?

உங்களுக்கு ஒருவேளை அலுப்பாக இருந்தாலோ இல்லை ஒரு நாள் ஓய்வு வேண்டும் என்று தோன்றினாலோ உங்களால் ஏன் அதை ஆண்களிடம் தெரிவிக்க முடியாது? ‘எனக்கு இன்று அசதியாக இருக்கிறது. இன்று நீங்கள் எதாவது செய்து எனக்கும் கொடுங்கள்’ என்று சொல்வதில் தவறென்ன இருக்கிறது? வீட்டில் இருக்கும் நேரம் ‘வாங்க சேர்ந்து எதாவது செய்யலாம்’ என்று கணவனை மட்டுமல்ல பிள்ளைகளையும் அழைப்பதில் என்ன பிரச்சினை?

பேசிப் புரியவைக்கலாம். புரியாதவர்களிடம், ‘இன்று நான் செய்ய முடியாது. உன்னால் ஆனதைப் பார்த்துக்கொள்’ என்று ஏன் சொல்ல முடியாது? எதற்காகப் பயப்படுகிறீர்கள்? ஒருநாள் ஓய்வெடுக்க உங்கள் வீட்டில் உங்களுக்கு உரிமையில்லையெனில் அதெப்படி உங்கள் வீடாகும்? ஓய்வெடுக்க விடாதவர்கள் எப்படி உங்கள் மனிதர்களாவார்கள்? அடிமைத்தனத்தை எதிர்க்காமல் நீங்கள் ஏற்கிறீர்கள் என்றால், ஒன்றை நினைவில்கொள்ள வேண்டும். இது உங்களுடன் நிற்கும் செயல் அல்ல. உங்கள் வீட்டில் ஒரு மகள் இருந்தால் அவளுக்கும் அதைக் கடத்துகிறீர்கள். உங்களுக்கு ஒரு மகன் இருந்தால் நாளை அவன் உங்களையும், அவன் மனைவியையும் இப்படித்தான் அடிமைப்படுத்த நினைப்பான்.

பெண்கள் முன்னேற ஆரம்பித்துவிட்ட இந்தக் காலத்தில் இப்படி பெண் வேலை, ஆண் வேலை என்கிற பிற்போக்குத்தனத்துடன் வளரும் ஆண் பிள்ளைகள் பின்னால் மிகவும் பாதிப்படைவார்கள். இது நம் குடும்பத்துடன் நிற்பதில்லை. மாறிவரும் சமூகத்தில் மாற்றங்களை வீட்டில் இருப்பவர்களிடம் ஏற்படுத்துவது நம் கடமையும்கூட. இது உங்கள் வாழ்க்கைப் பிரச்சினை மட்டுமல்ல என்பதை உணருங்கள். உங்கள் சுயத்தைக் கொன்று வாழும் வாழ்வில் உங்கள் மேல் உங்களுக்கே மரியாதை இருக்காது. இதில் மற்றவர் மதிப்பதில்லை என்று புலம்பித் தவிப்பதில் எந்தப் பயனும் இல்லை! அடிமைத்தனம் என்று தெரிந்தும் அதை ஏன் விரும்பி ஏற்கிறார்கள் பெண்கள்?

(விவாதிப்போம் மாற்றுவோம்)

கட்டுரையாளர், எழுத்தாளர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in