

நமது கலாச்சாரத்தில் ஒரு பெண்ணின் வாழ்க்கை தாய்மை அடையும்போதுதான் முழுமையடையும் என்பது நம்பிக்கை. கருவுறாத பெண்ணை, ‘அந்த’ ஒரு சொல்லால் முத்திரை குத்திவிடுகிறது சமூகம். அவளோ வேதனையில் தவிக்கிறாள். கருவுறாமல் போவதற்குக் கணவனோ, மனைவியோ காரணமாக இருக்கலாம். ஆனால், சில குடும்பங்களில் அந்தப் பெண்ணைத்தான் கைகாட்டுவார்கள். அவள் மனம் புண்படுமே என்று அவர்கள் யோசிப்பதில்லை.
ஒவ்வொரு மாதமும் ‘இந்த பீரியடை மிஸ் பண்ணிடுவேன்’ என்று எதிர்பார்த்திருக்கையில், டாண் என்று மாதவிடாய் வந்து, அவளது ஆசையை நசுக்கிவிடும்போது அவளது ஏமாற்றத்தைச் சொற்களால் விளக்க முடியுமா? என் கனவு நனவாகாதா என்று தனக்குள் அழுதுகொள்வாள். சிலர், உறவினர் குழந்தைக்குச் செய்யும் சடங்குகளை, கருத்தரிக்காத பெண்ணிடம் ஒரு அம்மிக்குழவியைக் கொடுத்துச் செய்யச்சொல்லி, “அடுத்து உன்னுடைய முறை” என்பார்கள். ‘இவர்களுக்கு நான்தான் குறியா?’ என்று அவள் குமைந்துபோவாள்.
படுக்கையறையில் இணக்கமான உறவு இல்லையென்றால், உறவின்போது மனதில் பதற்றம் ஏற்பட்டு, அந்தச் செயலில் முழுமையான ஈடுபாடு இருக்காது. இது கருவுறுதலைப் பாதிக்கலாம். மருத்துவரை அணுகி, இருவரில் யாருக்குக்காவது உடல்ரீதியாகப் பிரச்சினை இருக்கிறதா என்று அறிந்து, ஆவன செய்யவேண்டும். சிகிச்சை பலனளிக்கவில்லை என்றால், கோயில், ஜோசியம், பரிகாரம் எனும் வழியில் குடும்பம் இருவரையும் அழைத்துச் செல்லலாம். நம்பிக்கை குறைந்துபோவதால், அவள் ஈடுபாடின்றி இவற்றைச் செய்வாள். அவள் ஒரு தரிசு மரமாக நிற்பதை அவர்களின் செயல்பாடுகள் நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும். கொஞ்சம் கொஞ்சமாக மன அழுத்தம் அவளைப் பாதிக்க, ‘நான் வாழ்ந்து சாதிக்கப்போவது என்ன?’ என்று எண்ணி மனச்சோர்வுக்கு ஆளாவாள். கணவனுக்குத் தாய்மை உணர்வின் தீவிரம் புரியாவிட்டாலும், மனைவியோடு துணைநிற்க முடியாதா? முடிய வேண்டும்.
வழியும் தீர்வும் உண்டு
சில குடும்பங்கள் மகனுக்கு இரண்டாம் திருமணம் செய்ய விரும்பி, மகன் எழுப்பும் எதிர்குரலைக் கண்டுகொள்ளாமல் முயற்சியில் இறங்குவார்கள். வாயில்லாப் பூச்சியாக அவள் துடிப்பதைப் பார்த்து, செயலிழந்து அவள் குடும்பத்தார் நிற்பார்கள். இதற்காகவெல்லாம் நாம் கலங்கி நிற்கக் கூடாது. ஐ.வி.எஃப் எனும் செயற்கைக் கருவுறுதல் முறை குறித்து எல்லா விவரங்களையும் தெரிந்துகொள்ள வேண்டும் (சிறுகுறிப்புதான் இங்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது). இந்த முறையில் ஆரோக்கியமான கருமுட்டையும் விந்துவும் வெளியே எடுக்கப்பட்டு ‘டெஸ்ட் டியூப்’பில் இணைக்கப்பட்டு கரு உருவானதும், தாயின் கருப்பையில் செலுத்தப்படும். அடிக்கடி மருத்துவருடன் தொடர்பில் இருக்கவேண்டும். வயது ஏற, ஏற கருத்தரிப்பதில், பெற்றெடுப்பதில் சிக்கல்கள் வரலாம். அதனால் நேரம் கடத்த வேண்டாம்.
ஐ.வி.எஃப்., பலனளிக்கவில்லையென்றால், தத்து எடுக்கலாம்; அது ஓர் உன்னதமான முயற்சி.ஆதரவற்ற ஒரு குழந்தைக்குப் பெற்றோரது அரவணைப்பு கிடைக்குமே. சாதி, மத பேதங்களைச் சொல்லி, குடும்பத்தில் இதற்குக் கடுமையான எதிர்ப்பு வரலாம். எல்லாரையும் சமாளித்துத் தீர்மானம் எடுத்துவிட்டீர்களென்றால் சில விவரங்களில் உங்கள் கவனம் தேவை. உறவினரது குழந்தையைத் தத்தெடுத்தால், சிக்கல்கள் வரவாய்ப்பிருக்கிறது. சட்டரீதியான முறையில் தத்து கொடுக்கும் அமைப்பில் பதிவுசெய்து கொள்ளுங்கள். காத்திருந்து ஒரு வயதுக்குள் உள்ள ஆரோக்கியமான குழந்தை ஒன்றைத் தெரிவுசெய்து, தேவையான கோப்புகளுடன் உரிமையோடும், மகிழ்ச்சியோடும் வீட்டுக்குக் கூட்டிவாருங்கள்.
இன்று குழந்தை இல்லாததற்குக் காரணம், வாழ்க்கையில் எதையோ நீங்கள் செய்ய விதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று நம்புங்கள். தத்தெடுப்பதற்குத் தயங்கினால், ஏதோ ஒன்றை ஆரம்பியுங்கள்; வெளிச்சம் தெரியும்! வாரிசு இல்லாத ஒரு பெண் தன் வெறுமையான வாழ்வை நிரப்ப, அருகில் உள்ள குடியிருப்பில் வாழும் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க ஆரம்பிக்கலாம். குழந்தைக்காகத் தவம் கிடந்தவளுக்கு, இன்று பல குழந்தைகள் கிடைத்துவிட்டார்கள், அம்மா என்று அழைக்க! நம் நாட்டில் 2.75 கோடித் தம்பதியினர் இந்த நிலையில்தான் இருக்கிறார்கள், தெரியுமா? வாழ்க்கை உங்கள் முடிவில்!
கட்டுரையாளர், உளவியல் ஆற்றாளர்.