

கணவனோ காதல் துணையோ மறைந்துவிட்டால் அந்தத் துயரிலிருந்து மீண்டுவருவதற்கான முதல் படி ‘இனி கணவர்/துணைவர் இல்லை’ என்பதை ஏற்றுக்கொள்வதாகும். புதிய வாழ்க்கையைச் சீரமைக்கும் முயற்சியை ஆரம்பிக்க வேண்டும். கணவருக்கு வரவேண்டிய பணமும் உங்கள் வருமானமும் வங்கி வைப்பு நிதியும் உங்கள் பொருளாதார நிலையைக் கணிக்க உதவும். முதலீடு செய்யக்கூடிய நிலை இருந்தால், குடும்பத்தில் நம்பகமான ஒருவரது ஆலோசனையை கேட்டுக்கொள்ளுங்கள்.
இனி தனியாகத்தான் எதையும் செய்யவேண்டும். அழுகையும் தயக்கமும் வந்தாலும் தொடர்ந்து செய்கையில் தன்னம்பிக்கை கூடுவதைக் கவனிப்பீர்கள். இதுவரை வேலைக்குப் போகாதிருந்தால், இனி வேலை அவசியம். உறவினரிடமோ, பகல் காப்பகத்திலோ குழந்தையை விட்டுவிட்டுப் போகவேண்டும். கடினம்தான். தன்னிரக்கமே வேண்டாம். வேலை உங்கள் மனதுக்கு மாற்றாக இருக்கும். வருமானம் ஒரு பாதுகாப்பையும் கொடுக்கும்.
கணவரது உடைமைகளைப் பிரித்துக் கொடுக்கும்போது உடைந்து போவீர்கள். உடனே சுதாரித்துக்கொண்டு மீண்டுவர முயலுங்கள். குற்ற உணர்வே வேண்டாம். இனி அவர் உங்கள் நினைவில் என்றும் இருப்பார். அந்த நினைவுகளை ஒருபுறம் ஒதுக்கிவைத்து, நடைமுறை வாழ்க்கைக்கு வருவதுதான் புத்திசாலித்தனம். சிலர் உங்களைக் ‘கைம்பெண்’ என்று ஒதுக்குவார்கள். புண்பட்டுப் போகாமல், காலத்தோடு ஒத்துப்போகாதவர்களை ‘ஐயோ பாவம்’ என்று ஒதுக்கிவிடுங்கள். உங்கள் குழந்தைகளைச் சிறப்பாக வளர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டாமா? அவர்களுக்காக வாழ்வது, மீண்டுவர ஒரு உந்துதலாக இருக்கும்.
தினசரி வாழ்க்கையை நேர அட்டவணைப்படி நடத்துங்கள். காலையில் நடைப்பயிற்சி, தியானம், வார இறுதியில் தோழிகள், யோகா, பிடித்த ஒரு பொழுதுபோக்கு போன்றவை உங்கள் மனதை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள அவசியம். எந்த ஆணையும் நெருங்கவிடாமல் இருப்பது நல்லது.
அப்பா எங்கே என்று குழந்தை கேட்டால், அப்பாவைப் பற்றிப் பொய் சொல்லாதீரகள். அப்பா இனி வரமாட்டார் என்பதை வேறு எந்த விதத்திலாவது சொல்லலாம். வளர, வளர தன் சகாக்களது தந்தைகளைப் பார்க்கையில், தன் அப்பாவை மிஸ் பண்ணுவாள்/ன். கேள்விகளால் உங்களைத் துளைக்கும்போது, பொறுமையாக அப்பாவின் இறப்பைப் பற்றிப் பக்குவமாகச் சொல்லுங்கள். அப்பாவைப் பற்றி நிறைய பேசவையுங்கள். உனக்கு நான் இருக்கிறேன் என்று உத்தரவாதம் கொடுங்கள். உங்கள் குடும்ப ஆண் உறவினர்களுடன் நேரிலோ, இணையதளம் மூலமோ அவளை/னைப் பழக விடுங்கள்.
தனித்துக் குழந்தை வளர்ப்பது ஒரு பெரிய சவால். செல்லம் கொடுத்துக் கெடுத்துவிடாதீர்கள். சிறு வயதிலிருந்தே தன் பொறுப்புகளை உணர்ந்து செய்யுமாறு பழக்குங்கள். குழந்தைக்கு பாதுகாப்பான தொடுதல், பாதுகாப்பற்ற தொடுதல் இரண்டையும் புரியவையுங்கள். இனிய மண வாழ்க்கை அமையாதவர்களுக்கு இப்போதுள்ள சுதந்திரம் பிடிக்க ஆரம்பிக்கும், தவறல்ல. குழந்தை இல்லாத பெண்களுக்கு மீண்டுவருவது மிகப் பெரிய சவால்தான். ‘இனி யாருக்காக வாழவேண்டும்?’ என்கிற கேள்வி குடைந்துகொண்டே இருக்கும். சில காலம் உறவினருடன் இருக்கலாம்; ஆனால், அது நீடித்தால் பிரச்சினைகளும் வருத்தங்களும் உறவைப் பாதிக்கும். வேலை, பொருளாதாரச் சுதந்திரத்தைக் கொடுக்கும். மேற்படிப்பு, சமூகத்தொண்டு, உறவினரது குழந்தையல்லாமல் ஒரு பிஞ்சுக்குழந்தையைத் தத்தெடுப்பது போன்றவை புதிய வாழ்க்கையை உற்சாகத்தோடு தொடங்க உதவும்.
இருதரப்பினரும் கணவனது அரவணைப்பில் கிடைத்த உடல், மனரீதியான பாதுகாப்பை அவர்கள் தேடுவார்கள்; ‘அதற்குத்தான் அலைகிறாளா?’ என்று அதைக் கொச்சைப்படுத்த வேண்டாம். பொல்லாத உலகில் ஆண்துணை பாதுகாப்பைத் தரும் என்று கருதினால் தவறா? மறுமணம் நல்ல தீர்வாகலாம். ஆனால், காதலில் வீழ்ந்துவிடுவதற்கு முன் துணையை வெகுகவனமாகத் தேர்ந் தெடுக்க வேண்டும். ஊருக்குப் பயந்து, உறவில் இருப்பதோ (அதிலும் மணமான ஒருவடன்) சமுதாயத்தில் தலைகுனிவை ஏற்படுத்தும். எந்தக் காலகட்டத்திலும் உளவியல் ஆற்றாளர் ஒருவரிடம் பேசினால் குழப்பங்கள் தீர்ந்து, தெளிவு பிறந்து உற்சாகம் கூடும்.
- கட்டுரையாளர், உளவியல் ஆற்றாளர்.