

அடையாறு புற்றுநோய் மையம் அமையக் காரணமாக இருந்தவர், சென்னை மாகாணத்தில் தேவதாசி முறை ஒழிக்கப்பட காரணமாக இருந்தவர் என்கிற அளவில் பலரும் டாக்டர் முத்துலட்சுமியை அறிந்திருக்கலாம். ஆனால், சமூகச் சீர்த்திருத்தவாதியாக அவரது உலகம் மிகப் பெரியது. அதைப் பலவேறு தரவுகளின் அடிப்படையிலும் முத்துலட்சுமியோடு பழகியவர்கள், பணிபுரிந்தவர்கள், உறவினர்கள் போன்றோருடன் பேசியும் இந்நூலில் பதிவுசெய்துள்ளார் வி.ஆர். தேவிகா.
புதுக்கோட்டையில் இருந்து 1907இல் சென்னைக்குத் தன் தந்தையுடன் கண்களில் உறுதியோடும் நெஞ்சில் துணிவோடும் வந்து இறங்கிய சிறு பெண், மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றது வரலாறு. அந்த வரலாற்றைப் படைக்க அவர் பட்ட பாடுகளை கதைபோல் நம் மனதுக்கு நெருக்கமாகச் சொல்லியிருக்கிறார் தேவிகா. மருத்துவப் பணி, குடும்ப வாழ்க்கையோடு முத்துலட்சுமி திருப்தியடையவில்லை. சமூகத்துக்காக வாழ்வதே நிறைவான வாழ்க்கை என முடிவெடுத்தார். தியசாபிகல் சொசைட்டி சார்பில் அமைக்கப்பட்ட இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் இந்திய உறுப்பினரானார் முத்துலட்சுமி. பெண்ணுரிமை சார்ந்தும் அரசியல் உரிமை சார்ந்தும் அந்த அமைப்பின் செயல்பாடுகளில் இவர் பங்கேற்றார். மதராஸ் சட்டமன்றத்தின் துணைத்தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டபோது அவரது பார்வையும் செயல்படும் தளமும் விசாலமடைந்தன. குழந்தைகளைப் பெற்றெடுத்தல், வீட்டைப் பராமரித்தல் என்றில்லாமல் பெண்கள் பொறுப்பேற்றுச் செயல்பட வேண்டும் என்று முத்துலட்சுமி விரும்பினார். சட்டமன்ற உறுப்பினராக இந்தியப் பெண்கள் சங்கத்துடனும் அகில இந்திய மகளிர் கூட்டமைப்புடனும் தன் தொடர்பை அவர் உயிர்ப்புடன் வைத்திருந்தார். இந்த நூலின் மூலமாக டாக்டர் முத்துலட்சுமியின் வாழ்க்கையை மட்டுமல்ல, அந்தக் காலத்தின் அரசியல் நிகழ்வுகள், பெண்களுக்கான அமைப்புகள் - அவற்றின் பணிகள், சென்னையின் முக்கிய இடங்கள் போன்றவற்றையும் அறிந்துகொள்ள முடியும்.
முத்துலட்சுமி ரெட்டி
ஆசிரியர்: வி.ஆர்.தேவிகா
தமிழாக்கம்: பட்டு எம். பூபதி, அக்களூர் இரவி
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
விலை: ரூ.200
தொடர்புக்கு: 044-42009603