

சொந்த ஊரில் பழைய பகவதி அம்மன் கோயிலைப் புதுப்பித்து ‘கும்பாவிசேகம்’ வைக்கிறார்கள் என்று தெரிந்ததும் உள்ளூர்வாசியான அருக்காணிக்கு அப்படி ஒரு சந்தோசம். அருக்காணிக்கு அறுபது வயதுக்கு மேலே ஆகிவிட்டது. கை, கால்கள் எல்லாம் அசந்ததோடு பார்வையும்கூட அரைப்பார்வையாகிவிட்டது. பார்க்கும் பொருள்கள் எல்லாம் பூச்சிதட்டுவதுபோல் தெரிந்தது. அவளுக்கு இரண்டு பிள்ளைகளும், ஒரு பெண்ணும் இருந்தார்கள். அப்போதெல்லாம் அருக்காணி இப்படியா இருந்தாள்? ‘ஏணிப்பந்தம்’ போல நிமிர்ந்த நடையுமாக இருந்தாள்.
ஊருக்குள் ஒரு கல்யாணம் என்றாலும் சடங்கு என்றாலும் பிள்ளைப்பேறு என்றாலும்கூட இவள் இல்லாமல் ஒருகாரியம்கூட நடக்காது. இவளிடம் வந்துதான், “எக்கா அருக்காணி நீதேன் முதல் ஆளா என் வீட்டுக்கு வந்து இருந்து என் மக காரியத்த நடத்திவைக்கணும்” என்பாள் ஒருத்தி. இன்னொருத்தி, “எம்மகனுக்கு இன்னார் வீட்டுல பொண்ணு கட்டுவோமின்னு நினைக்கேன். நீ என்னக்கா சொல்லுத?” என்று இவளிடம் வந்து யோசனை கேட்டு இவள் சொன்னபடிதான் செய்வாள். அருக்காணி தன் பகையை மனதில் வைத்துக்கொண்டு எத்தனையோ கல்யாணங்களைத் தடுத்துத் திசை மாற்றிவிட்டிருக்கிறாள்.
அருக்காணிக்கு ஆகாதவ மகளை எப்படியோ பட்டணத்தில் வேலை செய்யும் விசுவத்திற்குப் பேசிவிட்டார்கள். இதைக் கேள்விப்பட்ட அருக்காணிக்கு நெஞ்சில் நெருப்பள்ளிப் போட்டதுபோல் இருந்தது. ‘என் தூசி விலை பெறமாட்டா. இவ மவ போயி பட்டணத்தில் வெயில் படாம நெலலுக்குள்ள சுகம் அடையவா? இவ மய இங்க காட்டுல கிடந்து வெய்யிலு, மழையின்னு சீரழிஞ்சாவில்ல எனக்கு சந்தோசமாயிருக்கும்’ என்று ஒன்றுக்கு ரெண்டாகச் சொல்லி அந்தக் கல்யாணத்தையே நிறுத்திவிட்டாள். பாவம் மாரிமுத்து. தான் பட்டணத்து மாப்பிள்ளைக்கு வாக்கப்படப் போகிறோம் என்று நினைத்துக் குத்துக்கால் தரையில் படாமல் குதித்துக் குதித்து நடந்தவாறு பட்டணத்தில் போயி இருக்கப்போறோம் என்று பவுசாகப் பேசிக்கொண்டு இருந்தாள். பட்டணத்து மாப்பிள்ளையான விசுவத்துக்கு வேறு இடத்தில பொண்ணு பாத்துட்டாகளாம் என்றதும் மாரிமுத்துவுக்குப் பொசுக்கென்று போய்விட்டது.
மாரிமுத்து சேத்திக்காரிகளெல்லாம், “என்ன மாரிமுத்து... பட்டணத்தில் போயி நித்தம் குளிச்சி முழுவி முத்தத்து வெயிலு முகத்தில் படாம வெதுவெதுன்னு நித்தமும் நெல்லுச்சோறாக்கிப் பருப்பு கடைஞ்சி நானும் என் புருசனும் சாப்பிட்டுப் பொன்னும் கண்ணுமா உள்ளங்கையும் பெறங்கையுமா இருக்கப்போறோமின்னு சொன்னே... இப்புப் பட்டணத்து மாப்பிள்ள உன்னைக் கட்டலன்னு சொல்லிட்டானாமில்ல?” என்று கேட்கும்போதெல்லாம் கூசி ஒடுங்கிப்போய் முகம் வெளிறிக் கிடந்தாள். மாரிமுத்து இப்படி இருப்பதைப் பார்த்த அவள் சேத்திக்காரி சரசு, ஏழெட்டு நாளாக அருக்காணி வீட்டுக்கு ஊசாட்டம் பார்த்தாள். அப்போதுதான் தெரிந்தது, அருக்காணி மாரிமுத்துவை ஒதுக்கிவிட்டுத் தன் மகள்வழிப் பேத்தியான செல்வியை விசுவத்துக்குக் கொடுப்பதற்கான வேலையைச் செய்கிறாள் என்று. செல்வி, விசுவத்துக்குப் பன்னிரண்டு வருசத்திற்கு இளையவள். அருக்காணி இந்த வயசான காலத்திலும் மாரிமுத்துவிற்குப் பேசுன கல்யாணத்தைக் கெடுக்கிறாளே என்று நினைத்தாள் சரசு.
விஷயத்தைப் பார்வதியிடம் சொல்ல, பார்வதிக்கென்றால் அப்படி ஒரு கோபம். ‘இப்படிப் பல பேர் கல்யாணத்த கெடுத்திருக்காளே இவ பேத்தி கல்யாணத்தை நடத்தவே விடக் கூடாது’ என்று நினைத்த பார்வதி அன்று இரவே அருக்காணி வீட்டுக்குப் போனாள். அவளை வரவேற்ற அருக்காணி, “என்ன பார்வதி என்னைக்குமில்லாம இன்னைக்கு வீடு தேடி வந்திருக்க?” என்று கேட்டாள். தன் மடியிலிருந்த வெற்றிலையை எடுத்த பார்வதி, “இன்னைக்கு நம்ம ஊருக்கு ஒரு சோசியக்காரன் வந்தான். அவன் எப்படித்தேன் சோசியம் சொல்லுதான்னு பார்த்தேன்” என்றதும் அருக்காணிக்குப் பார்வதி மீது கோபமாக வந்தது. “இப்ப வந்து இப்படிச் சொல்லுதவ. அவன் பாக்கையிலேயே என்கிட்ட சொல்லியிருக்கலாமில்ல” என்றாள்.
“அட உனக்கும் சேத்துதேன் நானு பார்த்துட்டு வந்தேன்” என்று பார்வதி சொல்லவும், “அப்படியா? நீ எப்பவும் எனக்கு உத்தவதேன். என் பாட்டுக்குப் பேசிட்டேன். என்னப் பொறுத்துக்கோ. அதுக்குத்தேன் வெத்தலையோட வந்தியாக்கும்” என்று பார்வதியின் கையிலிருந்த வெத்தலையை வாங்கி, “நம்ம வீட்டுல ஒரு நல்ல காரியம் நடக்கணுமின்னா நம்ம ராமேஸ்வரம் போயி அந்த ராமர கும்பிட்டு வரணுமாம். அதேன் நாளை எல்லாரும் ராமேஸ்வரம் போறோம். நீ வாரயான்னு கேட்டுப்போவத்தேன் வந்தேன்” என்றாள். “நீ இம்புட்டு சொன்ன மட்டுக்கு நானு வராம இருப்பனா?” என்ற அருக்காணி மறுநாளே ஊர்க்காரர்களுடன் ராமேஸ்வரம் புறப்பட்டாள். எல்லோருமாய் ராமேஸ்வரம் போய் சாமி கும்பிட்டு அருக்காணியை மட்டும் கோயிலில் விட்டுவிட்டு வந்தார்கள். வந்தவர்கள் விசுவத்துக்கும் மாரிமுத்துவுக்கும் நல்லபடியாய் கல்யாணத்தை முடித்துவைத்தார்கள். பத்து நாள் கழித்து அருக்காணியைக் கூப்பிடப் போனார்கள். அருக்காணி பிச்சைக்காரர்களின் நடுவில் உட்கார்ந்திருந்தாள்.
- கட்டுரையாளர், எழுத்தாளர்.