

பெண்களின் அறிவுத்திறனை, சிந்தனை சக்தியை எந்தெந்த வகையில் எல்லாம் முடக்கினால் இங்கு அவர்கள் தங்களைத் தாங்களே ஒடுக்கிக்கொண்டு மிகவும் மேலோட்டமான விஷயங்களில் மட்டுமே தங்கள் கவனத்தைத் திருப்பிக்கொண்டு திருப்திபட்டுக்கொள்வார்களோ அவற்றை எல்லாம் செய்தாகிவிட்டது. ஒரு பெண்ணின் சிந்தனைக்கு நம் சமூகத்தில் எத்தனை விதமான மறைமுகத் தடைகள்!
1. பெண்ணுக்கு நீண்ட முடிதான் அழகு. அவள் வாழ்நாளில் எவ்வளவு நேரத்தைத் தன் முடியைப் பராமரிப்பதில் செலவிடுகிறாள்!
2. ஆடை: புடவை, தாவணி, துப்பட்டா - இந்த ஆடைகளில் ஏதாவது செளகரியம் உண்டா? எப்போதும் இவை விலகாமல் பார்த்துக்கொள்வதிலே கவனம் செலுத்தியாக வேண்டும். இல்லையெனில் அவள் ஆண்களைத் தூண்டுகிறாள் என்று சொல்லிவிடுவார்கள். அப்படித் தூண்டப்பட்டால் தவறு அந்த ஆண் மேல் இல்லை, கவனக்குறைவாக இருக்கும் பெண்மேல்தான்.
3. தனக்கான ஆணைத் தேர்வுசெய்வது பெண்ணின் கையில் இருந்த காலத்தில் எப்படி ஓர் ஆண் உடலாலும் அறிவாலும் வல்லவனாக இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தானோ, அதேபோல் தனக்கான பெண்ணைத் தேர்வுசெய்வது ஆணின் கையில் வந்துவிட்ட காரணத்தால், ஆணைக் கவர்வதற்கான ஆயுதம் ஒன்று தேவைப்பட்டது. அறிவை ஒதுக்கிவிட்ட பிறகு, அவளிடம் இருக்கும் ஒரே ஆயுதம் அவளது உருவம், வெளித்தோற்றம் என்றானது. அதனால், அவள் தன்னை அழகுபடுத்திக்கொள்வதற்காக அலங்காரங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினாள். பெண்களுக்குப் புறத்தோற்றம் முக்கியமாகிப் போனதால், எப்போதும் தான் மற்றவர் கண்களுக்கு அழகாகத் தெரிய வேண்டிய அழுத்தம் கூடுகிறது. அதோடு, மற்ற பெண்களுடன் தன் அழகை ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்வதும், தன்னைவிட இன்னொரு பெண் அழகாகத் தெரியும்பட்சத்தில், தாழ்வு மனப்பான்மையும், தான் அழகாக இருக்கிறோம் என்று தோன்றும் பட்சத்தில் அதையே பெரிய சாதனையாகவும் நினைக்கத் தலைப்பட்டாள். தன்னை மேலும் மேலும் அழகுபடுத்திக்கொள்வதிலே அவளது கவனம் அதிகமானது.
இதில் பெற்றோரின் பங்கும் உண்டு. பெண் குழந்தையை ஆண் குழந்தைபோல் சாதாரணமாக உடை உடுத்தி வளர்க்காமல், அவர்களை அலங்காரப் பொம்மைகளாக வளர்ப்பதில் பல பெற்றோருக்குப் பெருமை. அப்படி வளர்க்கப்படும் பலர் உடையிலும் அலங்காரத்திலுமே நாட்டம் கொண்டு வளர்கிறார்கள். தன் மீதான நம்பிக்கையை வளர்க்காமல் அலங்காரத்தின் மீதான நம்பிக்கைதான் வளர்க்கப்படுகிறது.
4. ஒரு பெண்ணிற்கு இயற்கையாகக் கை, கால்களில் முடி இருந்தால் என்ன? அதை மழித்துப் பளபளவென ஆக்கிக்கொள்ள வேண்டிய அவசியமென்ன? அதேபோல் ஆணுக்கு உடலில் முடி இருப்பது ஆண்மை என இலக்கணம் வகுத்தது யார்? முடி இல்லாத ஆண்கள் மனிதர்கள் இல்லையா? இப்படிப் பொதுவாக எல்லாவற்றுக்கும் இலக்கணம் வகுத்து அதில் இயற்கையாக விழாதவர்கள் ஒருவிதமான தாழ்வுமனப்பான்மையிலும், தான் போதாமையோடு இருப்பதாகவும் நினைத்தே தன்னம்பிக்கையைத் தொலைத்து வாழ்கிறார்கள்.
5. இயற்கை பெண்ணுக்கு அளித்திருக்கும் பிள்ளை பெறும் பொறுப்பால் பதின்ம வயதில் அவள் உடல் மாற்றங்கள் அடைகிறது. அதனால் ஏற்படும் மாதவிடாயை இயல்பாகப் பார்க்காமல், ஏதோ அது அவளின் சாபமாக, அவள் செய்த பாவத்தின் பலன்போல் அருவருப்பாகப் பார்ப்பதும் நடக்கிறது. மாதவிடாய் காலத்தில் அவளின் உதிரப்போக்கு அவமானச் சின்னமாக ஆகிவிட்டது. கடைக்குச் சென்று நாப்கின் வாங்கினால் அதை ரகசியமாகக் கடைக்காரரிடம் கேட்க வேண்டும். அவரும் அதை ரகசியமாக ஒரு கறுப்புப் பையிலோ, செய்தித்தாளிலோ சுற்றித் தருவார். அதை வாங்குவதற்குள் யாரையோ கொலை செய்ததுபோல் அவள் கூனிக் குறுக வேண்டும்.
6. அவள் மார்பகம் பருவத்துக்கு ஏற்றாற்போல் வளரும்போது அதுவும் அவளுக்கொரு அவமானச் சின்னமாகச் சொல்லப்படுகிறது. அது வளர்வதற்கும் அவள் கூனிக் குறுக வேண்டும், வளராவிட்டாலும் அதை அவமானமாகக் கருதி அதற்கும் கூனிக்குறுக வேண்டும். பெண் என்றால் மார்பகம் என்பது இருக்கும்தான். அது அவள் உடல்வளர்ச்சிக்கு ஏற்றாற்போல்தான் இருக்கும் என்கிற இயல்பைச் சாதாரணமாக கடக்க இயலாத ஆறறிவு கொண்ட மனிதர்கள்தாம் நாம்.
7. திருமணம் முடிந்த பெண்ணாக இருந் தால் மேலே குறிப்பிட்ட விஷயங்கள் தாண்டி, அவள் கவனம் முழுவதும் அவளுடைய கணவனின் தேவை, கணவனின் பெற்றோர், உடன் பிறந்தோர் தேவை, பிள்ளைகள் பிறந்துவிட்டால் அவர்களின் தேவை என்றே சுழல வேண்டும்.
8. பெண்ணை மேலே தூக்கி வைப்பதுபோல் மறைமுகமாக அவளது உணர்வுகள், கனவுகள், ஆசைகள் அத்தனையையும் முடக்கப்பட்டுவிடும். அவள் பொறுமையின் சின்னம், தியாகச் சொரூபி, இதையெல்லாம் தாண்டி கற்புக்கரசி என்று பெயர் வாங்க வேண்டும். அப்போதுதான் அவள் திருமணம் செய்த வீடும் அவளை மதிக்கும், அவள் பிறந்த வீடும் அவளை மதிக்கும்.
இவையும் இன்னும் பலவும் அவளை நெருக்குகையில் அவள் திறமையானவளாகவே இருந்தாலும், படிப்பில் நல்ல தேர்ச்சி பெற்றவளாக இருந்தாலும், எதாவது கலையில் தேர்ச்சி பெற்றவளாக இருந்தாலும், வேலைக்குச் சென்று பணம் ஈட்டுபவளாக இருந்தாலும் அவளால் அவற்றில் முன்னேறுவது என்பது அவ்வளவு சுலபத்தில் நடந்துவிடுவதில்லை.
ஆணுக்கு அடிபணிந்து நடப்பதுதான் பெண்ணின் ஒரே குறிக்கோளாக இருக்க வேண்டும்; மற்றதெல்லாம் அவன் பார்த்துக்கொள்வான். இவ்வளவில்தான் குறுக்கப்பட்டிருக்கிறது அவள் வாழ்வு. இதை ஒவ்வொரு தாயும் தன் மகளுக்குக் கடத்துவதில்தான் வெற்றி பெற்றிருக்கிறது நம் ஆணாதிக்கச் சமூகம். பெண் சமநிலை அடைய கடக்க வேண்டிய தொலைவு மிக நீண்டது. அதனாலேயே இங்கு ஆணுக்குச் சுதந்திரம் இருக்கிறது என்று சொல்லிவிட முடியுமா? அதையும் பேசுவோம்.
(விவாதிப்போம், மாற்றுவோம்)
கட்டுரையாளர், எழுத்தாளர்.