ஜூன் 27, ராமாமிர்தம் அம்மையார் நினைவு நாள்: முற்போக்கு அரசியல் முன்னோடி

ஜூன் 27, ராமாமிர்தம் அம்மையார் நினைவு நாள்: முற்போக்கு அரசியல் முன்னோடி
Updated on
2 min read

இன்று மயிலாடுதுறை என்று அழைக்கப்பெறும் அன்றைய தஞ்சை மாவட்டம், மாயவரத்தில் 1925ஆம் ஆண்டு ஒரு மாநாடு நடைபெற்றது. தேவதாசி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்கிற நோக்கத்துடன் நடத்தப்பட்ட அந்த மாநாட்டை நடத்தியவர் காங்கிரஸ் இயக்கத்தில் தொண்டாற்றிய மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்.

மாயவரத்தில் நடைபெற்ற அம்மாநாடு தேவதாசி ஒழிப்பு வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல். அப்போது காங்கிரஸ் இயக்கத்தில் செயல்பட்ட தந்தை பெரியாரும் திரு.வி.கல்யாணசுந்தரனாரும் இம்மாநாட்டில் பங்கேற்று, தேவதாசி முறை ஒழிக்கப்படுவதற்குத் தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். பெரியார் தன்னுடைய ‘குடிஅரசு’ இதழிலும் திரு.வி.க. தன்னுடைய ‘நவசக்தி’ இதழிலும் தேவதாசி முறை ஒழிப்புக்கான பிரச்சாரத்தைத் தொடர்ந்து மேற்கொண்டனர். பின்னாளில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கோரி காங்கிரசிலிருந்து வெளியேறிய பெரியாருடன் ராமாமிர்தமும் வெளியேறினார். பெரியாருடன் இணைந்து சுயமரியாதை இயக்கத்தில் பணியாற்றினார்.

தேவதாசி முறை ஒழிப்பிற்கான நெடும் போராட்டத்தில் கடுமையான நெருக்கடிகளைச் சந்தித்தவர் ராமாமிர்தம். ஒருமுறை மேடையில் பேசிக்கொண்டிருந்தபோது அவரது முடி வெட்டப்பட்டது. மற்றொரு முறை அவருடைய உணவில் நஞ்சு கலக்கப்பட்டு அவரைக் கொல்ல முயற்சி நடைபெற்றது. இதற்கெல்லாம் அவர் அஞ்சுபவர் அல்லர் என்பதை அவர் வார்த்தைகளிலிருந்தே அறியலாம். “என்னைச் சாதிக் கட்டுப்பாடு செய்வதாயும், இந்த விஷயத்தைப் பற்றி நான் உபந்நியாசம் செய்தால் என்னை அடிப்பதாயும் சிலர் சொன்னார்களாம். என்னை அடித்தால் நான் பயப்படப் போவதில்லை. அவர்களின் வார்த்தைகளைக் கேட்டு உங்கள் புதல்விகளைப் பொதுமகள் வாழ்க்கையில் விட்டுக் கொடுக்காதிருக்கும்படி உங்களை வேண்டுகிறேன்” என்று ‘தேவதாசிகளுக்கு ஓர் எச்சரிக்கை’ என்கிற தமது கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

பெரியார் இரண்டாவது சுயமரியாதை மாநாட்டை 1930ஆம் ஆண்டு ஈரோட்டில் நடத்தினார். அந்த மாநாட்டில் ராமாமிர்தமும் கலந்துகொண்டார். இம்மாநாட்டில்தான் கடவுளின் பெயரால் தேவதாசிகளாக, சிறுமி களை ஈடுபடுத்தும் முறை ஒழிக்கப்படவேண்டும் என்றும், இம்முறையிலிருந்து மீண்ட பெண்களை இளைஞர்கள் திருமணம் செய்துகொள்ள முன்வரவேண்டும் என்றும், டாக்டர் முத்துலட்சுமியின் தேவதாசி ஒழிப்பு மசோதா விரைவில் சட்டமாக்கப் படவேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக இருந்த இராவ்சாகிப் அய்.குமாரசாமி, தமிழர் பெரும்படையின் தலைமைப் பொறுப்பேற்றார். பட்டுக்கோட்டை அழகிரிசாமி தளபதியாக இருந்து படையை நடத்திவந்தார். 300 மைல் தொலைவு நடந்து வந்த இத்தமிழர் பெரும்படையின் தொண்டர்களில் 60 வயது நிரம்பிய ராமாமிர்தமும் ஒருவர். சென்னையில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு, 14.11.1938 அன்று கைதுசெய்யப்பட்டார். இவருடன் கைது செய்யப்பட்டவர்கள் டாக்டர் தருமாம்பாள், தருமாம்பாளின் மருமகள் சீதம்மாள், மலர்முகத் தம்மையார், பட்டம்மாள் ஆகியோர். கைது செய்யப்பட்ட ஐவரும் வேலூர் சிறைக்கு அனுப்பப்பட்டனர். இவ்வாறு தமிழ்மொழிப் பாதுகாப்புக் களத்திலும் இவருடைய பங்கு குறிப்பிடத்தக்கது.

தேவதாசி ஒழிப்புக் களத்தில் தொடர்ந்து மேடையில் பேசுவதோடு, எழுத்தின் வாயி லாகவும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ‘தாசிகள் மோசவலை அல்லது மதிபெற்ற மைனர்’ என்னும் நாவல் இவரது எழுத்துப் பணிக்குச் சான்று. ‘தமயந்தி’ என்னும் தொடர்கதையை அண்ணாவின் ‘திராவிட நாடு’ இதழில் எழுதினார். காங்கிரஸ், நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிட முன்னேற்றக் கழகம் என்று தொடர்ந்து பொது வாழ்க்கையில் ஈடுபட்ட ராமாமிர்தம், முற்போக்கு அரசியல் முன்னோடிகளுள் ஒருவர்.

- வெற்றிச்செல்வன்
vetrichelvan.a.kc@gmail.com)

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in