

கடந்த மாதம் அக்கா பிள்ளைகளோடு வேளாங்கண்ணி திருத்தலம் போகும் சூழல் அமைந்தது. அங்கிருந்து இரவு 11 மணிக்குக் கிளம்பி நாகப்பட்டினம் வந்தபோது திருச்சி பஸ் விடியற்காலை இரண்டு மணிக்கு என்கிற தகவல் கிடைத்தது. பிள்ளைகளும் நாங்களும் விடியற்காலை இரண்டு மணி வரைக்கும் நாகப்பட்டினம் பேருந்து நிலையத்தில் காத்திருந்தோம். சும்மா ஒரு நேரப்போக்குக்காக விடியற்காலை ஒரு மணி வாக்கில் அலைபேசியைத் திறந்தபோது முகநூல் பக்கத்தில் ஒரு நபரிடமிருந்து சில ஆபாசப் படங்கள் வந்து விழுந்துகொண்டே இருந்தன. அனுப்பியவர் யார், என்ன என்பதெல்லாம் தெரியாது.
பொதுவாகவே முகநூல் தளத்தில் ஹாய், ஹலோ, சாப்பிட்டாச்சா, நலமா என்கிற விசாரிப்புகளுக்குப் பதில் கொடுப்பதில்லை. முகநூல் தளத்தில் இப்போது சில மாதங்களாக மட்டுமே சில பதிவுகளைப் போட்டுக் கொண்டிருக்கிறேன். அதில் ஹாய், ஹேய் என்றவர்களைத் தெரியாமல் நண்பர்களாகத் தேர்வுசெய்ததும் விதிதான் போலும். இவர்களையெல்லாம் முடக்கிக் கடக்க முடியும் என்கிற தெளிவோடு இருப்பதால் இதிலொன்றும் பிரச்சினையில்லை.
வளர்ச்சிபெறாத ஆண் மனம்
தனிப்பட்ட மெசேஜ் பகுதியிலிருந்து இப்படங்கள் வந்தபோது அப்படியெல்லாம் பெரிய அதிர்ச்சி இல்லை. அந்தக் காலமெல்லாம் போய்விட்டது. சிறுவயதில் ஆறு, குளங்களில் குளிக்கப் போகும்போது பாலியல் தூண்டுதலுக்கென்று படிக்கட்டுகளில் எழுதப்பட்டிருக்கும் அசிங்கங்களைப் படித்தபோது நானும் என் தோழிகளும் நிறைய அழுதிருக்கிறோம். ஆண்கள் தங்கள் பகுதிகளில் குளிக்க இறங்குகையில் பெண்கள் பார்க்க வேண்டுமே என்று கட்டியிருக்கும் துண்டுகளை ஒளிவு மறைவின்றி நீக்குகையில் எல்லாம் அதிர்ந்துபோனதுண்டு. சானாலாற்றுக்குப் போகும் முடுக்கு வழியில் எடைமேடையில் வரும் லாரி டிரைவர்கள் அடர் பகுதிகளில் சிறுநீர் கழிக்க நிற்பதுபோல் நின்ற பாவனைகளில் பயந்து ஓடியதுண்டு நாங்கள்.
அவ்வளவு ஏன், ஓடும் பேருந்தில் நெருக்கத்தில் அவதிப்பட்டு நிற்கையில் சீட்டில் இருப்பவன் தூங்குவதுபோல் பாவிப்பதைக் கண்டு ஓங்கித் துப்பியதுண்டு. இப்படியான காட்சிகளை ஆரம்பக் காலங்களில் பார்த்து அதிர்ந்து, நடுங்கி, சே என ஆகி இப்போதெல்லாம் அதிர்ச்சி அடுக்குகள் சரிந்தேவிட்டன. ஒருவித நையாண்டியும் கேலியுமே இப்படிப்பட்ட ஆண்கள் மீது வருகிறது. உண்மையாகவே இவர்களெல்லாம் இன்னுமே வளர்ச்சி பெற்றிருக்கவில்லை என்கிற பரிதாபமே தோன்றுகிறது.
அன்புதான் ஈர்க்கும்
பெண்களின் கணுக்காலை பார்த்தாலே உச்சந்தலை வரைக்கும் கிறுகிறுக்கும் என்கிற அறிவற்றவர்களின் சிந்தனையில்தான், நம் உடலைப் பார்த்தால் பெண் கிறங்கிவிடுவாள் என்று அவர்களாகவே ஒரு முடிவெடுத்து இப்படியான ஆபாசப் படங்களை வெளிப்படுத்துகிறார்கள்.
மனித உடல்கள் மிகவும் மலிந்துபோன காலமிது. ஆண் உடலோ, பெண் உடலோ அது சுருக்கமான ஒரு விஷயத்தில் இப்போதெல்லாம் இல்லை. அதன் மர்மங்கள் தாராளமாக அவிழ்ந்துபோய் கிடக்கின்றன. அலைபேசிவழி அவரவர் கைகளுக்குள் கிடக்கிறது நிர்வாண உலகம். இப்படிப்பட்ட காலத்தில் ஆபாசப் படங்களைப் பார்த்து அதிர்ச்சி வரவில்லை. ஏனெனில், இந்த ஒளிப்படங்களால் எந்தப் பாதிப்பும் எனக்கு இல்லவே இல்லை. ஆனால், அடுத்த கணம் வந்த கோபம் அளவற்றது. இதேபோல் ஒரு சிறுமிக்கு அனுப்பி வைத்திருந்தால், எந்த வெளி அனுபவமும் இல்லாத பெண்களுக்கு அனுப்பியிருந்தால் அவர்களின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்க முடியும்?
என் நண்பரிடம் இதைப் பற்றி சொன்ன போது, “இவனையெல்லாம் படத்தோடு முகநூலில் எழுதணும். அப்பதான் இவனெல்லாம் வேற பெண்களுக்கு இதுபோல் அனுப்ப மாட்டான்” என்றார். நண்பனின் பேச்சும் நியாயம்தான். ஆனால், இப்படிப்பட்டவர்களுக்கெல்லாம் நான் சொல்ல நினைப்பது:
பெண்கள் நீங்கள் நினைத்து வைத்திருக்கும் வடிவம் அல்ல; ஆணின் கட்டுமஸ்தான உடலோ, அவனின் பாலியல் உறுப்போ அவளுக்கு முக்கியமே இல்லை. பெண்ணுக்கான ஆசையும் மோகமும் அவள் அன்பு செய்யும் ஆணிடமிருந்து மட்டுமே பெற நினைப்பாள். தான் அன்பு செய்யும் ஆணின் முகத்திலிருந்து, அவனின் கண்களிலிருந்து, அவனின் பாதுகாப்பிலிருந்து மட்டுமே பெண்ணுக்கான ஆசை வருகிறது என்பதை இப்படிப்பட்ட ஆண்கள் புரிந்துகொள்ள வேண்டும். அவள் நம்பும் ஆணின் உடலில் அவளுக்கான ஆன்மாவை காணும்போதுதான் அவள் ஆணுடலைக் கொண்டாடுவாள். இல்லாமல், போகிற வருகிற வாக்கில் வெளிப்படுத்தும் பாலியல் உறுப்பை வெறுமனே குப்பைத்தொட்டியில் கிடக்கும் அருவெறுப்பு மிக்க ஒரு கழிவுப் பொருளாகவே பெண் கடந்து போவாள் என்பது மட்டுமே உண்மை. இதை இப்படிப்பட்ட ஆண்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
- மலர்வதி
கட்டுரையாளர், நாவலாசிரியர்.
malarvathi26@gmail.com