கிராமத்து அத்தியாயம் - 21: கல்யாணமாம் கல்யாணம்

கிராமத்து அத்தியாயம் - 21: கல்யாணமாம் கல்யாணம்
Updated on
2 min read

ராமலிங்கத்துக்கு அன்றுதான் கல்யாணம். மாமன் மகள் மரிக்கொழுந்து, “நான் மச்சானுக்குத்தான் வாக்கப்படுவேன்” என்று தன் சேத்திக்காரிகளிடம் சொல்லியதோடு அந்தப் பேச்சு வீடுவரை வந்துவிட்டது.

மரிக்கொழுந்தின் அய்யாவான கந்தையாவுக்குக் கோபமான கோபம். செவ்வந்திக்கும் ராமலிங்கத்துக்கும்தான் கல்யாணம். இந்தக் கல்யாணத்தை நாலு பெரியவர்களோடு போய் உறுதி செய்துவிட்டு வந்தவர். அப்படி வந்தவரின் மகளே இப்படிப் பேசிக்கொண்டிருந்தால் இவருக்கு அல்லவா கேவலம். பார்க்கிறவர்களும் கேக்கிறவர்களும் இவரைத்தானே அசிங்கமாகப் பேசுவார்கள். கந்தையாவுக்குத் தெருவழி போவக்கூட ரோசமாக இருந்தது.

மகளைக் கூப்பிட்டுச் சத்தம் போட்டார். “இந்தா மரிக்கொழுந்து, உன் மச்சானுக்கு செவ்வந்திதேன் பொண்ணுன்னு பரிசம் போட்டுட்டு வந்தாச்சு. இனியும் நீ ஊருக்குள்ள நானுதேன் என் மச்சானுக்கு வாக்கப்படப் போறேன்று சொல்லிக்கிட்டு இருக்காத. அது எனக்கும் கேவலம், உனக்கும் கேவலம். நாள உன்ன எவனும் பொண்ணுன்னு கேட்டு வர மாட்டான்” என்றதும் மரிக்கொழுந்துக்கு அழுகையும் கண்ணீருமாக வந்தது. “என்னை எவனும் கட்ட வர வேண்டாம். நானு சின்ன புள்ளயா இருக்கையிலேயே உன் மாமன் மவனுக்குத்தேன் உன்னைக் கொடுக்கப் போறோமின்னு சொன்னீக. எதுக்காக அவருகூட என்னைச் சேர்ந்து விளையாட வச்சீக? அப்பவெல்லாம் அவரு நெனவாத்தான இருந்தேன். அவரு ஆளை ஒருநா பார்க்கலாம், அவரு அழக ஒருநா பார்க்கலாம். இருந்து ஒருநா பார்க்கலாம், விருந்து ஒருநா வைக்கலாம். மச்சானுக்குத்தேன் நான் வாக்கப்படுவேன். இல்லாட்டி மச்சானை நினச்சிக்கிட்டே வாழுவேனே தவுத்து வேற எவனுக்கும் வாக்கப்பட மாட்டேன்” என்றாள்.

மகள் சொன்னதைக் கேட்டு கந்தையா நொந்துபோனார். பொண்டாட்டி தேவியிடம் சொல்லி வருத்தப்பட்டார். அவளோ, “இதையெல்லாம் நீரு பெருசா எடுத்துக்காதீரும். இந்த வயசுக்கு ஆம்பள புள்ளைன்னாலும் சரி பொம்பளப் புள்ளைன்னாலும் சரி, இப்படி மனசுக்குள்ள ஒருத்தன வச்சிக்கிட்டு ஏங்கிக்கிட்டு கிடக்கது சகசம்தேன். நம்ம மருமவனுக்குக் கல்யாணம் முடிஞ்சா எல்லாம் சரியா போவும்” என்று தேத்திவிட்டாள்.

கல்யாண நாள் வந்துவிட்டது. எல்லாரும் விவசாயிகள் என்பதால் யாருக்கும் பகலில் ஒரு நல்லது பொல்லதுக்கு வர நேரமிருக்காது. அதனால், எந்த நல்ல காரியம் என்றாலும் இரவில்தான் வைப்பார்கள். அதோடு ஊர் ஆள்கள் மொத்தமும் கல்யாணத்துக்கு வந்துவிட வேண்டும். இரண்டு நாளைக்குக் கல்யாண வீட்டில்தான் சாப்பாடு. யார் வீட்டிலும் உலை வைக்கக் கூடாது. அப்படி ஒரு கட்டுப்பாடு இருந்தது. அதனால், வேலை செய்த பெண்கள் எல்லாம் குளத்திலும் கிணத்திலும் குளித்துவிட்டு வந்து ஊருக்குள் இருந்து பெரிய, பெரிய மொடாப்பானைகளைக் கொண்டுவந்தார்கள். ஆண்கள் பெரிய, பெரிய கற்களைத் தூக்கி அடுப்பாக்க, இவர்கள் மொடாப்பானையை அதில் வைத்து இரண்டு குடம் தண்ணீரை ஊற்றி உலை வைத்தார்கள்.

இங்கே சமையல் வேலை நடக்க அங்கே பெண்ணையும் மாப்பிள்ளையையும் குமரிகள் கூட்டமும் இளைஞர் கூட்டமும் சோடித்துக் கொண்டிருந்தது. கந்தைய்யா வீட்டில் மரிக்கொழுந்து, “எனக்குத்தான் கல்யாணம். வாங்க நம்ம போயி மருதாணி பிடுங்கிட்டு வந்து அரைச்சி எல்லாரும் வச்சிக்கிடுவோம்” என்று சொல்ல கிருஷ்ணம்மா, “கல்யாணத்துக்கு முதல் நாளுதேன் எல்லாரும் மருதாணி வைப்பாக. நீ என்னன்னா இப்ப மருதாணிய வைக்கணுமிங்கயே. மருதாணி சிவக்கங்குள்ளயும் கல்யாணம் நடந்திருமில்ல. பிறவு எப்படி கையில வச்ச மருதாணி சிவக்கும்?” என்றாள். “கொட்டப்பாக்க எடுத்து மருதாணிகூட வச்சி அரைச்சமின்னா ஒரு நிமிசத்தில சிவந்திரும். போங்க போயி யாராவது கொட்டப்பாக்க தேடி எடுத்துட்டு வாங்க. இல்லாட்டி பெருசுக முந்தியில முடிஞ்சி வச்சிருப்பாக. அவுகளுக்குத் தெரியாம அவுத்து எடுத்துட்டு வாங்க” என்றாள். இவளின் சேத்திக்காரிகள் எல்லோரும் சிதறி ஓடினார்கள்.

செவ்வந்தியை அழகாகச் சோடித்துக் கொண்டிருந்தார்கள். ஒருத்தி தன் அட்டியலைக் கழற்றிப் போட்டாள். இன்னொருத்தித் தன் காதிலிருந்த பாம்படத்தையும் முடிச்சையும் அவிழ்த்துக் கொடுத்தாள். “யாராவது தண்டட்டி இருந்தா கொண்டு வாங்க. வயசுப் பொண்ணை வீட்டுல வச்சிக்கிட்டு இப்படி மூளியாவா ஒரு மனுசன் வச்சிருப்பான். காதுக்கு, கழுத்துக்குன்னு ஒரு நகை செய்ய வேண்டாம்” என்று பேசிக்கொண்டிருக்க, கொட்டைப்பாக்கை எடுக்கப் போன மரிக்கொழுந்து சேத்திக்காரிகள் எல்லாம் இவளிடம் வந்து, “மணவறைக்குப் போக செவ்வந்தி ரெடியா இருக்கா” என்று சொன்னதுதான் தாமதம். “மச்சானுக்கு நாந்தேன் வாக்கப்படுவேன்” என்று அழுதுகொண்டு மணவறை நோக்கி ஓடினாள் மரிக்கொழுந்து. அவள் பாட்டி முத்தாயி வந்து, “தாயீ இன்னும் நீ சடங்கே ஆவலயே. பெறவு எப்படி மச்சானுக்கு வாக்கப்படுவே” என்று கேட்டுச் சிரித்தாள். அதற்கும் தன் சின்ன கண்களைச் சுருக்கியபடி ‘ஓ’ என்று அழுதாள் குட்டிப் பொண்ணு மரிக்கொழுந்து!

கட்டுரையாளர், எழுத்தாளர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in