தினமும் மனதைக் கவனி -21: பிரிவுத் துயரின் ஐந்து நிலைகள்

தினமும் மனதைக் கவனி -21: பிரிவுத் துயரின் ஐந்து நிலைகள்
Updated on
2 min read

மனதுக்கு நெருக்கமான ஓர் உறவை மரணத்தில் இழந்த அனுபவம் எல்லாக் குடும்பங்களிலும் உண்டு. குழந்தை முதல் முதியவர் வரை இதை அனுபவித்திருப்பார்கள். அவரவர்க்கு அவரவர் துக்கம் பெரிது என்றாலும், துக்கமெனும் நிகழ்வின் நடைமுறையை மனநல மருத்துவர் எலிஸபெத் குப்ளெர் ராஸ், ஐந்து நிலைகளாக வகைப்படுத்தியுள்ளார்.

முதலில் இளம் கைம்பெண்களின் இழப்பை மட்டும் பார்ப்போம். கணவனை இழந்த, 20 முதல் 40வயது வரையுள்ளோரை இளம் கைம்பெண் களாகக் கருதுகிறேன். இளமையில் கைம்மை கொடுமை. புதிதாக மலர்ந்த மலர் கிள்ளி எறியப்படும் கொடுமை.

கணவருடைய மரணம் விபத்து, நோய், தற்கொலை போன்ற எந்த உருவிலும் வந்திருக்கலாம். கணவன் இறந்த செய்தியைக் கேட்டதும் மனைவி அதிர்ச்சியால் உறைந்து போயிருப்பார். ‘இது நடக்கவில்லை’ என்று சொல்லிக்கொள்வார். கண்ணெதிரே கிடக்கும் உயிரற்ற உடலின் உறுப்புகள் அசைவதுபோல் தோன்றுகையில் மனம் பதைபதைக்கும். சுற்றியுள்ள உறவினர்கள், ‘யாருக்குத் தகவல் சொல்வது, செய்தித்தாளில் என்ன எழுதுவது, எப்போது சடலத்தை எடுப்பது, சடங்குகளை எப்படிச் செய்வது’ என்று சரமாரியாகக் கேள்விகளைக் கேட்க, ‘இனி நான் தனித்துத் தீர்மானங்கள் எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டேனா?’ என்று மனம் வலிக்கும். அவரை ‘பாடி’ என்று குறிப்பிடும்போது நெஞ்சு துடிக்க, அதை ஏற்க முடியாமல் தவிப்பார். ஆனால், மற்றவர் எல்லாரும் அவரை வழியனுப்புவதில் முனைந்து நிற்கிறார்களே. இழப்பின் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு முன் சடங்குகளில் ஊறிப்போன குடும்பங்கள், மனிதநேயத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, அந்தப் பெண்ணைச் சடங்குகளுக்கு உள்படுத்தலாம். மரத்துப் போயிருக்கும் மனம், எதிர்ப்பு தெரிவிக்கக்கூடப் பலமின்றிப் பணிந்துபோய்விடும். அரவணைத்த கணவரை இனி தொட்டு உணர முடியாது என்பதை உணரும்போது அழுகை பொங்கிப் பொங்கி வரும். உள்ளுக்குள் ஒரு கோபம், ‘எனக்கு ஏன் இந்த நிலை?’ என்று பிறாண்டிக்கொண்டே இருக்கும். கூடவே இனம் புரியாத ஒரு குற்ற உணர்வும் தாக்கும். ‘அவர் இறக்கவில்லை’ என்று அடம்பிடிக்கும் மனம், உண்மையை மறுத்து, எதிர்த்து, பலனின்றித் தளர்ந்து, இறந்தவரின் நினைவுகளில் அமிழ்ந்திருக்கச் செய்யும். துக்கம் கேட்க வருபவர்கள் எல்லாரும் அவரைப் பற்றிய கடந்த கால நிகழ்வுகளைப் பேசப் பேச ‘அவர் இல்லை’ எனும் உண்மை தாக்கும். சடங்குகளெல்லாம் முடிந்தபின், எல்லாரும் அவரவர் வீடுகளுக்குப் போய்விடுவார்கள். இந்தப் பெண்ணைத் தனிமை சுடும்.

இந்தக் கட்டத்திலிருந்து மீள்வது சிலரால் முடியாது. எப்போதும் அழுது கொண்டு, தீவிர மன அழுத்தத்துடன் உடைந்து போய், தற்கொலை முயற்சிவரை சிலர் போவார்கள். மந்தமாக, ஆர்வமில்லாமல், தனிமை விரும்பியாக ஒழுங்கற்ற நிலையில், (disorganised) குழப்பத்தில் இருப்பார்கள். இவர்களுக்கு அவசர மனநல உதவி தேவை.

வாழ்வைச் சீரமைத்துக்கொள்ள நிறைய வேலைகள் இருப்பதால், ஒரு சிலர் தங்களைத் தாங்களே உலுக்கிக் கொண்டு எழுவார்கள்; சிலருக்கு நெருக்கமான ஒருவர் கரம்பிடித்துத் தூக்கிவிட வேண்டும். மீண்டுவரும் காலகட்டம் அவரவர் மனோ பலத்தைப் பொறுத்து மாறுபடும்.

அசாதாரண சூழலில் சில நேரம் இறந்தவர் சடலமே கிடைக்காமல் போகும் சூழ்நிலைகளும் உண்டு. இறந்தவர் சடலத்தைப் பார்க்காவிட்டால் எப்படி நம்பிக்கை வரும்? அவரது இறப்புச் சான்றிதழைப் பார்க்கக்கூட மனைவி மறுப்பார். மெல்ல உண்மை மனதில் இறங்கும்போதுதான் வாய்விட்டு அழுவார். கோவிட் பெருந்தொற்றில் இறந்த கணவனின் அருகே சென்றுகூடப் பார்க்க முடியாமல் பரிதவித்த கொடிய நிலையை மறக்க முடியுமா? ஒரு பிரியமான செல்லப் பிராணியின் இழப்புகூடச் சிலருக்குத் தீராத துக்கம்தான்.

மனம் பக்குவம் அடையும்போது வாழ்வின் சுழற்சியில் இறப்பு இன்றி யமையாத ஓர் அங்கம் என்று புரியும். துக்கத்திலிருந்து மீள்வது, இருவரும் ஆசையாக உருவாக்கிய குழந்தைகளின் மனநிலை, குடும்பத்தின் எதிர்காலம் இவை பற்றியெல்லாம் அடுத்த வாரம் பேசலாமா?

அதிர்ச்சி, எதிர்ப்பு, ஒழுங்கற்ற நிலை, சீரமைப்பு, மீள்வது - இவை ஐந்து நிலைகள்.

(மனம் திறப்போம்)

கட்டுரையாளர், உளவியல் ஆற்றாளர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in