Last Updated : 01 Oct, 2017 12:18 PM

 

Published : 01 Oct 2017 12:18 PM
Last Updated : 01 Oct 2017 12:18 PM

பெண்ணும் ஆணும் ஒண்ணு 23: அடிமை உழைப்பிலிருந்து விடுதலை

“அ

லுப்பூட்டக் கூடிய இந்த வீட்டு வேலைகளிலிருந்து பெண்களை விடுவிக்காமல் பெண்களுக்கு விடுதலை இல்லை” என்றார் லெனின். பெண்களின் இந்த உழைப்பு, அவர்களால் பராமரித்து அனுப்பப்படும் ஆண்கள் பெறும் கூலிக்குள் உபரி உழைப்பாக உறைந்துள்ளது என்றார் கார்ல் மார்க்ஸ். ஒரு நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பிற்குள் வராமல் இந்த உழைப்பு குடும்பத்துக்குள் புதைந்துபோய் கிடக்கிறது. குடும்பத்துக்குள் உழைப்புப் பகிர்வுதான் இதற்கான தீர்வு என்று அந்தத் தலைவர்கள் சிந்தித்தார்கள். பொதுவுடைமை சமுதாயத்தில் அந்தப் பகிர்வு வரும் என்றும் ஏற்கெனவே பாட்டாளி வர்க்கக் குடும்பங்களில் அந்தப் பகிர்வு இருக்கிறது என்றும் அவர்கள் விடை கண்டார்கள். ஆனால், உழைப்புப் பகிர்வும் பொதுவுடைமைச் சமுதாயமும் இன்னும் கனவாகவே இருக்கின்றன.

குறையாத வேலைச் சுமை

‘வீட்டு வேலை பெண்ணின் வேலை’ என்னும் சிந்தனை மாறாமல் நம்மால் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியாது. எனவேதான் பெரியார், வீட்டுக்கொரு அடுப்படி என்பதை ஒழிக்க வேண்டும் என்கிற தீர்வை முன்வைத்தார். இன்று பெண் வேலைக்குச் செல்லத் தொடங்கிவிட்டாள். இந்த மாற்றம் நடந்த வேகத்தில் வீட்டுக்குள் அவளது பணி மற்றும் பொறுப்புகளின் பகிர்வு நடந்திருக்கிறதா? நகரங்களில் பெரும்பாலும் தனிக் குடித்தனமாக வாழக்கூடிய வீடுகளில் கணவன்மார் சில வீட்டு வேலைகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள். ஆனால், அவர்கள் மனைவியுடன் வீட்டு வேலைகளைப் பகிர்ந்துகொள்வதாக நினைக்காமல் பெண்களின் வேலையைத் தாங்கள் செய்வதாக நினைக்கிறார்கள். அதைத் தரக்குறைவாகவும் உணர்கிறார்கள். ‘மனைவிக்கு இவ்வளவு உதவி செய்தேன்’ என்றே குறிப்பிடுகிறார்கள். இதனால் உளவியல்ரீதியான சிக்கல்களும் அவற்றின் விளைவாகக் குடும்பச் சண்டைகளும் எழுகின்றன.

இந்த ‘உதவி’களும் அலுவலகத்திற்குக் குறிப்பிட்ட நேரத்தில் இருவரும் கிளம்ப வேண்டும், அதற்குள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்கிற நெருக்கடியான நிர்ப்பந்தத்தில்தான் நிகழ்கிறது. அல்லது பெண்ணுக்கு உடல்நலக் குறைவு ஏற்படும்போது நிகழ்கிறது. உண்மையில் இந்தப் பங்களிப்பை அவர்கள் தராவிட்டால் இருபாலரும் வேலைக்குச் செல்வது சாத்தியமில்லை என்கிற நிலையில் மட்டும்தான் இந்தப் பகிர்வு நடக்கிறது. எனவே இந்தப் பகிர்வில் பெண்ணுக்கு இரட்டைச் சுமையிலிருந்து பெரிய விடுதலை கிடைப்பதில்லை. காரணம், இந்தப் பகிர்வினால் அவளுக்குரிய ஓய்வு உறுதிப்படுத்தப்படுவதில்லை. அதேபோல் இந்த மாதிரி வேலைகள் பகிர்ந்துகொள்ளப்படுகிற அளவுக்குக்கூட, இந்த வேலைகள் சார்ந்த பொறுப்புகள் பகிர்ந்துகொள்ளப்படுவதில்லை. இந்தப் பகிர்வை சாத்தியப்படுத்தாமலேதான் மூன்றாவது பொறுப்பாக சமுதாயப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளச் சொல்லி நாம் பெண்களை அழைத்துக்கொண்டிருக் கிறோம்.

பெண் புதைகிறாள், ஆண் தொலைகிறான்

இந்தப் பகிர்வு ஏன் சாத்தியமாகவில்லை? கணவனும் மனைவியும் சமுதாயத்தில் இன்னும் சம மதிப்புள்ளவர்களாகக் கருதப்படவில்லை. முதலில் மனைவியைவிட கணவன் வயதில் மூத்தவன். அதுவே அதிகாரத்துக்கான முதல் தகுதியைத் தந்துவிடுகிறது. பெரும்பாலும் கணவன் அதிகமாகப் படித்தவன். மனைவியைவிட உயர்ந்த பதவியில் இருப்பவன். இவையெல்லாம் கணவன் என்கிற இயற்கையான அதிகாரத்திற்குக் கூடுதல் வலு சேர்ப்பவை. இதற்கெல்லாம் மேலாக வீடு என்பது கணவன் வீடாகவே கருதப்படுகிறது. பெண் இடம்பெயர்ந்து ‘வந்தவள்’. அவள் பெயரே இறுதிவரை ‘வந்தவள்’தான். இந்த அமைப்பில் பெண் எப்படி நேரடியாக சம மதிப்புள்ளவளாக மாற முடியும்?

ஆண்கள் நிலையிலிருந்து இந்த பிரச்சினையைப் பார்ப்போம்.‘அலுவலக வேலை மட்டுமல்ல வீட்டுப் பொறுப்பையும் வெளியில் அலைகிற வேலைகளையும் நாங்கள்தானே பார்க்கிறோம்? நாங்களும் ஓய்வாக இல்லை’ என்கிறார்கள் அவர்கள். யாருக்கு வேலைப்பளு கூடுதல் என்பது வீட்டுக்கு வீடு மாறுபடக்கூடும். ஆனால், ஒருவகையில் இருவரும் நெருக்கடிக்குள்தான் இருக்கிறார்கள் என்பதை உணர வேண்டும். அனைவரும் இந்தப் பிரச்சினையைச் சந்திக்கிறார்கள். ஆனால், இதுதான் வாழ்க்கை என்று ஏற்றுக்கொள்கிறார்கள். விளைவு, இந்த சராசரி வாழ்க்கைக்குள் பெண்களைப் புதைத்துவிட்டு அதைக் காப்பதற்காகவே ஆண்களும் தொலைந்துபோகிறார்கள். பெண்ணோ வெளியுலக வாழ்க்கையே இல்லாமல் ஒடுக்கப்பட்டுவிடுகிறாள்.

வீட்டுக்கொரு அடுப்படி தேவையா?

மலேசியா போன்ற நாடுகளில் தெருவுக்கு இரண்டு உணவு விடுதிகள் இருக்கின்றன. பெரும்பாலும் வீடுகளில் சமையல் இல்லை. எல்லோரும் உணவு விடுதியில்தான் சாப்பிடுகிறார்கள். நமக்கு இதில் என்னென்ன பிரச்சினைகள் இருக்கின்றன? வீட்டுக்கொரு அடுப்படி இன்னும் ஏன் வேண்டும்? எரிபொருள் பற்றாக்குறை; கதிராமங்கலம் போன்ற பசுமையான விவசாயப் பகுதிகளைக்கூட காவுவாங்கத் துடிக்கும் எரிபொருள் சந்தை; எதற்கு இத்தனை கேஸ் அடுப்புகள்? தேவைதானா மக்களே? அடக்க விலைக்கும் குறைவான விலையில் பொருட்களை விற்கும் அம்மா உணவகங்களுக்குப் பதிலாக நியாயமான விலையில் உணவுப் பொருட்கள் கிடைக்கும் உணவகங்கள் இங்கு திறக்கப்பட்டால் வீட்டில் சமைப்பதைவிட அது கண்டிப்பாக லாபகரமானதாக இருக்கும். குடும்பப் பொருளாதாரத்தோடு நாட்டின் பொருளாதாரமும் உயரும். அனைத்துக்கும் மேலாகப் பெண்ணுக்கு வீட்டு வேலைகளிலிருந்து மாபெரும் விடுதலை கிடைக்கும். அப்போதுதான் அவர்களின் பொதுத் திறமைகளுக்கு வாய்ப்பு கிடைக்கும். ஒரு சமுதாயத்தில் ஆசிரியர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள் எத்தனை தேவைப்படுகிறார்களோ அந்த அளவு சமையல்காரர்கள் இருந்தால் போதாதா? எதற்காக 50 சதவீத மக்கள் சமையல்காரர்களாக இங்கு இருக்க வேண்டும்?

இன்றைய உணவு விடுதிகளின் தரம், விலை ஆகியவற்றை வைத்து இது சாத்தியமற்ற யோசனை என்று பலர் நினைக்கலாம். ஆனால் நாம் குறிப்பிடுவது இந்தக் கூட்டுச் சமையல்கூடங்கள் புதிய சமுதாய அமைப்புகளாக உருவாக வேண்டும் என்பதைத்தான். மேலும் அனைத்து மக்களும் பங்குபெறும் அமைப்பாக அது மாறும்போது அதன் குறைகள் களையப்பட்டு மக்கள் தேவைகளை நிறைவேற்றும்விதமாக அவை உருவாகும். உணவுத் தரத்தைச் சோதிக்கும் தரநிர்ணய அமைப்புகளை உருவாக்கிநல்ல தரமான உணவு அனைத்து மக்களுக்கும் கிடைக்கச் செய்யலாம். இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக அடுப்படிக்குள் சிறைபட்டுக் கிடக்கும் இந்த உபரி உழைப்பின் மதிப்பை மீட்டெடுத்து நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்திக்குள் கொண்டுவரலாம். முதலில் இந்தச் சமுதாய அமைப்புகள் தேவை என்கிற புரிதல் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் அவற்றைச் சாத்தியப்படுத்த முடியும்.

(இன்னும் தெளிவோம்)

கட்டுரையாளர்,பெண்ணியச் செயல்பாட்டாளர்

தொடர்புக்கு:oviacs2004@yahoo.co.uk

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x