

ச
ட்டத்துக்குப் புறம்பாகச் சிலர் பெற்றோர் ஆகியிருக்கலாம். அதற்காக அவர்களின் குழந்தைகளைச் சட்டத்துக்குப் புறம்பாகப் பிறந்த குழந்தைகள் என்று கருத முடியாது. இது இயற்கையின் சட்டம். மனிதன் இயற்றிய சட்டமோ குழந்தைகளைச் சட்டப்படியான/முறைப்படியான குழந்தை மற்றும் முறைகேடாகப் பிறந்த குழந்தை என இரு வகைகளாகப் பிரித்து வைத்திருக்கிறது. முதல் வகை, முறைப்படியான திருமணத்தின் மூலம் பிறக்கும் குழந்தைகளையும் இரண்டாவது வகை, திருமணம் அல்லாத அல்லது திருமணம் தாண்டிய உறவின் மூலம் பிறந்த குழந்தைகளையும் குறிக்கும்.
முறையான திருமண உறவின் மூலம் பிறந்த குழந்தைகளுக்குப் பாதுகாவலர் தந்தை எனவும், முறையற்ற உறவின் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்குப் பாதுகாவலர் தாய் எனவும் சட்டம் வரையறை செய்கிறது.
குழந்தையைப் பொறுத்தவரை தாய் என்பது நிதர்சனம், தந்தை என்பது நம்பிக்கை. ஏனென்றால், தாயின் கருவறையிலிருந்து வெளிவரும் குழந்தைக்குத் தாய் யார் என்பது உணர்வால் விளங்கும் ஒரு உன்னதம். ஆனால், தந்தையின் அறிமுகப்படலமே தாயின் மூலமாகத்தான் நடக்கும். தந்தை யார் என்பதுகூடத் தெரியாத நிலைதான் குழந்தைமை. கள்ளங்கபடமற்ற வெள்ளை மனம் கொண்ட அந்தக் குழந்தைகளை முறைகேடாகப் பிறந்த குழந்தை என்று முத்திரை குத்துவது மூடத்தனத்திலும் மிகமோசமானது.
இப்படிச் சட்டவிரோதக் குழந்தை என்று குறிப்பிடப்படும் குழந்தைகளுக்கு யார் பாதுகாவலர்? தாய்தான் பாதுகாவலர் என்று சட்டம் சொல்லும்போது, அப்பா எப்படி அந்தச் சட்டவிரோத குழந்தைக்குப் பொறுப்பேற்றுக்கொள்வார்? சட்டவிரோதமான குழந்தை என்று இயற்கை நீதிக்கு விரோதமாகப் பெயர் வைத்துவிட்டு அதற்கும் தந்தையைப் பாதுகாவலர் ஆக்காமல், தாயை மட்டும் பொறுப்பாக்குவது எந்தவிதத்திலும் நியாயமில்லாதது.
இந்தியாவில் திருமணம் என்ற அமைப்பு சமூகத்தில் ஆழமாக வேர்விட்டிருக்கும் சூழல், உலக அரங்கில் நம் நாட்டை உயர்த்திக் காட்டியிருக்கிறது. சமீப காலமாக, திருமண உறவே இல்லாமல் இணைசேர்வதும் இயல்பாக நடந்துவருகிறது. இந்தச் சூழ்நிலையில்தான் இதுபோன்ற உறவுகளில் பிறக்கும் குழந்தைகளுக்குச் சட்டம் தரும் பாதுகாப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது.
வளரிளம் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாகும்போதெல்லாம் அது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு தொடுக்கப்படும்போது, அந்த உறவு வன்முறையிலான உறவல்ல, அது வரன்முறைபடுத்தப்பட்ட உறவு என்ற வாதம் வைக்கப்படுகிறது. வயது 18-க்குக் குறைவாக உள்ள நிலையில் உடலுறவு கொள்ள பெண் சம்மதம் தெரிவித்திருந்தாலும், அதுவும் பாலியல் வன்முறையே என இந்திய தண்டனைச் சட்டம் சொல்கிறது. இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 375-ன் கீழ் பாதிக்கப்பட்டவர் பெண்ணாக இருந்தால் மட்டுமே எதிரி மீது குற்றவியல் வழக்கு தொடரமுடியும் என்கிறி நிலை, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் 2012-ன் படி மாற்றப்பட்டுள்ளது. பாலின வித்தியாசமின்றி 18 வயதுக்குக் குறைவான அனைத்துக் குழந்தைகளுக்கும் அந்தச் சட்டத்தில் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. பாலியல் தாக்குதல்/வன்முறை, பாலியல் துன்புறுத்தல்/சீண்டல், ஆபாசப் படமெடுக்கக் குழந்தைகளைப் பயன்படுத்துதல் போன்றவற்றையும் குற்றங்களாக இந்தச் சட்டம் முன்வைக்கிறது.
18 வயதுக்கு உட்பட்ட பெண்ணும், 21 வயதுக்குட்பட்ட ஆணும் செய்துகொள்ளும் திருமணம், குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டப்படி சட்டவிரோதமான திருமணம். தடுக்கப்பட வேண்டிய, தடுக்கப்படக்கூடிய திருமணம். ஆனால், அந்தத் திருமணம் நடந்து முடிந்த பிறகு, அது சட்ட விரோதம் என்றாலும் தானாகவே செல்லாததாகிவிடாது. சட்டம் அப்படிச் சொல்லவில்லை. சம்பந்தப்பட்ட இருவரில் ஒருவர் திருமணம் செல்லாது என்று நீதிமன்றத்தை அணுகி உத்தரவு பெற்றால், அதன் பிறகுதான் அது செல்லாத திருமணம் ஆகும் என்று சட்டம் சொல்கிறது. அதுவரையில் அந்தத் திருமணத்துக்கு மரியாதை உண்டு. அப்படியானால், அத்தகைய திருமணங்களின் மூலம் பிறக்கும் குழந்தைகளின் நிலை என்ன?
18 வயதுக்கு உட்பட்ட இரு நபர்களுக்கு இடையிலான சம்மதத்துடனான உடலுறவு பாக்ஸோ (POCSO) சட்டப்படி பாலியல் வன்முறை எனவும், குழந்தைத் திருமணச் சட்டப்படி பாலியல் வன்முறை எனவும், மற்றொரு சட்டப்படி (திருமணம் நிரூபிக்கப்பட்டால்) தாம்பத்திய உறவு எனவும் கருதப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில் 18 வயதுக்கு உட்பட்ட கர்ப்பிணிப் பெண்ணை / திருமணமான பெண்ணை அவருடைய கணவருடன் வாழ்வதற்கு எப்படி அனுமதிப்பது என்ற குழப்பம் அன்று இருந்தது. அதற்கான பதில், கடந்த அக்டோபர் 11-ம் தேதி உச்ச நீதிமன்றத்திலிருந்து வந்திருக்கிறது. மனைவியின் வயது 15-லிருந்து 18-க்கு உட்பட்டிருந்தால், அந்த மனைவியிடம் கணவன் கொள்ளும் உடலுறவு, பாலியல் வன்புணர்வாகக் கருதப்படமாட்டாது என்று இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 375 விதிவிலக்கு 2 சொல்கிறது. இந்தப் பிரிவிற்குச் சட்ட விளக்கம் அளித்த உச்ச நீதிமன்றம், பெண்ணுக்குத் திருமணம் ஆகியிருந்தாலும் ஆகவில்லையென்றாலும், சம்மதம் கொடுத்திருந்தாலும் கொடுக்காவிட்டாலும் 18 வயதுக்குட்பட்ட பெண்ணுடன் கொள்ளும் உடலுறவு, பாலியல் வன்புணர்ச்சி என்றே தீர்ப்பளித்துள்ளது. இதன் பின்தொடர்ச்சியாகக் குழந்தைத் திருமணங்கள் ஆரம்ப நிலையிலேயே செல்லாது என்று அறிவித்து சட்டங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும். கர்நாடக மாநிலம் இப்படியொரு சட்டத்தை இயற்றி முன்னோடியாகத் திகழ்கிறது.
திருமணம் ஆயிரம் காலத்துப் பயிர் என்பது தேய்வழக்கு. இன்றைய நுகர்வோர் கலாச்சாரம் திருமணத்தை இளம் பருவத்தினரின் மனத்தில் அன்றாடச் சடங்கு போன்ற ஒரு சம்பவமாக விதைத்திருக்கிறது. ஆயிரம் காலத்துப் பயிர் என்பது கறிவேப்பிலையை வளர்ப்பது போன்ற ஒரு காரியமாக மாறி அதிலும் முன்னேறி, வயிற்றில் உயிர் வளர்த்து அதைத் தொட்டில் குழந்தைத் திட்டத்தின்கீழ் தொலைத்துவிடும் உச்சம்வரை சென்றிருக்கிறது.
அந்த உச்சத்துக்குச் சென்ற உறவின் சொச்சங்கள் இளம் பருவத்தினரின் எதிர்காலத்துக்கு இமாலயத் தடைகளை ஏற்படுத்துகின்றன என்பதை அவர்கள் உணரவில்லை. அமெரிக்கா போன்ற நாடுகளில் வளரிளம் பருவத்தினரின் உளவியல் பிரச்சினைகள் முக்கியமாக எடுத்துக்கொள்ளப்பட்டு, பள்ளி அளவில் அவர்களுக்கு ஆலோசனை மையங்கள் அமைக்கப்பட்டு, ஆற்றுப்படுத்துதல் மூலம் அவர்களின் மனங்கள் மறுகட்டமைக்கப்படுகின்றன. சென்ற வாரம் சந்தித்த ஷீலாவும் அவரது இணையரும் வழக்கு நிலுவையில் இருந்தபோது வயது வரம்பைக் கடந்துவிட்டதால், அந்தக் குழந்தை கருவிலேயே காணாமல்போகும் அபாயத்திலிருந்து தப்பித்துவிட்டது. இதுபோன்ற நிகழ்வுகளில் பிறக்கும் பிற குழந்தைகளின் கதி?
திரும்பாத நிகழ்காலத்தைத் தீயவழிகளில் திசை திருப்பினால், விரும்பாத வாழ்க்கையும் அரும்பாத எதிர்காலமுமே அமையும் என்பதை இளைய சமுதாயம் உணரவேண்டும்.
(பாதைகள் விசாலமாகும்)
கட்டுரையாளர், முனைவர், நீதியரசர்
தொடர்புக்கு: judvimala@yahoo.com